என் மலர்
தெலுங்கானா
- ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
- போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது.
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்பட 5 பேரை ஐதராபாத் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 2.6 கிலோ கோகோயின் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதை அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ் குழு போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தது. இந்த சம்பவத்தில், அமன் மற்றும் மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 30 கடத்தல் வாடிக்கையாளர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதன் மற்றும் நிகில் தமன் ஆகிய 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராஜேந்திர நகர் மண்டலத்தின் சைபராபாத் காவல்துறையின் டிசிபி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், " நுகர்வோர்கள் ஐந்து பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். அவர்ளுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அனைவரும் போதைப்பொருள் எடுத்துக்கொண்டது உறுதியானது.
பிறகு, அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இப்போது அவர்களை விரிவான மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புகிறோம்" என்றார்.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கூட அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது.
- ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனமான கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி ஜூலை 10 தேதி மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.
ரவிச்சந்திராவின் வீட்டிற்கு நடு இரவில் வந்த மர்மநபர்கள் அவரையும் அவரது தாயாரையும் தாக்கியுள்ளனர். பின்னர் ரவிச்சந்திராவை அந்த கும்பல் கடத்தி சென்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 83 மடிக்கணினிகளையும் அந்த கும்பல் திருடி சென்றுள்ளது.
இது தொடர்பாக ரவிசந்திராவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரவிச்சந்திராவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், 4 நாட்களுக்கு பின்பு போலீசார் ரவிச்சந்திராவை ஸ்ரீசைலம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் கண்டுபிடித்து மீட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில், ரவிச்சந்திரா சி.இ.ஓ.வாக உள்ள கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 5 ஊழியர்களும் அடங்கும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 84 மடிக்கணினிகள், 6 கார்கள், 5 தொலைப்பேசிகள் மற்றும் 3 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நிதி சிக்கல் காரணமாக அவரது கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1200 ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த சில ஊழியர்கள் தான் ரவிச்சந்திராவை திட்டம் போட்டு கடத்தியுள்ளனர் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- நிர்வாகிகள் படத்தை தொடர்ந்து பார்க்க விருப்பம் இல்லை என்றால் தயவு செய்து வெளியேறுங்கள் என கூறினர்.
- ரசிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பஞ்சா குட்டாவில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 'கல்கி 2898' சினிமா திரையிடப்பட்டுள்ளது. நேற்று தியேட்டரில் ஏராளமான ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டையின் காரணமாக தியேட்டருக்குள் அருவி போல மழை பெய்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆவேசமாக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சினிமா தியேட்டரில் தண்ணீர் கசிவு மூலம் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். நிர்வாகிகள் படத்தை தொடர்ந்து பார்க்க விருப்பம் இல்லை என்றால் தயவு செய்து வெளியேறுங்கள் என கூறினர்.
இதனால் ரசிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூரில் உள்ள ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லட்சுமி காந்த் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோவில், விடுதியில் உள்ள கேன்டினில் சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தின் உள்ளே எலி ஒன்று நீந்துவதைக் காணமுடிகிறது.
ஜேஎன்டியூஎச் சுல்தான்பூரில் "சட்னி"யில் எலி. பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சுமார் 75K பார்வைகளை கடந்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், "ஜேஎன்டியூ சுல்தான்பூரில் இந்த நிலை புதிதல்ல. 2016 முதல் 2020 வரையில் தரமான உணவை எங்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் மெஸ் நிர்வாகத்திடம் வாதிட வேண்டியிருந்தது. இன்றும் இது தொடர்வதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது" என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்ஹா உத்தரவிட்டுள்ளார்.
- ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
- மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.
ஐதராபாத்:
பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.
ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.
பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முஷீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சில் பகதூர் புரா பகுதிக்கு சென்றார். பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்வேதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் கதறி துடித்தார்.
இதனை அடுத்து சாலையோரம் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பெண் கண்டக்டர் சரோஜா மற்றும் பயணிகள் ஸ்வேதாவுக்கு பஸ்சிலேயே பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை கேள்விப்பட்டதும் கீழே இருந்து இறங்கி நின்ற ஆண் பயணிகள் மற்றும் பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் பிரசவம் பார்த்த பெண் கண்டக்டர் சரோஜாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தாய் மற்றும் குழந்தையை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. பஸ் கண்டக்டருக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பஸ்சில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கான பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
- ஆசிரியர் சீனிவாஸ் தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார்.
- கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.
ஆசிரியப்பணி அறப்பணி... அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள், நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள்.
ஒரு மாணவனோ, மாணவியோ தங்களது பெற்றோர்களைவிட அதிக நேரம் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே அதிகம் உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
பல ஆசிரியர்கள் தங்கள் பணியை மாணவர்களுக்காக அர்ப்பணித்து, மாணவர்களிடம் மட்டுமல்ல அந்த பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்று விடுகிறார்கள்.
குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள், வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுப்பதையும் தாண்டி, ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
இதனால் அவர்கள் அந்த பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும்போதோ, பணி ஓய்வு பெற்று செல்லும்போதோ மாணவர்கள் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல முறை நடந்து உள்ளது.
அதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் பொனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜே.சீனிவாஸ் (வயது53).
இவர் அந்த பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலனில் அதிக கவனம் எடுத்து பணியாற்றினார். அவர் பணியில் சேர்ந்தபோது அந்த பள்ளியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்தனர்.
தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.
தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார். மாணவர்களும் அவரை தங்களின் பாசத்துக்குரியவராகவே பார்த்தனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியர் சீனிவாஸ் அக்கபெல்லிகுடாவில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் பொனகல் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த அந்த பிஞ்சு மாணவர்கள் மிகவும் தவித்துபோய்விட்டனர்.
அவரை பிரிய மனமில்லாமல் அழுதனர். மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அதற்கெல்லாம் வழியில்லை. இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.
ஆசிரியர் சீனிவாசின் பிரிவால் ஏங்கிய மாணவர்களை தேற்ற முடியாமல் இருந்த பெற்றோர்கள் ஒரு முடிவு செய்தனர்.
ஆம்... அந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த 250 மாணவர்களில் 133 பேர், அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றுக்கொண்டு, 3 கி.மீ. தொலைவில் அக்கபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில மக்களில் பலர், இப்படியும் ஒரு ஆசிரியரா... நமக்கு கிடைக்கவில்லையே என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
- படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 'சூப்பர்ஸ்டார் -லோகி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெரியரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று [ஜூலை 5] தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுவந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுமார் 35 நாட்கள் நடக்க உள்ள படப்பிடிப்பின் ஆரம்பக்கட்ட பணிகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

'சூப்பர்ஸ்டார் - லோக்கி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிஆர்எஸ் கட்சி எம்எல்சி-க்கள் ஆறு பேர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
- இதற்கு முன்னதாக ஆறு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு இரண்டு முறை சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார். 3-வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவேன் என சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே பிஆர்எஸ் கட்சியில் இருந்து முக்கியமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
தேர்தல் முடிந்த பிறகு ஆறு எம்.எல்.ஏ.-க்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு ஆறு எம்.எல்.சி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ரேவந்த் ரெட்டி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ கே.டி. ராமராவ் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.
இது தொடர்பாக பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ. கே.டி. ராமராவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறியிருப்பவதாவது:-
பிஆர்எஸ் எம்.பி. கேசவ ராவ் ராஜினாமா செய்தபின், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதை நான் வரவேற்கிறேன்.
கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் சார்பில் லோக்சபாவில் போட்டியிட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ பற்றி?
காங்கிரஸ் கட்சிக்கு மாறிய ஆறு பிஆர்எஸ் எம்.எல்.ஏ.க்கள் பற்றி?
ராகுல் காந்தி, இப்படியா நீங்கள் அரசியலமைப்பை நிலைநாட்டப் போகிறீர்கள்?
பிஆர்எஸ் எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க உங்களால் முடியவில்லை என்றால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 10 திருத்தங்களைச் செய்ய நீங்கள் உறுதி கூறியதை நாடு எப்படி நம்பும்?
- வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும்.
- பிடித்த ஆசிரியர் மாறி சென்றால் மாணவர்களிடம் வருத்தம் இருக்கும்.
ஐதராபாத், ஜூலை.5-
பள்ளியில் கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டால் மாணவர்கள் 'ஹையா... இனி ஜாலிதான்...' என்று உற்சாகமாக கொண்டாடு வார்கள்.
ஆனால் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட தும் நாங்களும் அவருடன் அந்த பள்ளிக்கு செல்கி றோம் என்று புறப்பட்ட 133 மாணவர்களை பார்த்ததும் வாத்தியார்னா இப்படித் தான் இருக்கணும் என்று ஒட்டுமொத்த கல்வித் துறையையும் கர்வப்பட வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியில் மாவட்டம் பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்கள் ஸ்ரீனிவாசன் (53).
அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு ஸ்ரீனிவாஸ் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல. பெற்றோர், பாதுகாவலர், குழந்தைகளின் மனம் கவர்ந்த ஆசிரியர் என்று பல முகங்கள் கொண்டவர். அரசு பள்ளிதானே... கட மைக்கு வேலை செய்தால் போதும். மாத கடைசியில் எப்படியும் சம்பளம் வந்து விடப் போகிறது என்று நினைக்காதவர்.
மாணவர்கள் படிப்பு முதல் ஒழுக்கம் வரை கடைபிடிப்பதில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். அதே நேரம் ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு உறவினர் போல் பரிவுகாட்டி பழகுவார்.
ஒரு மாணவர் ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் உடனடியாக பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரிப்பார். ஏதாவது காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருந் தால் நேரடியாக வீடுகளுக்கு சென்று பேசி பிரச்சினை களை தீர்த்து பள்ளிக்கு வரவழைப்பார்.
தினமும் ஆசிரியர் ஸ்ரீனி வாசை பார்த்தால் மாணவர் களுக்கு சந்தோசம். அதே போல்தான் ஸ்ரீனிவாசுக்கும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யப் பட்டார். தற்போது வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பள்ளி உள்ளது.
தங்கள் ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டதும் மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறிவிட்டனர். நீங்கள் போக வேண்டாம் சார் என்று கெஞ்சினார்கள். இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
இடமாற்றத்தை எதுவும் செய்ய முடியாது என்பதை மாணவர்கள் 133 பேரும் உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆசிரியர் இடம் மாற்றம் செய்யப்பட்ட அதே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்கள்.
மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் மாறி சென்றால் மாணவர்களிடம் வருத்தம் இருக்கும். சில நாட்களில் அதுவும் சரியாகி விடும். ஆனால் ஆசிரியர் மாறிச் சென்ற அதே பள்ளியில் இப்படி ஒட்டுமொத்த மாணவர்களும் விலகி அந்த ஆசிரியருடன் சென்று இருப்பது நாங்கள் எங்குமே இதுவரை கேள்விப்பட வில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரி யாதையா தெரிவித்தார்.
வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும் என்று அவர் பெருமையுடன் கூறினார்.
ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் மிகவும் அடக்கத்துடன் கூறியதாவது:-
பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக் கையை காட்டுகிறது. என திறமைக்கு ஏற்ப கற்பிப்பதை கடமையாக செய்தேன். அவர்கள் என்னை விரும்பி னார்கள். அரசு பள்ளிகளும் நல்ல தரமாக உள்ளன. எனவே பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
- தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
- கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் விடுதலை செய்ய தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
இந்த பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளி ஜெயிலில் இருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர். இந்த கைதிகளில் 205 பேர் ஆயுள் தண்டனை 8 பேர் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை
- இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா மாவட்டம், வெமுலவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசு மற்றும் எருதுக்களை தானமாக வழங்கி வருகின்றனர்.
தானமாக பெறும் மாடுகளை வளர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோசாலை அமைக்கப்பட்டது. முதலில் 300 மாடுகளை பராமரிக்கும் அளவு கொட்டகை அமைத்தனர்.
பக்தர்கள் கோவிலுக்கு தானமாக வழங்கும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தற்போது 2500-க்கும் மேற்பட்ட பசு மற்றும் மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை.
தற்போது உள்ள கோசாலையில் 450 முதல் 500 மாடுகள் வரை மட்டுமே பராமரிக்க வசதிகள் உள்ளது.
எனவே மீதமுள்ள மாடுகளை, ஏழை விவசாயிகள் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் வழங்கி வருகின்றனர். இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதற்காக கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கோவில் செயல் அலுவலர், உதவி கோட்ட அலுவலர், வேளாண்மை அலுவலர், நகராட்சி ஆணையர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களின் பரிந்துரையின் பேரில் மாடுகளை இலவசமாக வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.






