என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
- ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான அரசுபணியில் முன்னுரிமை என்ற விதி பொருந்தும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் மேற்படி முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் என்றும் பள்ளி செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத் தேர்வுகளின் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்று தொடர்ந்து கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
கல்வி மற்றும் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ஜெகதீப் தன்கரின் பேச்சுக்கு பின்னாலே ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர முடிகிறது.
- நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த காலங்களில் வேந்தராகும் உரிமை ஆளுநருக்கு இருந்தது. அந்த உரிமையை பறித்து தமிழக முதல்வரை வேந்தராக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குடியரசு துணைத் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தை அச்சறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜெகதீப் தன்கரின் பேச்சுக்கு பின்னாலே ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர முடிகிறது. சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவு 142-ன் மூலமாகத் தான் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது, நீதி கிடைத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி தான் குடியரசு தலைவர் உட்பட அனைவரும் செயல்பட முடியும். இதில் எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது.
எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசியிருக்கிற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நான் மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு வன்மையாக கண்டிக்கிறது, எச்சரிக்கிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.
- மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவராக நெல்லை தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.
பா.ஜ.க மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக நாளை (19-ந்தேதி) கோவைக்கு வருகை தர உள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வரும் அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
வரவேற்பை ஏற்றுக்கொண்டதும், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விழா நடைபெறும் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
விழாவுக்கு கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
- ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
- 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.
ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஊழியர்களை நியமனம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://chennaicorporation.gov.in என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை, சத்துணவு பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வின் போது தாங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளுக்கு நாள் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்.
- வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்துள்ள மனுவில், திராவிட நட்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் ஸ்ரீவித்யா என்ற தோழர் ஸ்ரீவித்யா, தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்த யூடியூப் சேனலின் முக்கிய நோக்கமே ஆளும் திமுக கட்சித் தலைவர்களை ஆதரிப்பது தான். அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களையும், பிராமணர்களையும், பாரதிய ஜனதா தலைவர்களையும் அவதூறாக பேசுவதை ஸ்ரீவித்யா வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நாளுக்கு நாள் இது போன்ற அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார். அதை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதன் மூலம் அரசியல் தலைவர்களின் மரியாதையை கௌரவத்தை சீர்குலைக்கிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதால் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது. அதனால் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஸ்ரீவித்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மீது அடிப்படை நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவித்யா மீது மனுதாரர் கொடுத்த புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது.
- இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க
விழா நடத்தப்படவில்லை.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட 14 புதிய புறநகர் ரெயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. தற்போது சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.சி. மின்சார ரெயில் சேவை, வழக்கமான மின்சார ரெயில்களை போல நாள் முழுவதும் இயங்காது. அதிகாலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையும், பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இயங்கும். நடுவில் 5 மணி நேரம் தாம்பரத்தில் பராமரிப்பு பணி நடைபெறும்.
தற்போது ஒரே ஒரு ஏ.சி. மின்சார ரெயில் மட்டுமே உள்ளதால் இந்த இடைவேளை விடப்படுகிறது. இந்த ஏ.சி. மின்சார ரெயில் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், பொத்தேரி, பரனூர், உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இதற்கான கட்டணம் மெட்ரோ ரெயிலை போலவே ரூ.30 முதல் ரூ.50 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும்.
- 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் 77 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,050 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கிடையே தேசிய மருத்துவ ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் திருத்தப்பட்ட பட்டியலில் தமிழ்நாட்டிற்கான மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.
இதனால் இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசு விண்ணப்பிக்காததால் நாமக்கல், திருப்பூர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரி கள் கூறும்போது, மருத்துவ இடங்களை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்வதற்கு முன்பே, மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அல்லது புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கான காலக்கெடு, முடிவடைந்தது. காலக்கெடுவுக்குப் பிறகு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை.
3 மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்களை அதிகரிக்க எங்களிடம் உள்கட்டமைப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இடங்களை அதிகரிக்க வேண்டுமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என்றனர்.
இதற்கிடையே 2025-26-ம் ஆண்டுக்கான இடங்களை அதிகரிப்பதற்கோ அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கோ விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.
- முதல்கட்ட சோதனை கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
- 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
பூந்தமல்லி பணிமனை நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
மேலும் பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டிற்கு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி தரப்பட்டது என பட்டியல் போட முடியுமா?
- அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகளாக செயல்படுகிறார்கள்.
* தமிழகத்தை அடகுவைப்பது தான் சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணம்.
* இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதி தரமுடியுமா?
* தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது என அமித்ஷாவால் உறுதி அளிக்க முடியுமா?
* தமிழ்நாட்டிற்கு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி தரப்பட்டது என பட்டியல் போட முடியுமா?
* எந்த மசோதா கொண்டுவந்தாலும் திசை திருப்பல் எனக்கூறும் அமித்ஷா நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறட்டும்.
* தமிழ்நாட்டின் உரிமையை கேட்டால் அழுகிறோம் என்கிறார் பிரதமர், அவர் முதல்வரக இருந்த போது நிதி கேட்கவில்லையா?
* தி.மு.க.வின் பவர் என்ன என்று இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
* கவர்னர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள் என குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி கூறினார்.
* நாங்கள் மத்திய அரசிடம் கேட்பது பிச்சையல்ல, உரிமை. நான் கையேந்தி நிற்பவனும் இல்லை, ஊர்ந்து செல்பவனும் இல்லை.
* நான் அழுது புலம்பவும் மாட்டேன், ஊர்ந்து செல்வும் மாட்டேன்.
* ஒரு குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தாய்க்கு தெரியும், டெல்லி தீர்மானிக்கக் கூடாது.
* எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்க முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள்.
* குடைச்சல் கொடுக்காமல் நியாயமாக செயல்பட்டால் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
* டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது.
* அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.
* தன்மானமும், தமிழ்மானமும் இல்லாதவர்களுடன் கூட்டணி வைத்து ஜெயிக்க முடியாது.
* ஒரு கை பார்த்து விடலாம், படைகளை திரட்டிக்கொண்டு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
- வைரவங்குப்பன் மீனவ கிராமத்தில் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும்.
- பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையே ஏற்படுத்தி உள்ளோம்.
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அதற்கு நான் காரணம் அல்ல, நாசர் தான் காரணம்.
* பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது.
* நவீன தமிழகத்தின் சிற்பி என போற்றப்படுபவர் தான் கலைஞர், அதற்கு அடையாளம் தான் இந்த மாவட்டம்.
* திருவள்ளூரை சுற்றி தற்போது உள்ள தொழில் வளர்ச்சிக்கு கலைஞர் தான் காரணம். கார் உற்பத்தியில் தொடங்கி, கண்ணாடி உற்பத்தி ஆலை வரை கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது.
* எண்ணூரில் ரூ.18,000 கோடியில் அனல் மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
* பெரியபாளையம், திருவேற்காடு, சிறுவாபுரி கோவில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.
* கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
* காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளத்தை மேம்படுத்த ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தரப்படும்.
* திருமழிசை- ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும்.
* வைரவங்குப்பன் மீனவ கிராமத்தில் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும்.
* 63 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது தான் மகிழ்ச்சியை தருகிறது.
* அனைத்து திட்டங்களும் திருவள்ளூருக்கே செல்வதா மலைப்பாக உள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முடங்கி கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
* பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையே ஏற்படுத்தி உள்ளோம்.
* குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தால் தாய்மார்களின் வேலை குறைந்துள்ளது.
* தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.
* வளமான தமிழ்நாடாக மட்டும் அல்ல, நலமான தமிழ்நாட்டையும் உருவாக்கி உள்ளோம்.
* மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக தமிழகம் தான் உள்ளது.
* உள்ளாட்சி அமைப்புகளின் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம் என்றார்.
- 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
- மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு
சென்னை:
கடந்த 1997-2000-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
அதேபோல, இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு துணையாக செயல்பட்ட ஹைதர் அலி என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கும் 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டது
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு விசாரணை ஐகோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
அதேவேளையில், இந்த தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் கடந்த மார்ச் 14-ந்தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைய விதித்திருந்த காலக்கெடுவும் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து தாங்கள் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒரு இடையீட்டு மனுவை ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்கள்.
அந்த மனுவானது சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை சரண்டைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோர் சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.






