என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இடங்கள் அதிகரிக்கப்படாததால் மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு கடுமையான போட்டி இருக்கும்
- இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும்.
- 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில் 77 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,050 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கிடையே தேசிய மருத்துவ ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் திருத்தப்பட்ட பட்டியலில் தமிழ்நாட்டிற்கான மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கப்படவில்லை.
இதனால் இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பில் சேர கடுமையான போட்டி இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக அரசு விண்ணப்பிக்காததால் நாமக்கல், திருப்பூர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு செய்யப்படவில்லை.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரி கள் கூறும்போது, மருத்துவ இடங்களை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்வதற்கு முன்பே, மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அல்லது புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கான காலக்கெடு, முடிவடைந்தது. காலக்கெடுவுக்குப் பிறகு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை.
3 மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்களை அதிகரிக்க எங்களிடம் உள்கட்டமைப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இடங்களை அதிகரிக்க வேண்டுமா என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என்றனர்.
இதற்கிடையே 2025-26-ம் ஆண்டுக்கான இடங்களை அதிகரிப்பதற்கோ அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கோ விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.






