என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் விவகாரம்: EPS பேச அனுமதி மறுப்பு- அ.தி.மு.க. வெளிநடப்பு
- இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார் சபாநாயகர்.
- எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேச ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் 3 பேரின் பெயரை கொடுத்துள்ளனர்.
அதன்படி, இன்று வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தங்கள் பெயரை குறிப்பிடவில்லை. தங்களின் அனுமதியுடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை விவாதத்திற்கு கொடுத்துள்ளார்கள். உங்கள் பெயரை கொடுக்காமல் பேச அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் தங்களை பேச அனுமதிக்க மறுக்கிறீர்கள்? முக்கிய பிரச்சனைக்காக நான் பேசுகிறேன் என்று பேச முயன்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர், நீங்கள் பேசுவதை அனுமதிக்க முடியாது. அவை மரபிலும் இல்லை, விதியிலும் இல்லை. இப்படி திடீரென்று ஒருத்தர் எழுந்து நின்று பேச முடியாது. யார் பெயரை கொடுத்தீர்களோ, அவர்கள் பேசட்டும். அவர்கள் உங்களுடைய கருத்துக்களை பேசட்டும் என்றார்.
உடனே பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏன் என்னை பேச அனுமதி மறுக்கிறீர்கள்? எங்களை பார்த்து பயமா? என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், இங்கு யாரை பார்த்தும் பயப்பட தேவையில்லை என்றார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.முக.உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.






