என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பஹல்காம் சம்பவம் எதிரொலி - கொடைக்கானலில் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் ரோந்து
    X

    பஹல்காம் சம்பவம் எதிரொலி - கொடைக்கானலில் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் ரோந்து

    • கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான கெங்குவார்பட்டியிலும், பழனி மலையடிவாரப் பகுதியிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    • வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டில் 3 மாதங்கள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. கடும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இதில் அமைதியும், இற்கையான சூழலும் கொண்ட வட்டக்கானல் பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து தங்கி செல்வது வழக்கம்.

    கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான கெங்குவார்பட்டியிலும், பழனி மலையடிவாரப் பகுதியிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இ-பாஸ் நடைமுறை உள்ளதால் அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டில் 3 மாதங்கள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். இஸ்ரேலில் நடைபெற்று வரும் போருக்கு பிறகு அவர்களின் வருகை குறைந்தது. தற்போது இஸ்ரேல் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கொடைக்கானலுக்கு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக பழமை வாய்ந்த வெள்ளக்கவி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து கும்பக்கரை செல்லும் பாதை உள்ளது. எனவே அந்த வழித்தடத்திலும் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடைக்கானல் நகர் பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக அனைத்து சுற்றுலா தலங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. மேலும் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×