என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
- பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கார் கதவை திறந்தபோது ஏற்பட்ட விபத்தில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
Indirect Taxes and Customs என்ற பெயர் பலகையோடு வந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போலீசார் உடலை கைப்பற்றினர்.
பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமயபுரம் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 3-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.
- போலீசார் கார்த்திகேயனை வீட்டின் வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
- அபிராமபுரம் போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னை, அபிராமபுரம், கே.வி.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது55). இவர் மீது தாழம்பூர் போலீஸ்நிலையத்தில் நிலமோசடி குற்றச்சாட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் தாழம்பூர் போலீசார் கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் போலீசார் கார்த்திகேயனை வீட்டின் வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென கார்த்திகேயன் வீட்டு வாசலில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்மன் அளிக்க வந்த போலீசார் கார்த்திகேயனை தாக்கியதால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அபிராமபுரம் போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- ரூ.80 லட்சம் வரையிலான கோவில் நிதி, நிபந்தனைகளுக்கு மாறாக கும்பாபிஷேகத்திற்காக எடுக்கப்பட்டு உள்ளது.
- எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரை:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பா குருக்கள், சங்கர் குருக்கள் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2021-ம் ஆண்டில் திருநாகேஸ்வரம் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக எந்தவித ரசீதும் வழங்காமல் நன்கொடை வசூலிக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பியதால் எங்களை இடமாற்றம் செய்து உள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனவே இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், மேற்கண்ட கோவில் கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களிடம் எந்த ரசீதுகளும் இல்லாமல், எந்த கணக்குகளும் இல்லாமல் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் 24.10.2021 அன்று நடத்தப்பட்டது. சாமானிய மக்களும் பக்தர்களும் இந்தப் பிரச்சனையை 2021-ம் ஆண்டிலேயே எழுப்பியுள்ளனர். இந்த முறைகேடு சம்பந்தமாக இந்த நீதிமன்றம் 2022-ம் ஆண்டில் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது.
மேலும் 2022-ம் ஆண்டில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது தணிக்கை அறிக்கையிலும் உறுதியாகி உள்ளது. நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்யவும், பணிகளை மேற்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு அனுமதிக்கப் பட்டு உள்ளது. கும்பாபிஷேக பணிகளை எந்த உத்தரவும் இல்லாமல் செய்துள்ளனர்.
ரூ.80 லட்சம் வரையிலான கோவில் நிதி, நிபந்தனைகளுக்கு மாறாக கும்பாபிஷேகத்திற்காக எடுக்கப்பட்டு உள்ளது. இதனை அறநிலையத்துறை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளவே இல்லை. இந்த பிரச்சனையை மறைக்கும் நோக்கில் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம் உண்மையைக் கண்டறிய இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.
எனவே இந்த கோவில் கும்பாபிஷேக நிதி முறைகேடு புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரித்து முறைகேடுக்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி. மத்திய மண்டலத்தின் காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, இந்த விசாரணையை கண்காணித்து, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட் டுள்ளன என்பதை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை இந்த கோர்ட்டு முறையாக கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களும் நட்சத்திர ஓட்டலிலேயே தங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
- சந்தோஷ் குமாருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிலையில் லால்குடி அருகே கே வி பேட்டை-செங்கரையூர் நடுப் பகுதியை சேர்ந்த பாண்டி துரை, நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன் அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு மது போதையில் சென்று உள்ளனர்.
பின்னர் கோவிலில் அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் ஆகிய 3 பேரும் அந்தக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.
இதில் போதை தலைக்கேறிய பாண்டி துரை தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கே விட்டு விட்டு நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
வீரமணி, உடனே அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், ஆனந்த், ஜெகன் முன்று பேரிடமும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர சொல்லி உள்ளார். வாகனம் அன்பில் பகுதியில் இருந்து உள்ளது. அதனை எடுத்துக் கொண்டு பாண்டிதுரை வீட்டிற்கு கொடுப்பதற்காக சென்றனர்.
அப்போது போதையில் இருந்த பாண்டி, சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இதில் ஆத்திரமடைந்த பாண்டித்துரை விலங்குகளை வேட்டை ஆடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் சந்தோஷ்குமார் வயிற்றில் ஏர்கன் துப்பாக்கியின் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சந்தோஷ் குமார் மயங்கி சுருண்டு விழுந்தார்.
உடனே அவரை அவரது நண்பர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மது போதையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது சந்தோஷ் குமாருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் பாண்டித்துரை வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். பின்னர் தலைமறைவாக உள்ள பாண்டித்துரையை தேடி வருகின்றனர்.
- தமிழ்நாடு 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளது.
- அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், டி.சி.எல். டெக்னாலஜீஸ், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற்பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவான்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
- குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் குமரி அனந்தன் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
- பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது.
- இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக பதின்ம வயது குழந்தைகளும் கணக்கு தொடங்கி நிர்வகிப்பது அதிகரித்து வருகிறது. இதையடுத்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் தற்போது இந்த புதுப்பிப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இனி நேரலை ஒளிபரப்புகளை தொடங்க முடியாது.
அதுமட்டுமின்றி, நேரடியாக வரும் தகவல்களில் இடம்பெற்றிருக்கும் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்கவும் அவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவைப்படும்.
பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது. இதன்மூலம் அவர்கள் ஆபாச படங்களை பார்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக சமூக ஊடகங்களின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலைகளை குறைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மெட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் பதின்ம வயதினர் கணக்குகள் தொடங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் உலக அளவில் சுமார் 5.4 கோடி பேர், பதின்ம வயதினருக்கான கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் முதல்கட்டமாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
குழந்தைகளுக்காக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த பாதுகாப்பு அம்சங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதில் பதின்ம வயது கணக்குகளை இயல்பாகவே தனிப்பட்டதாக அமைத்தல், வெளி நபர்களிடம் இருந்து வரும் தனிப்பட்ட தகவல்களை தடுத்தல், வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், 60 நிமிடங்களுக்கு பிறகு செயலியை விட்டு வெளியேறுவதற்கான நினைவூட்டல்கள் மற்றும் தூங்கும் நேரத்தில் தானாக வரும் அறிவிப்புகளை நிறுத்துதல் ஆகியவையும் அடங்கும்.
இந்த பதின்ம வயதினர் கணக்குகளுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் முகநூல் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்ற மெட்டா தளங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார்.
- பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:
சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்தவர் ஜான்தேவராஜ் (வயது33). பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
ஜான்தேவராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு கடன் வாங்க உதவினார். அப்போது அவர் சாட்சி கையெழுத்து போட்டதாக தெரிகிறது. இதற்கிடையே கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார். மேலும் இதற்காக வேறு நபர்களிடம் கடன் வாங்கியும் நண்பர் வாங்கிய கடனை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் பிரச்சனையில் ஜான்தேவராஜ் சிக்கினார். அவரால் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. அவரிடம் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த ஜான் தேவராஜ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத போது வெளியில் சென்று இருந்த தனது மனைவி சுப்புலட்சுமியின் செல்போனுக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கடன் தொல்லையால் தற்கொலை செய்யப்போவதாக கூறி பேசியபடியே ஜான் தேவராஜ் தூக்கில் தொங்கினார்.
இதனை கண்டு மனைவி சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் விரைந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் ஜான்தேவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப்படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது என்று அறிவித்தது.
- அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பாடப்பிரிவுகளை தொழிற்துறையினரின் ஆதரவுடன் தொடங்க முடிவு செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து தொழில் நிறுவனங்களின் விருப்பத்தைக் கோரியிருக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில், இந்தப் படிப்புகளை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பெரியார் பல்கலைக்கழகம் வீணடித்து விடக்கூடாது.
ஏற்கனவே, 2023-24ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தபோவதாக பெரியார் பல்கலைக்கழ்கம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போதே இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று பா.ம.க. வினா எழுப்பியிருந்தது.
பா.ம.க.வின் வினாக்களுக்கு விடையளித்த தமிழக அரசு, தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப்படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது என்று அறிவித்தது. மேலும் இந்தப் படிப்பை நிறுத்தும்படி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தாம் ஆணையிட்டிருப்பதாக சட்டப்பேரவையின் அன்றைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் படிப்பை சேலம் பெரியார் பல்கலைக்கழகம்கைவிட்டது.
அதன்பின் கல்விச் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், புதியப் படிப்புகளை தனியாருடன் இணைந்து நடத்த பல்கலைக்கழகம் துடிப்பது ஏன்? இந்தப் படிப்பு நடைமுறைக்கு வந்தால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படும். இதை தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா?
இவை அனைத்துக்கும் மேலாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் அத்தகைய ஒப்புதல் எதையும் பெறாமல் தொழில்நுட்பப் படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் வழங்கினால் அந்தப் படிப்பு செல்லாது. லட்சக்கணக்கில் பணம் கட்டி அந்தப் படிப்பை படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை வணிகமாக்குவதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






