என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார்.
- ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார். மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும், திரைத்துறை உள்பட அனைத்து துறைகளில் இருந்தும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோவை பீளமேட்டில் இன்று காலை புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். மதியம், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் இன்று மாலை சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கு துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
பின்னர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அவர் வழிபட்டார்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
நாடு முழுவதும் விரதமிருந்து இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும் மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதிலும் விரதம் இருந்து, இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும், 'மகா சிவராத்திரி' தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் நல்வழி பிறந்து, வெற்றிகள் நம் வசமாகி, எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும்.
- பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:-
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் மத்திய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
- வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது. தொகுதி விகிதாச்சாரமா ? மக்கள் தொகை விகிதாச்சாரமா ? குழப்பமாக உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள பதில் குழப்பமாக உள்ளது. அவர் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி. எங்களுடைய மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துவிட்டு வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் கொடுத்தாலும் அநீதிதான்.
மத்திய அரசு கூறியதை ஏற்று மக்கள் தொகை எண்ணிக்கையை குறைத்த தமிழ்நாட்டிற்கு தரும் தண்டனையா இது. மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு அதிக எம்பி சீட்டுகள் கிடைக்கும்.
நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களுக்கு மட்டுமே அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் வளர்ச்சிப் பணிகளில் முன்னேறி இருக்கிறோம். பல்துறைகளில் தமிழ்நாடு நம்பர் இடத்தில் இருக்கிறது. இப்படி முன்னேறி இருக்கும்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற மார்ச் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி, தொடர்ந்து காலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் (சிவன் கோவில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வருகிற 10-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் வருகிறார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேருகிறார்.
11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 9-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12-ந்தேதி (புதன்கிழமை) 10-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று விநாயகர், சுவாமி, அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரதவீதியில் வலம் வந்து நிலையம் சேர்தல் நடக்கிறது.
மறுநாள் (13-ந்தேதி) 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
14-ந்தேதி 12-ம் திருவிழா அன்று மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்.
- சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும்.
தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது:-
பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். நிறைய பத்திரிகையாளர் சந்திப்புகளை கடந்து வந்திருக்கிறேன். அங்கிருந்து பார்த்து கைத்தட்டி இருக்கிறேன்.
அந்த வகையில், இங்கிருந்து பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் அனைவருக்கும் வணக்கம். ஊடகம் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல், நடிகர், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு முதலில் வெளிக்கொண்டு வரும்.
அந்த வகையில், முதலில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன்.
நான் நம்பாத விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு படமாக எடுத்திருக்கிறேன்
உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.
அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள்.
அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. குகன் சார், பிரபாகரன் சார் நன்றி. நோயாளியாக வந்தீர்கள், தற்போது தயாரிப்பாளராக மாறியிருக்கிறீர்கள்.
டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கிய படி பார்த்திருப்பீர்கள். உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும். இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தவர் ஒலி வடிவமைப்பாளர் கெவின், ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார். இந்தப் படத்திற்காக ஒலி வடிவமைப்பாளரை தேடுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த வகையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பரிந்துரையில் எங்களுக்கு கிடைத்தவர் கெவின்.
புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.
- விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர் என்று பொய் பேசுவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-
ஒன்றிய ரெயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.
கும்பமேளாவிற்கு ரெயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரெயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.
தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரெயில்வே அமைச்சகம்.
நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
- ஐ.பி.எல்.ல் தோனி தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பைகளை வென்றது.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி ஆவார். 2 உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக் கொடுத்தார்.
ஐ.பி.எல்.லில் அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பையை வென்றது.
இந்நிலையில், மார்ச் 22ம் தேதி 2025 ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
மார்ச் 23ம் தேதி சென்னை- மும்பை அணிகள் மோத உள்ள நிலையில் பயிற்சியை தொடங்குவதற்காக தோனி சென்னை வந்துள்ளார்.
இதனால், தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
- பாமகவை பொறுத்தவரையில் இது ஒரு தவறான போக்கு.
- எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவுடைய கொள்கை நம்முடைய மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்ற கொள்கை அதற்கேற்ப நடவடிக்கைகள் தென் மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கடந்த 30, 40 ஆண்டு காலமாக அந்த டோட்டல் ஃபெர்ட்டிலிட்டி ரேட்(டிஎப்ஆர்) இந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் டிஆர்எப் குறைந்துள்ளது. இதுவே நமக்கு பாதகமாக இருக்கக்கூடாது.
இதுதொடர்பாக முதலமைச்சர் வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட இருக்கின்றார். அதில் பாமக சார்பில் கலந்துக் கொண்டு கருத்துகளை தெரிவிக்கும்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால்தான் நாங்கள் கல்வி துறையிலேயே தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவோம் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாமகவை பொறுத்தவரையில் இது ஒரு தவறான போக்கு. எந்த மாநிலத்திற்கும் மத்திய கொள்கையை திணிக்க கூடாது.
குறிப்பாக கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கிறது. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது ஏற்பதும் ஏற்காததும் மாநில அரசின் உரிமை.
நீங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாங்கள் நிதி கொடுக்க மாட்டோம் என்பது தவறான உதாரணம். அதை வலியுறுத்த கூடாது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைகள் கடந்த 60 ஆண்டு காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இது தொடர வேண்டும்.
எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. எல்லாம் மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்த மொழியை கற்று தான் ஆக வேண்டும் என்று சொல்வது தவறு.
தமிழ்நாட்டிற்கென கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையை மாற்ற சொல்வது மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2004-2014 வரை காங்கிரஸ் மத்தியில் ஆளும்போது தமிழகத்திற்கு 1,52,901 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக தொண்டர்களில் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
* கோவை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
* உலகின் தொன்மையான தமிழ் மொழியில் தன்னால் பேச முடியவில்லை என்ற வர்த்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை தொடங்குகிறேன்.
* பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகவும் அற்புதமான பட்ஜெட்டை தந்திருக்கிறார்.
* 2025-ம் ஆண்டு டெல்லி வெற்றியோடு தொடங்கியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சியோடுதான் தொடங்க போகிறது.
* தமிழ்நாட்டில் தேச விரோத, மக்கள் விரோத ஆட்சியான திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது.
* 2026-ல் தமிழகத்தில் என்.டி.ஏ. ஆட்சி உருவாவது உறுதி.... உறுதி...
* வகுப்புவாதம், பிரிவினை வாதம் சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
* பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி தனித்துவமான முத்திரையை பதித்து கொண்டிருக்கிறார்.
* தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களில் மொழி வளம், கலாசாரம் உள்ளிட்டவைகளை போற்றக் கூடிய மபெரும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
* தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. பெண்கள், சகோதரிகள் பாதுகாப்போடு சென்று வரும் சூழ்நிலை இல்லாதது மிகவும் மோசமான முன்உதாரணம்.
* வேங்கைவயலில் ஒரு சம்பவம் நடைபெற்று 700 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது.
* கள்ளச்சாராயம் புரையோடி கிடக்கிறது. கள்ளக்சாரயம் காய்ச்சுபவர்களை பிடிக்காமல், கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என புகார் அளிக்கும் கல்லூரி மாணவர்கள் திடீரென கொள்ளப்படுகிறார்கள்.
* இப்போது தேச விரோத சிந்தனை மட்டும்தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது.
* கனிம வளக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் உதவியுடன் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.
* ஊழலில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தலைவர் வேலைவாங்கி தருவதாக பணம் பெற்று பெரும் சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு தலைவர் பணமோசடி வழக்கு மற்றும் செம்மணல் வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார்.
* யார் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ, யாரெல்லாம் ஊழல் செய்வதில் உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களை தேடித்தேடித்தான் திமுக உறுப்பினர்களாக சேர்க்கும்போல் இருக்கிறது.
* ஊழல்வாதிகளால் தமிழ்நாடு மிகவும் துயரம் அடைந்திருக்கிறது. துன்பத்தில் இருக்கிறது. இது வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது புதல்வர் புதுபுது பிரச்சனையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
* தற்போது நீங்கள் தொகுதி மறுசீரமைப்பு என்பதை ஒரு புதிய பிரச்சனையாக உருவாக்குகிறீர்கள். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தென்மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பாராளுமன்ற இடங்கள் குறையாது என்பதை தெளிவாக சொல்லி விட்டார். இந்த விசயத்தில் பொய் சொல்லி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் புள்ளி விவரத்துடன் சொல்கிறேன். இழப்பு ஏற்படும் எனச் சொல்வது கண்டிக்கத்தக்கது. நான் உண்மையை உரைத்திருக்கிறேன். எனக்கு பதில் சொல்ல் கடமைப்பட்டுள்ளீர்கள்.
* 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியமாக 1,52,901 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. மோடி தலைமையிலான என்டிஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5,08,337 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.
* கட்டுமான பணிகளுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்களே, மத்திய அரசு நிதி தரவில்லை என மக்களிடம் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியில் இருக்கும்போது தமிழக மக்களுக்கு உண்மையான துரோகம் செய்துள்ளீர்கள். மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான ஏராளமாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டது என முதலமைச்சர் கூறுவதில் உண்மையில்லை
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும்.
- புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தனக்கு அரசியல் புரிதல் இல்லை என்பதை அவரே வெளிகாட்டிக் கொள்கிறார். 1938ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி போய் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனேயே இந்தி மொழி திணிக்கப்பட்டது.
அன்றைக்கே தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிடக் கட்சி தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து போராட்டம் நடத்தி மக்களிடம் கருத்தை பரப்பினார்கள். இதெல்லாம் அவருக்கு தெரியாது.
1952ல் மீண்டும் இங்கே முதல் தேர்தலில் ராஜாஜி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழி கற்பிக்கப்படும் என்று கூறியபோது அதையும் எதிர்த்து போராடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
1957ல் இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட நேரத்தில் ஈவிகே சம்பத் அவர்கள் நேருவிடம் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று பேசினார். அப்போது நேரு உத்தரவாதமாக இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என்று ஒரு உத்தரவாதம் அளித்தார்.
அனுபவமின்னை. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும். அது அவருடைய அறியாமை.
திமுக என்ன செய்திருக்கிறது. திராவிடக் கழகம் தமிழை காப்பாற்ற என்ன செய்திருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய போராட்டம் நடத்தி இருக்கிறது ? எவ்வளவு உயிர்களை பலி கொடுத்திருக்கிறது ?என்பதெல்லாம் விஜய்க்கு தெரியாது.
புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள். அவர்கள் மீது குறை சொல்வார்கள்.
அந்த குறையில் எதுவும் நியாயம் இருக்கிறதா ? என்று அவர்களுக்கு சிந்தித்து பார்ப்பதற்கு கூட தெரியாது. இந்தி மொழி பிரச்சினையிலும் அப்படிதான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 04-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24- 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 -34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 28-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






