என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது.
    • அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.

    2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.
    • தமிழக-கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பன்னாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் போலீஸ்-வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.

    இது தமிழக-கர்நாடகா எல்லை என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடந்து வருகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனை சாவடியில் இரும்பினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இதில் நுழையும் வாகனங்கள் உயரமான மற்றும் அகலமான பாரங்களை ஏற்றி வந்தால் செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று பண்ணாரி சோதனை சாவடி தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது.

    இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழக-கர்நாடக இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு லாரியை அங்கிருந்து நகர்த்தினர். இதன்பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையத்தில் பிரசித்திபெற்ற ஏணிபாலி பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்று ஏணிபாலி பச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சங்ககிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், பொங்கல் வைத்து சாமி வழிபட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.

    அவரிடம் குழந்தைகள் சிலர் ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்ககிரி பறையங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவி ஆகியோரின் மகன் அகி (14), நங்கவள்ளியை சேர்ந்த குணசேகரன், கோகிலா ஆகியோரின் மகள் ஸ்ரீ திக்சா (7), ஆகிய 2 குழந்தைகள் சங்ககிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் ஆதவ ராஜ் (5), அ.புதூரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் யோகேஸ்வரன் (18), தர்மபுரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் ஸ்ரீநிதி (10) ஆகியோர் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து மருத்துவர்கள் கூறியபோது, வாந்தி வயிற்றுப்போக்குடன் வந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான கெங்குவார்பட்டியிலும், பழனி மலையடிவாரப் பகுதியிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    • வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டில் 3 மாதங்கள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. கடும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இதில் அமைதியும், இற்கையான சூழலும் கொண்ட வட்டக்கானல் பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து தங்கி செல்வது வழக்கம்.

    கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான கெங்குவார்பட்டியிலும், பழனி மலையடிவாரப் பகுதியிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இ-பாஸ் நடைமுறை உள்ளதால் அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டில் 3 மாதங்கள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். இஸ்ரேலில் நடைபெற்று வரும் போருக்கு பிறகு அவர்களின் வருகை குறைந்தது. தற்போது இஸ்ரேல் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கொடைக்கானலுக்கு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக பழமை வாய்ந்த வெள்ளக்கவி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து கும்பக்கரை செல்லும் பாதை உள்ளது. எனவே அந்த வழித்தடத்திலும் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடைக்கானல் நகர் பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக அனைத்து சுற்றுலா தலங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. மேலும் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

    • பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
    • ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார் (வயது 50). இவரது மனைவி கவிதா.

    தம்பதியின் 17 வயதுடைய மகள் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சிறுமிக்கு வாலிபருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வாலிபரின் பகுதியில் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் காரணமாக குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி பர்கூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்து குடித்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

    பர்கூர் போலீசார் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முன் ஜாமின் பெற சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு குமார், கவிதா இருவரும் திருப்பத்தூருக்கு வந்தனர்.

    மொளகாரன்பட்டி கீழ் குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றனர். விரக்தி அடைந்த தம்பதியினர் ரெயில் தண்டவாளத்தில் நின்றனர். அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தனர். ரெயில் மோதியதில் குமார், கவிதா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் கணவன், மனைவி உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சி.யால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.

    என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்ததன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வானதிராயபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட 62 மடங்கும், பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அதிக அளவாக 115 மடங்கும் கூடுதலாக பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சி.யால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அந்த ஏரியில் உள்ள நீரிலும் பாதரசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம், கடந்த 2023-ஆம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்திருந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதும் உறுதியாகியிருந்தது. அவை இப்போது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

    என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களால் கடலூர் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்.

    ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி தான் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் ஸ்டெர்லை ஆலை ஏற்படுத்திய தீங்குகளை விட பலமடங்கு அதிக கேட்டை என்எல்சி ஏற்படுத்தியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பது தான் எனது வினாவாகும்.

    தனியார் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் என்.எல்.சியால் பெரும் தீமைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் நம்பிக்கை இல்லை என்றால், சென்னை ஐஐடி மூலம் கூட தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்திக் கொள்ளலாம். அந்த ஆய்விலும் என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு நேற்று வந்தார்.
    • தோடர் பழங்குடியின மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்து வரும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக நீலகிரிக்கு நேற்று வந்தார்.

    நேற்று ஊட்டி ராஜ்பவனில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அதனை தொடர்ந்து ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்குடியினரின் தலைமை வசிப்பிடமான முத்தநாடு மந்துவுக்கு துணை ஜனாதிபதி சென்றார்.

    அங்கு அவரை தோடரின பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்கி, பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். அப்போது துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும் தோடரின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். தொடர்ந்து அவர் தோடர் பழங்குடியின மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    அதன்பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் ஊட்டி ராஜ்பவன் வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார்.

    • மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
    • நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    * தி.மு.க. ஆட்சியில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம்.

    * எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தோம்.

    * மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.

    * மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    * நான் முதல்வன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிறப்பாக நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.

    * சாமானிய வீடுகளில் இருந்து வந்து வென்ற உங்களை பாராட்டுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்

    * நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிகள் குறைந்த நேரத்தில் நீங்கள் கவலையை தீர்த்துள்ளீர்கள்.

    * அதிகாரம் என்பது அனைவருக்கும் சமம், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவராக பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன் (84). வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வு தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். 

    • வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 12ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து பெரிய அளவில் மாற்றமில்லாமல் தங்கம் விற்பனையாகி வருகிறது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.9,005-க்கும் சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 112-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 12ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,500 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
    • வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

    இன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. இதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸூக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கிராம மீனவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் துறைமுகங்களில் 8,000 பைபர் படகுகள், 1,800 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    ×