என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
* ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
* சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது.
* சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
- லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
- இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (வயது 60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார்.
அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதிஅடைந்தனர்.
- விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதம்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்பட்டு செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் வந்து இருந்தனர்.
ஆனால் திடீரென சிங்கப்பூர் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதைப்போல் இன்று காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.
மேலும் காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
சிங்கப்பூர், டெல்லி, மும்பை விமானங்கள் 3 மணி நேரம் வரை திடீரென தாமதமாக சென்றதால் அதில் பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதி
அடைந்தனர். அவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்த விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களால் தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
* சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை.
* ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும். ஆக்கப்பூர்வமாக கருத்துகளை கூறுவதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள்.
* மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
* அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்.
* முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று கூறினேன்.
* டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை.
* யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது.
* மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது என்றார்.
- சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
- சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது.
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
- சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
- போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார்.
போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.
- இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார் சபாநாயகர்.
- எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேச ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் 3 பேரின் பெயரை கொடுத்துள்ளனர்.
அதன்படி, இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தங்கள் பெயரை குறிப்பிடவில்லை. தங்களின் அனுமதியுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை விவாதத்திற்கு கொடுத்துள்ளார்கள். உங்கள் பெயரை கொடுக்காமல் பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் தங்களை பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள்? முக்கிய பிரச்சனைக்காக நான் பேசுகிறேன் என்று பேச முயன்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர், நீங்கள் பேசுவதை அனுமதிக்க முடியாது. அவை மரபிலும் இல்லை, விதியிலும் இல்லை. இப்படி திடீரென்று ஒருத்தர் எழுந்து நின்று பேச முடியாது. யார் பெயரை கொடுத்தீர்களோ, அவர்கள் பேசட்டும். அவர்கள் உங்களுடைய கருத்துக்களை பேசட்டும் என்றார்.
உடனே பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் என்னை பேச அனுமதி மறுக்கிறீர்கள்? எங்களை பார்த்து பயமா? என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.முக.உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
- கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோவை:
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உள்ள 95-வது வார்டில் உள்ள சில்வர் ஜூப்ளி பகுதிக்குட்பட்ட அண்ணா நகரில் கழிவறை ஒன்று உள்ளது.
சமீபத்தில் இந்த கழிவறை புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. வர்ணம் பூசி முடித்தும், அந்த கழிவறை சுவற்றில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்: 95, தியாகி கக்கன் ஜி, பேரறிஞர் அண்ணா நினைவு நவீன கழிப்பிடம் என எழுதப்பட்டிருந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை கழிவறைக்கு வைத்திருக்கிறார்கள்.
எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாகம் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி உதவி கமிஷனர் குமரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சரண்யா ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் 95-வது வார்டு அண்ணா நகர் பகுதிக்கு சென்றனர்.
அங்கு கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இது புதிதாக எழுதப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே இதில் அப்படி தான் இருந்துள்ளது. புதிதாக அதில் பெயிண்ட் அடித்ததால் பளிச்சென தெரிந்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. தற்போது பெயிண்ட் ஊற்றி அதனை அழித்து விட்டோம் என்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கழிப்பறையில் தலைவர்கள் பெயர் இடம்பெற்று சர்ச்சையாகி உள்ளது.
- நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.
அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
- கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
- மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு ஜாமின் வழக்கி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.






