search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்? தினத்தந்தி சிறப்பு பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில்

  தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்பதற்கு தினத்தந்தி சிறப்பு பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

  கேள்வி:- அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்ற கருத்து பொருளாதாரத்தில் நிலவுகிறது. அந்த வகையில், டாஸ்மாக், நீங்கள் தொடங்கப்போகும் கலைஞர் உணவகம், போக்குவரத்து போன்றவற்றை படித்த இளைஞர்கள் வசம் ஒப்படைக்கும் திட்டம் உண்டா?

  பதில்:- அரசுத்துறையில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதை நிச்சயம் என் தலைமையிலான அரசு நிறைவேற்றும். இளைஞர்களின் கனவாக திகழும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அனைத்து தேர்வாணையங்களிலும் வெளிப்படையான, நேர்மையான போட்டி தேர்வு முறை உறுதி செய்யப்படும். இது தவிர, ‘‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’’ என்ற 10 ஆண்டு தொலை நோக்கு திட்டத்திற்கான எனது வாக்குறுதிகளில் - ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு - இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும் என்று கூறியிருக்கிறேன். ஆகவே வேலைவாய்ப்பின்மையை நீக்கிட - தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் - அமையப்போகும் தி.மு.க. அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

  கேள்வி:- இப்போது வருமான வரித்துறை சோதனை மிகத்தீவிரமாக நடக்கிறதே. இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?.

  பதில்:- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் படுதோல்வி குறித்து பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட மத்திய உளவுத்துறை அறிக்கை அவரை பதற்றப்பட வைத்திருக்கிறது. அதற்காக பிரதமர் மதுரைக்கு வந்து - ஓரிரவு தங்கியிருந்து தி.மு.க.வின் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த உத்தரவிட்டிருப்பது மிகவும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம், மூர்க்கத்தனம். வருமான வரித்துறை என்பது தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியைப் போல் செயல்பட வேண்டும் என ஒரு நாட்டின் பிரதமரும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் விரும்புவது எதேச்சதிகாரத்தின் உச்சகட்டம்.

  அமித்ஷா

  கேள்வி:- தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் கமிஷன் அடுத்த சில நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.

  பதில்:- நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை - தேர்தல் காலத்திலாவது பா.ஜ.க.வின் பிடியிலிருந்து முதலில் வெளியே கொண்டு வர இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.சேஷன் போன்ற துணிச்சல் மிக்க நடுநிலைமை தவறாத தலைமை தேர்தல் ஆணையர்களைப் பார்த்தது நமது தேர்தல் ஆணையம். ஆனால் அப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் இன்றைக்கு தங்கள் முன்பு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நினைப்பது துரதிருஷ்டம்.

  கேள்வி:- தேர்தலில் உங்கள் வெற்றிக்கு எது அடிப்படையாக, எது பலமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?.

  பதில்:- கொள்கையளவில் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணியும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் பம்பரம் போல் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு டெல்லி பா.ஜ.க.- பாதுஷாக்களின் ஆட்சி நடக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு பேரழிவைத் தந்த பா.ஜ.க.வின் ஏவல் கேட்டு நடக்கும் எடுபிடி அ.தி.மு.க. ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும் என்ற உறுதியான முடிவை தமிழக மக்கள் எடுத்திருக்கிறார்கள். அந்த எழுச்சியின் ஏற்றத்தை பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் காண முடிகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசலாம்; உள்துறை மந்திரி அமித்ஷா பேசலாம்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசலாம். ஆனால் இன்றைக்கு தமிழக மக்கள் மு.க.ஸ்டாலின் என்ன பேசுகிறார். என்ன வாக்குறுதிகள் கொடுக்கிறார். என்ன திட்டங்களை நிறைவேற்றப் போகிறேன் என்று சொல்கிறார் என்பதைத்தான் ஆர்வமாக அலை அலையாகத் திரண்டு வந்து கேட்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றவனாக ஸ்டாலினாகிய நான் தெரிகிறேன். தி.மு.க. தெரிகிறது. மக்கள் என் மீதும், தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையும், அ.தி.மு.க.வை மிரட்டி தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க.வின் மீதுள்ள வெறுப்பும் எதிர்ப்பும் - தி.மு.க.வின் வெற்றிக்கு அடிப்படையாக அமையும்.

  கேள்வி:- கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறீர்கள். மக்கள் மனவோட்டத்தை அறிந்திருப்பீர்கள். உங்கள் கணிப்பில் தி.மு.க. எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

  பதில்:- முதலில் 200 என்றேன். இப்போது 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்கிறேன். இதுதான் என் கணிப்பு. எங்கு பார்த்தாலும் தி.மு.க. அலை பேரலையாக வீசுகிறது.

  கேள்வி:- நீங்கள் முதல்-அமைச்சரானால் கையெழுத்திடப்போகும் முதல் ஆணை என்னவாக இருக்கும்?

  பதில்:- ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ சுற்றுப்பயணத்தின்போது நான் வாங்கியுள்ள மனுக்களுக்கு முதல் 100 நாட்களில் தீர்வு காண்பதற்கான ஒரு ‘‘செயலாக்கத்துறையை’’ அமைப்பது முதல் கையெழுத்தாகவும் - முதல் அரசாணையாகவும் இருக்கும். தேர்தல் அறிக்கையில் உள்ள சில முத்தான திட்டங்களுக்கு - குறிப்பாக குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி, கொரோனா கால நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்குவது போன்றவையும் இருக்கும்.

  கேள்வி:- உதயநிதிக்கு இடம் வழங்கப்படுமா?

  பதில்:- தேர்தல் முடிவுகள் வெளிவரட்டும்; பிறகு பார்க்கலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×