search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலை ராசியான தேதியில் நடத்த தினகரன் ரூ.10 கோடி லஞ்சம் - டெல்லி போலீஸ் பரபரப்பு தகவல்
    X

    ஆர்.கே.நகர் தேர்தலை ராசியான தேதியில் நடத்த தினகரன் ரூ.10 கோடி லஞ்சம் - டெல்லி போலீஸ் பரபரப்பு தகவல்

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை தனக்கு ராசியான 5-ந் தேதியில் நடத்த டிடிவி தினகரன், ரூ.10 கோடி வரை லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டதால் இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது.

    அந்த சின்னத்தை தங்கள் அணிக்கு பெறுவதற்காக ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினரும், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தபோது அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சுயேட்சைகளுக்குரிய சின்னங்களை பெற்று களம் இறங்கின. ஆனால் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் தேர்தல் நடைபெறும்போது இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட வேண்டும் என்பதில் இரு அணிகளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து டி.டி.வி.தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் டி.டி.வி.தினகரனும், மல்லிகார் ஜுனாவும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்காக தினகரனின் குரல் மாதிரியை பதிவு செய்ய டெல்லி போலீசார் மனு செய்தனர்.

    ஆனால் குரல் மாதிரி சோதனைக்கு ஒத்துழைக்க இயலாது என்று தினகரன் கூறினார். இதையடுத்து அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.



    இதற்கிடையே டெல்லி போலீசார் நேற்று அதிரடியாக டி.டி.வி.தினகரன் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தனக்கு ராசியான 5-ந்தேதியில் நடத்த டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் மேலும் கூறுகையில், இடைத்தரகர் சுகேஷ் மூலம் இதற்கான பேரம் நடந்ததாக தெரிவித்துள்ளனர். எனவே டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் இந்த புதிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    அப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டால் டி.டி.வி. தினகரனை டெல்லி போலீசார் மீண்டும் ஒரு தடவை கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

    டி.டி.வி.தினகரன் மீதான புதிய குற்றச்சாட்டால் அ.தி.மு.க. அம்மா அணியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ஆனால் டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் மேலும் ஒரு அஸ்திரத்தை வீசி உள்ளனர். அதாவது தனக்கு ராசியான 5-ந்தேதியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த லஞ்சம் கொடுக்க தயாரான டி.டி.வி.தினகரன் அதற்காக ரூ.10 கோடி வரை பேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டி.டி.வி.தினகரன் ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்க இடைத்தரகர் சுகேசுடன் பேசிய தொலைபேசி உரையாடல் தங்கள் வசம் இருப்பதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

    தினகரன் குரல் மாதிரி சோதனைக்கு ஒத்துழைத்தால் இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது 29-ந்தேதி வரை திகார் ஜெயிலில் இருக்க வேண்டியது இருக்குமா? என்பது நாளை தெரிந்து விடும்.
    Next Story
    ×