search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெ.பி.நட்டா, திருவையாறு தொகுதி வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
    X
    ஜெ.பி.நட்டா, திருவையாறு தொகுதி வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.

    எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார்- ஜெ.பி.நட்டா பேச்சு

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியவை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார் என பூதலூர் பிரசார கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கூறினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த பூதலூரில் திருவையாறு சட்டசபை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி தமிழக மக்களால் முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டியவை. தி.மு.க.-காங்கிரஸ் கட்சியில் மன்னர்களின் ஆட்சி போல குடும்ப, வாரிசு அரசியலை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களாட்சியை கொண்டு வர வேண்டும்.

    தி.மு.க.வும், காங்கிரசும் எப்படிப்பட்டது என்றால் 2ஜி அலைக்கற்றையில் ஊழல் செய்தது. 3 ஜி, 4 ஜியை போல 2-வது தலைமுறை, 3-வது தலைமுறை, 4-வது தலைமுறை என குடும்ப அரசியல், குடும்ப ஊழலை வழி,வழியாக செய்து வருகின்றன. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத, அவமதிக்கக்கூடிய கூட்டணியாகும். தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமே‌‌ஷ் தடை விதித்தார்.

    ஆனால் பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற பிறகு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. சிறப்பு சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் கோடியை நரேந்திமோடி அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொடங்கி வைத்த வறுமை மற்றும் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள் தொடர அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு செய்த திட்டங்களை மோடி அரசு இந்தியா முழுவதும் செய்து வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர, அ.தி.மு.க. ஆட்சி 3-வது முறையாக தொடர ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×