search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது: தீபா புதிய மனு
    X

    எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது: தீபா புதிய மனு

    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து இறுதி முடிவு எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் தீபா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

    அதனை மீட்பதற்காக பிரிந்திருந்த அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைந்தன. பொதுக்குழுவை கூட்டி இரட்டை இலை சின்னத்தை மீட்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரு அணியினரும் டெல்லி சென்று கூட்டாக மனுவும் அளித்துள்ளனர். இதற்கிடையே தினகரன் தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளனர்.

    தினகரன் அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்குள் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி, தினகரன் அணியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்று சூளுரைத்து களம் இறங்கி உள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக அவர் பேட்டியும் அளித்து வருகிறார்.


    தீபா அணி சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் தலைமையிலான குழுவினர் இதுவரை 5 முறை தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். சுமார் 5½ லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை தீபா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    வக்கீல் பசும்பொன் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகா உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பசும்பொன் பாண்டியன் கூறும்போது, தற்போதைய எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையத்தில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்.

    தீபா அணியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ள பிரமாண பத்திரங்களையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுக்க வேண்டும். எங்களை கலந்து ஆலோசித்து விட்டே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றார்.

    6-ந்தேதி இறுதி விசாரணை நடக்கும் நிலையில் இதுபற்றி நேரில் விளக்குவதற்காக தீபா 4-ந்தேதி டெல்லி செல்வதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×