search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் அடைந்தவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.
    X
    காயம் அடைந்தவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.

    நடுநிலையான டாக்டர்களை வைத்து உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்களை நடுநிலையான டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். #Thoothukudi #SterliteProtest #KamalHaasan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களில் 65 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பலியானவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பலியானவர்களின் உடல்களை வாங்க போவதில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு கூடியுள்ளனர். காயம் அடைந்தவர்களை இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து காரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். கமல்ஹாசன் வந்ததும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் அவரது காரை சூழ்ந்தனர். உடனே போலீசார் கமல்ஹாசனுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் காரை விட்டு இறங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார். காயம் அடைந்தவர்களை கமல்ஹாசன் பார்வையிட உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


    இதையடுத்து கமல்ஹாசனுடன் 5 பேர் மட்டும் சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட போலீசார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் கமல்ஹாசன் அரசு மருத்துவமனை வார்டுகளில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். காயம் அடைந்த ஒவ்வொருவரையும் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாதாரண கூலி வேலை செய்தவர்கள், ஆர்ப்பாட்டத்தை பார்க்க வந்தவர்கள் தான் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். இந்த உயிர்களுக்கு என்ன விலை வைத்தாலும் சரியாகாது. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டவர் யார்? இந்த பிரச்சனைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் தீர்வு.

    அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பலியானவர்களின் உடல்களை நடுநிலையான டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை இதோடு விட்டு விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட பொதுமக்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவு கிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #Thoothukudi #SterliteProtest #KamalHaasan

    Next Story
    ×