என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கழிவறையில் எழுதியிருந்த  தலைவர்கள் பெயர் அழிப்பு - மாநகராட்சி நடவடிக்கை
    X

    கழிவறையில் எழுதியிருந்த தலைவர்கள் பெயர் அழிப்பு - மாநகராட்சி நடவடிக்கை

    • எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உள்ள 95-வது வார்டில் உள்ள சில்வர் ஜூப்ளி பகுதிக்குட்பட்ட அண்ணா நகரில் கழிவறை ஒன்று உள்ளது.

    சமீபத்தில் இந்த கழிவறை புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. வர்ணம் பூசி முடித்தும், அந்த கழிவறை சுவற்றில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்: 95, தியாகி கக்கன் ஜி, பேரறிஞர் அண்ணா நினைவு நவீன கழிப்பிடம் என எழுதப்பட்டிருந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை கழிவறைக்கு வைத்திருக்கிறார்கள்.

    எளிமையான 2 தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாகம் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி உதவி கமிஷனர் குமரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சரண்யா ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் 95-வது வார்டு அண்ணா நகர் பகுதிக்கு சென்றனர்.

    அங்கு கழிப்பறையில் எழுதப்பட்டிருந்த இரு தலைவர்களின் பெயர்களையும் பெயிண்ட்டால் அழித்து நடவடிக்கை எடுத்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இது புதிதாக எழுதப்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே இதில் அப்படி தான் இருந்துள்ளது. புதிதாக அதில் பெயிண்ட் அடித்ததால் பளிச்சென தெரிந்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. தற்போது பெயிண்ட் ஊற்றி அதனை அழித்து விட்டோம் என்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கழிவறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது கழிப்பறையில் தலைவர்கள் பெயர் இடம்பெற்று சர்ச்சையாகி உள்ளது.

    Next Story
    ×