என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார்.
    • மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார்.

    கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில், தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைதாகி உள்ளார். கேரள மாநிலம் மூணாறு அருகே பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • மும்மொழிக்கொள்கையை அவர்கள் திணிக்காமல் இருக்கலாம்.
    • மூழ்கிற கப்பலில் இருந்து அதிசயங்கள் நடக்கலாம் அல்லவா... பார்ப்போம் என்றார்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி உள்ளது. இக்கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய போது அ.தி.மு.க. தலைவர்கள் பேசியதும் தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில், பா.ஜ.க. கடலில் மூழ்கும் கட்சி. அதனுடன் சேர மாட்டோம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் கூறியிருந்தார். இதுகுறித்து பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொன்னையன், அதுதான் உலக அரசியல். அதுதான் இந்திய அரசியல். அதுதான் நாட்டின் அரசியல்.

    பொறுத்திருந்து பாருங்கள். சூழல் மாறும் அரசியலிலே. கொள்கை மாறும். ஒரு திருடன் நல்லவனாக, ஒழுக்கமானவனாக மாறி ஒரு அற்புதமான மனிதனாக மாறிவிட்டால் அவரை மன்னிக்க மாட்டீர்களா? அதனால நல்லவர்களாக மாறலாம். மும்மொழிக்கொள்கையை அவர்கள் திணிக்காமல் இருக்கலாம். என்னன்னமோ நடக்கலாம். பொறுத்து இருந்து பாருங்கள். மூழ்கிற கப்பலில் இருந்து அதிசயங்கள் நடக்கலாம் அல்லவா... பார்ப்போம் என்றார். 

    • கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கண்ணாடி நடை பாலம் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது.
    • கண்ணாடி நடை பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்ணாடி நடை பாலம் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது. இந்த கண்ணாடி நடை பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும். இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் இந்த பாலத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த 5 நாட்களும் சுற்றுலாப் பயணிகள் பாலத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

    • இனி வரக்கூடிய தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
    • தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பேசினர். அப்போது தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இந்தியில் பேசினார். இதையடுத்து பேசிய நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி... அவர் மலையாளத்தில் பிறந்தாலும் இந்தியில் தான் பேசினார். மலையாளத்தில் பேசியிருந்தால் இன்னும் மக்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும். அடுத்த முறை வரும்போது உங்கள் தாய்மொழியான மலையாளத்திலேயே பேசுங்கள். இனி வரக்கூடிய தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    அண்ணாமலை அவர்கள் மிகச்சிறப்பான வகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது என்றாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி அவர்களது பாணி என்பது ஒரு பாணி. என்னுடைய விஷயம் என்பது வேறு. அவர் புயலாக இருந்தால் நாம் தென்றலாகத்தான் இருக்க முடியும்.

    தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும். போக போக பல மாற்றங்கள், நிகழ்வுகள் நடக்கும். அதை பொறுத்து மக்களின் மனநிலையும் மாறும். ஆக தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும்தான் அது வெற்றிக் கூட்டணியா? வெத்துக் கூட்டணியா? தெரியும்.

    கருணாநிதி பா.ஜ.க.வை பண்டாரம், பரதேசி கட்சி என்றார். 1998-ல் ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். 1999-ல் கருணாநிதியே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார். அப்போதும் வெற்றி பெற்றார்கள். வெற்றிக்கூட்டணியை நானோ, கருத்துக்கணிப்போ, பத்திரிகையாளர்களோ கணிக்க முடியாது. அப்படி கணித்தாலும் அது மாயையே என்றார். 

    • நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன.
    • சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டை சிறப்பாக நடத்தவேண்டும் என்றார்.

    சென்னை:

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

    ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தரவேண்டும் என்பதற்காகவே 1989-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்யமுடியும். அதனடிப்படையில் 2022-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அப்பா அவர்களின் வாழ்த்துகளுடனும், உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

    கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அப்பா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11-ம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2025-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

    மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

    மருத்துவர் அய்யா அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதேபோல், மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

    2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அப்பா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் சரியான நேரத்தில் செய்துமுடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அதுதான் என் தலையாய பணியாகும்.

    மாநாட்டுப் பணிகளையும், சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.

    மீண்டும் சொல்கிறேன்... அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களைச் சந்திக்க விரைவில் உங்களைத் தேடி வருவேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் சதம்.
    • வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை.

    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதன்படி, வேலூர், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், புதுச்சேரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூரில் 102.56 டிகிரி, ஈரோட்டில் 101.84 டிகிரி, மதுரையில் 100.4 டிகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியில் தலா 100.4 டிகிரி, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் தலா 103 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    வேலூரில் காலை முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்த நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    • அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
    • அதிமுக- பாஜக கூட்டணி மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். தமிழக பா.ஜ.க.வினர் இடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்.

    அதிமுக- பாஜக கூட்டணி மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

    • தமிழ் நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார்.
    • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி குறித்து புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பா.ஜ.க. பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த திரு. ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும் ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து, பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ள ஊழல் பணத்திற்கு ஆப்பு அடிக்கும் விதமாக, நேற்று (11.4.2025) மத்திய உள்துறை அமைச்சர், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததையடுத்து ஸ்டாலின் அலறித் துடிக்கிறார்.

    பா.ஜ.க. புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே தமிழக மக்களை, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார்.

    சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப் பகலில் கொலை வெறியாட்டங்கள், நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலைகள், தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து, கொலை செய்து கொள்ளை அடித்தல், மணல் கொள்ளை, மூன்று முறை சொத்து வரி -தண்ணீர் வரி - மின்கட்டண உயர்வு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்று, தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்டார் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின்.

    நான்காண்டுகளாக பொம்மை முதலமைச்சராக ஆட்சியை நடத்திவிட்டு, தற்போது கச்சத்தீவு, தொகுதி மறுசீரமைப்பு, நீட் விவகாரம் என்று தமிழக மக்கள் இதுவரை அனுபவித்துவந்த சிரமங்களை மடைமாற்ற முயலும் விடியா திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி குறித்து புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பா.ஜ.க. புகுந்துவிடும் என்றே நான்காண்டுகள் தமிழகத்தை ஸ்டாலின் சீரழித்ததை இனி தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்பதை உணர்ந்ததால், தன்னிலை மறந்து புலம்பத் தொடங்கி இருக்கிறார்.

    தொடர்ச்சியாக, மத்திய அமலாக்கத் துறையின் சோதனைகளுக்குள்ளான அமைச்சர்களைக் கொண்டு ஆட்சிபுரியும் இவர், இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அ.தி.மு.க-வை அடகு வைத்தவர்கள் என்று பொத்தாம் பொதுவாக புழுதிவாரித் தூற்றுகிறார்.

    என் மீதோ, எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதோ மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தியதாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? மற்றவர்களைப் பார்த்து குற்றம் சொல்லும் முன், 2ஜி ஊழலுக்காக சிறைக்குச் சென்றவர்கள், மந்திரியாக பதவி வகிக்கும்போதே சிறைக்குச் சென்றவர். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே சிறையிலிருந்து வந்தவருக்கு தியாகி பட்டம் வழங்கி, மீண்டும் மந்திரி பதவி அளித்தது போன்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

    விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லமை பெற்றது தி.மு.க. என்று நீதியரசர் சர்க்காரியாவால் சான்றிதழ் பெற்ற கூட்டம் வீராணம் திட்ட ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோடம்பாக்கத்தில் இருந்த அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியை தனியார் ஒருவருக்கு விற்று, பின்னர் அவரிடமிருந்து தி.மு.க. கட்சி பத்திரிகை பெயருக்கு மாற்றிய ஜகஜால ஊழல் என்று சர்க்காரியா கமிஷன் பட்டியலிட்டதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

    அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, CBI வழக்குகளில் இருந்து தப்பியதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

    2011, சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க-வின் அறிவாலய அலுவலக கீழ்தளத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மேல் தளத்தில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் காங்கிரஸ் அரசு ரெய்டு நடத்தியதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

    அந்த ரெய்டுக்கு பயந்து 63 சீட்டுகளை காங்கிரசுக்குக் கொடுத்து, கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து, சாஷ்ட்டாங்கமாக காலில் விழுந்ததைத்தான் தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

    அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் காலடியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத புல் தடுக்கி பயில்வான் ஸ்டாலின், எங்களைப் பார்த்து ஏகடியம் பேசுவது கண்டு மக்கள் எண்ணி நகையாடுகிறார்கள்.

    அண்ணா தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியே ஊழல் என்ற ஒரு பெரிய கண்டுபிடிப்பை, ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை வெளியிட்டிருப்பது வேடிக்கை. பொய் புரட்டுகளை அள்ளி வீசி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சேற்றை வாரி இறைத்து, எதிரணியில் இருப்பவர்களை தனித்தனியாக பிரித்து, தன்னிடம் உள்ள ஏவல் கட்சித் தலைவர்கள் துணையோடு மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு நாள்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வரும் ஸ்டாலினின் தலையில், நேற்றைய அண்ணா தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு இடியை இறக்கி இருக்கிறது.

    அது கொடுத்த வலியின் வேகம் தாங்காமல் ஸ்டாலின் துடிப்பதும், துவள்வதும் அவரது அறிக்கையில் இருந்து தெரிகிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஸ்டாலினும், அவரது குடும்பமும், மந்திரிகளும் கடலையே குடித்திருக்கிறார்கள். 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இந்த கொள்ளைக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலிமை சேர்த்த பிறகு தமிழக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது.
    • திமுக அரசை அகற்றப்பட வேண்டும் என்கிற முடிவை மக்கள் எடுத்துள்ளனர்.

    திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் ஏற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மீண்டும் காலணி அணிந்து கொண்டார்.

    தமிழக பாஜக தலைவராக இருந்தபோது திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்ற அண்ணாமலை தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அண்ணாமலை காலணி அணிந்துக் கொண்டுள்ளார்.

    இதைதொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-

    நான் இன்று எந்த பொறுப்பிலும் இல்லாத அடிப்படை தொண்டன். ஆனால் நிச்சயமாக வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்பதில் முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான பிறகு, அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலிமை சேர்த்த பிறகு தமிழக மக்களின் மனநிலை மாறியிருக்கிறது.

    தமிழகத்தில் ஒரு வலிமையான கூட்டணி களத்தில் இருக்கிறது. அதனால், திமுக அரசை அகற்றப்பட வேண்டும் என்கிற முடிவை மக்கள் எடுத்துள்ளனர்.

    அதிமுக- பாஜக கூட்டணி அறிவித்ததற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை போல. அதனால், காலை முதல் வேலையாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனக்குமுறலாகவும், அவருக்கு ஏற்பட்ட அச்சமாகவும் தான் அந்த அறிக்கையை பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர்.
    • பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் இதே போன்ற சிக்கல்களைப் புகாரளித்தனர்.

    உலகின் பிரபல நிறுவனமான மெட்டா பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கம் மற்றும் ஆப்களை இயக்கி வருகிறது.

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சேவை இன்று இந்தியாவில் முடங்கியது. இதனால், ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலி மூலம் தகவல்களை அனுப்பவோ அல்லது நிலைகளைப் பதிவேற்றவோ முடியாமல் போனது.

    இதைதொடர்ந்து, பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர்.

    இதுகுறித்து நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர் கூறுகையில், "கிட்டத்தட்ட 81% பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில் 16% பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்தனர்" என்று தெரிவித்தது.

    இதுதொடர்பாக, வாட்ஸ் அப் செயலிழப்பிற்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

    இருப்பினும், மெட்டாவுக்குச் சொந்தமான தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் இதே போன்ற சிக்கல்களைப் புகாரளித்தனர். இது மெட்டாவின் சேவைகள் முழுவதும் ஏற்பட்ட தொழில்நுட்ப காட்டுகிறது.

    முன்னதாக, இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கின. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியாமல் போனதாக புகார்கள் எழுந்தன.

    இந்நிலையில் UPI செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதில், "NPCI தற்சமயம் அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்கு இது குறித்து தொடர்ந்து அறிவிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
    • ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.

    மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    ×