என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர்.
    • வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.

    வடவள்ளி:

    கோவை பூண்டியில் தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுவாமி சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த சுயம்பு லிங்க சுவாமியை மலையேறி தரிசிக்க ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு, கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அன்று முதல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து வெள்ளியங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு, தங்கள் மலைப்பயணத்தை தொடங்குகின்றனர்.

    கைகளில் குச்சிகளை வைத்து கொண்டு அதன் உதவியுடன் மலையேறி சென்று சுயம்பு வடிவிலான வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேற்று அதிகளவிலான கூட்டம் இருந்தது. கிரிமலையில் அதிகாலை நேரத்தில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சூரிய தரிசனம் முடிந்து பலகாரம் மேடையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கி வந்தனர்.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆர்வத்துடன் மலையேறுகின்றனர். இதய பலவீனமானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டோர் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மலையேறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகள், மது, புகையிலை, பீடி, சிகரெட், தீப்பெட்டி, எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையினர், மலையேற வரும் பக்தர்களை தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மலையடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை கோவில் வளாகத்தில் நுழைந்தது. அங்கிருந்த பிரசாத கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த அரிசியை ருசிபார்த்தது.

    யானையை பார்த்த பக்தர்கள் சத்தம் போடவே, யானை வனத்திற்குள் சென்று விட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது.
    • பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

    * பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது.

    * பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கீகரிக்காது.

    * தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பா.ஜ.க.வின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?

    * அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

    * பா.ஜ.க.வுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.

    * நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.

    * பா.ஜ.க.வை பொறுத்தவரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.

    * எங்கெல்லாம் பா.ஜ.க. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது.

    * அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை

    * இந்த முடிவை அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    * பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பா.ஜ.க. தவம் கிடந்தார்கள்.

    * இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது

    * அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும்.

    * பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.

    * தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

    * நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
    • ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன.

    இந்த மண்டிகளுக்கு ஊட்டி, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் உருளைக்கிழங்கு கொண்டு வரப்படும்.

    அவ்வாறு கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் உருளைக் கிழங்கு மண்டிக்கு கர்நாடகாவில் இருந்து வரும் உருளைக்கிழங்கு வரத்து குறைந்துவிட்டது.

    ஊட்டி மற்றும் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே உருளைக்கிழங்கு வருகிறது. அதுவும் குறைந்த அளவிலேயே உருளைக்கிழங்கு வருவதால், மண்டிகளில் அதன் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது:-

    ஊட்டி உருளைக்கிழங்கு சீசன் மே மாதம் கடைசி வாரம் தொடங்கும். தற்போது ஒரிரு லாரிகளில் மட்டுமே ஊட்டியில் இருந்து உருளைக்கிழங்கு வருகிறது.

    கர்நாடக மாநிலத்தில் வேலை நிறுத்தம் நடந்து வருவதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், ஆந்திர மாநிலம் வழியாக வருகின்றன.

    அதிலும் குறைவான அளவிலேயே உருளைக்கிழங்குகள் வருகின்றன. 200-ல் இருந்து 250 டன் அளவிலான உருளை கிழங்குகளே வருகிறது.

    கடந்த வாரம் கோலார் உருளைக் கிழங்கு 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.750-க்கு விற்பனையானது. நேற்று அதே 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை குறைந்த பட்சம் ரூ.900-த்திற்கும், அதிகபட்சம் ரூ.1000-த்திற்கும் ஏலம் போனது.

    இதே நிலை தொடர்ந்தால், உருளைக்கிழங்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம், ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்திக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் திடீரென சரிவை சந்தித்தது.

    அந்தவகையில், 14-ந்தேதி சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும், 15-ந்தேதி ரூ.69 ஆயிரத்து 760-க் கும் விற்பனை செய்யப்பட்டது. 16-ந்தேதி பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. இதற்கிடையே, கடந்த 17-ந்தேதி தங்கத்தின் விலை மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 920-க்கும், ஒரு சவரன் ரூ.840 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை நேற்றும் உயர்வை சந்தித்தது. நேற்று கிராமுக்கு ரூ.25-ம், பவுனுக்கு ரூ.200-ம் உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 945-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.71 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520

    15-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-04-2025- ஒரு கிராம் ரூ.110

    17-04-2025- ஒரு கிராம் ரூ.110

    16-04-2025- ஒரு கிராம் ரூ.110

    15-04-2025- ஒரு கிராம் ரூ.110

    14-04-2025- ஒரு கிராம் ரூ.108

    • அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
    • பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள்.

    தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அப்பள்ளி மாணவர் அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

    அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, காரியாபட்டியில் இருந்து ஆத்திகுளம் வழியாக திருச்சுழி வரை (காலை 8.10, மாலை 4.15) செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.

    இப்பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த பிஞ்சுக் குழந்தைகளின் கனவு மெய்ப்பட திராவிட மாடல் அரசு எத்தனை உதவிகளையும் செய்யத் தாமதிக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
    • சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

    இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதற்கிடையில், சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தமன் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.

    அதேபோல், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், அமைச்சர் பொன்முடி மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் தெரிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. உயர்மட்ட நிர்வாகிகள், மற்ற மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்திருப்பதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது.
    • மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே, சாதாரண மின்சார ரெயிலுக்கு பதிலாக முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வுகளும் செய்யப்பட்டது.

    பின்னர், பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏ.சி. மின்சார ரெயில் தயாரிப்பு பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. 

    இந்த நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் இன்று முதல் இயக்கப்பட்டது.

    அதன்படி முதல் ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது.

    இந்த ரெயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

    மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. 

    • குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • சிம்ரன் பங்குபெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    சென்னை:

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    கடந்த பத்தாம் தேதி படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பெரும் பாராட்டை பெற்றது.

    இந்நிலையில், உலக அளவில் இந்தப் படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    • அகரம் பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான்.
    • நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது என சூர்யா தெரிவித்தார்.

    சென்னை:

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இதில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பேசியதாவது:

    நான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. உங்களின் இந்த அன்பு இருந்தால் போதும் எப்பொழுதுமே நான் நன்றாக இருப்பேன்.

    வாழ்க்கை எப்போதுமே அழகானது. வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டு விடாதீர்கள்.

    அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் தான் வாய்ப்பு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டால் எல்லாருமே ஜெயிக்கலாம். அனைவருக்குமே அழகான வாழ்க்கை இருக்கும்.

    நடிகராக இருந்த என்னை ஜெயிக்க வைத்து அகரம் என்ற பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். நான் தனி ஆளாக செய்யவில்லை.

    நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது. தற்போது அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆயிரம் தம்பிகள், தங்களை பட்டதாரி ஆகி இருக்கிறார்கள். இன்னும் பல பேர் இதன்மூலம் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

    ரெட்ரோ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
    • ஜனாதிபதி உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.

    யார் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என்றும் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன.

    எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொது விவாதத்தில் வலதுசாரி கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது, கவர்னர்கள், துணை ஜனாதிபதி, அவ்வளவு ஏன் மாண்புமிகு ஜனாதிபதி உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.

    யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது. இதையே நமது சுப்ரீம்கோர்ட்டும் சுட்டிக்காட்டி உள்ளது,

    வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்த சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.

    தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்

    ஜி.எஸ்படி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுவதால், மேற்படி பணி நடைபெறும் 2004 2025 முதல் 2204.2025 வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

    போக்குவரத்து மாற்றம்:

    தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நத்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

    ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

    மேலும் காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும். அண்ணாசாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை. மேலும் அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் செனடாப் 1வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.

    கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும்.

    அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு. அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும்.

    பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×