search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    நெல்லையில் அமித்ஷா நாளை பிரசாரம்- பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

    நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நெல்லை வருகிறார்.
    நெல்லை:

    சட்டமன்ற தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

    நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை(சனிக்கிழமை) நெல்லை வருகிறார். இதனையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை காலை அமித்ஷா சென்னையில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை யில் எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரசார பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பாளை தொகுதி வேட்பாளர் ஜெரால்டு, நாங்குநேரி தொகுதி வேட்பாளர் தச்சை கணேசராஜா, அம்பை தொகுதி வேட்பாளர் இசக்கி சுப்பையா ஆகியோரை ஆதரித்து அமித்ஷா பேசுகிறார்.

    அமித்ஷா வருகையையொட்டி நெல்லையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அன்பு தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதிகள் 3 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கேமராக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் வரையிலும் துல்லியமாக அடையாளம் காணும் வகையில் அமைக்கப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    நெல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டு மதியம் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் அமித்ஷா ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    Next Story
    ×