என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
- தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.
நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.
கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது.
- பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது.
தாம்பரம்:
தாம்பரத்தில் மேற்கு, கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. முடிச்சூர், பெருங்களத்தூர், பல்லாவரம், வேளச்சேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
புதுபெருங்களத்தூரில் இருந்து முடிச்சூர் சாலை மற்றும் வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மேம்பாலத்தின் மேல் உள்ள பாதையில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பாதையில் மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து அதில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்தனர்.
இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் இன்று காலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.
- உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
- உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டரின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம்.ராஜேந்திரன் (வயது 52) என்பவர் கடந்த 5-ந்தேதி அன்று பணியின் நிமித்தமாக மண்ணுக்குமுண்டான் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்போது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள சித்தமல்லி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மகாவீா் ஜெயந்தி தினமான நாளை (10-ந் தேதி), வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கட்கிழமை (14-ந் தேதி) ஆகிய தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, இன்றும் (புதன்கிழமை), வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 190 பஸ்களும், நாளை மறுநாள் 525 பஸ்களும், சனிக்கிழமை 380 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 50 பஸ்களும், வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், சனிக்கிழமை 95 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது போல, மாதவரத்தில் இருந்து இன்று 20 சிறப்பு பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, திங்கட்கிழமை (14-ந்தேதி) பொதுமக்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
- ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள்.
இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.
அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018 -ம் ஆண்டு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
இதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்த அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் தங்களது வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இதனால் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.
இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நேற்று இரவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
- குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.15 மணிஅளவில் குமரி அனந்தன் காலமானார்.
இதையடுத்து குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலில் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு உள்ளது. குமரி அனந்தன் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கிறது. அவரது மகன் கீதன் இறுதி சடங்குகளை செய்கிறார். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
குமரி அனந்தன் உடலுக்கு இன்று காலை முதலே தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே, குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குமரி அனந்தன் உடலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
- நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
- இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக.
திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்க விரும்புகிறேன்.
நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?
நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்?
நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 - 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 - 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?
நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்?
ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, நமது பாரதப் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா?
நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.
- குமரி அனந்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாலிகிராமத்தில் அமைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
- நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர்.
- மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று முன்தினம் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.
நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். மேலும் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.
- கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 1-ந்தேதி ரூ.68 ஆயிரம் எனும் புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், சவரன் ரூ.68 ஆயிரத்து 400-க்கும் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.
இதன் பிறகு, தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 4-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. இது, அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.8 ஆயிரத்து 225-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.65 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800
07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280
06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480
05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480
04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-04-2025- ஒரு கிராம் ரூ.102
07-04-2025- ஒரு கிராம் ரூ.103
06-04-2025- ஒரு கிராம் ரூ.103
05-04-2025- ஒரு கிராம் ரூ.103
04-04-2025- ஒரு கிராம் ரூ.108
- குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழே தன் மூச்செனத் தமிழ் திருப்பணி செய்த குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்;
- மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.
எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என கூறியுள்ளார்.






