என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் நாளை நயினார் நாகேந்திரனுக்கு பாராட்டு விழா
- பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.
- மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவராக நெல்லை தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.
பா.ஜ.க மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக நாளை (19-ந்தேதி) கோவைக்கு வருகை தர உள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வரும் அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
வரவேற்பை ஏற்றுக்கொண்டதும், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விழா நடைபெறும் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
விழாவுக்கு கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் பங்கேற்று பேச உள்ளனர்.






