search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரன் 5-ந்தேதி தலைமை கழகம் வருகிறார்: தங்க.தமிழ்ச்செல்வன் தகவல்
    X

    டி.டி.வி.தினகரன் 5-ந்தேதி தலைமை கழகம் வருகிறார்: தங்க.தமிழ்ச்செல்வன் தகவல்

    அ.தி.மு.க. இரு அணிகள் இணைவதற்கான கெடு முடிவடைவதால், டி.டி.வி.தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி தலைமைக் கழகத்துக்கு வந்து மீண்டும் கட்சி பணியில் தீவிரம் காட்டுவார் என்று தங்க.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்தார்.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். 41 நாட்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வந்ததும் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரம் காட்டுவேன் என்றார்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்காக 60 நாட்கள் காத்திருப்பேன். அதன் பிறகு தீவிரமாக கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார்.

    இதனால் அவர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு இன்னும் வராமல் இருக்கிறார். பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 37 பேர் தினகரனை சந்தித்து பேசி வருகின்றனர்.

    தினகரன் அறிவித்த 60 நாள் கெடு ஆகஸ்டு 5-ந்தேதியுடன் முடிவதால் அன்றைய தினத்தில் இருந்து கட்சிப் பணியில் தீவிரம் காட்ட தொடங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    இதுபற்றி ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்காக துணைப் பொதுச்செயலாளர் கால அவகாசம் கொடுத்து ஒதுங்கி இருந்தார். அவர் அறிவித்த 60 நாள் கெடு விரைவில் முடிய உள்ளது.

    எனவே ஆகஸ்டு 5-ந்தேதி தலைமைக் கழகத்துக்கு வந்து மீண்டும் கட்சி பணியில் தீவிரம் காட்டுவார். அது மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சித் தொண்டர்களை சந்திக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களிலும் பேசுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×