என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
- நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்து பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
- நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன.
நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது.
முன்னதாக விசாரணையின்போது," நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நியோ மேக்ஸ்-க்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ரூ.600 கோடி சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடக்கும்.
- அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.
இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பதால் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே நடைபெறும். உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
இதனால் மூலவர் மாரியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 5 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது. இதனை முன்னிட்டு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டது.
இதையடுத்து அனுக்னஞ, விக்னேஸ்வர பூஜை, தேவதானுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வசனம், வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், ஜபஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. பின்னர், யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி, கடம் புறப்பாடு நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
அதனை தொடர்ந்து மூலஸ்தான மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருகிற ஜூன் 1-ந்தேதி வரை தினமும் காலை, மாலை தைலக்காப்பும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூன் 4-ந்தேதி வரை (48 நாட்கள்) நடைபெறுகிறது.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது.
- மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூா், ராஜம்பேட்டை, கா்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, தினசரி சுமாா் 100 டன் அளவுக்கு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் எலுமிச்சை பழத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது. (வியாழக்கிழமை)நிலவரப்படி 5 லாரிகளில் 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இதன்படி, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.
- அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் விசாரணை, சோதனை என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்காளத்தை மையமாக கொண்டு இயங்கி வந்த 2 அன்னிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாக கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது.
இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேல் விசாரணை, சோதனை என அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மேற்படி நிறுவனங்களுக்கு சொந்தமாக ராமேசுவரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் அறைகள் மற்றும் நிலம் என ரூ 30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினர் முடக்கியிருந்தனர்.
தற்போது இந்த சொத் துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது. அதன்படி இந்த விடுதியில் 60 அறைகள் மற்றும் தரிசு நிலம் ஒன்றை கையகப்படுத்தி இருப்பதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- பஸ்களை திருப்புவதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் நடந்து ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பொருட்கள், பெரிய பைகளுடன் வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர்.
எனவே விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மாநகர பஸ்களை அனுமதித்து இதற்காக தனியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பஸ்கள் விரைவில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகர பஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகளின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். விமான அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கு தயாராக உள்ளோம். ஆனால் பஸ்களை திருப்புவதற்கும், பஸ்நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன. இது சரிசெய்த பின்னர் மாநகர பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் என்றனர்.
- கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
- ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான அரசுபணியில் முன்னுரிமை என்ற விதி பொருந்தும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் மேற்படி முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் என்றும் பள்ளி செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பொதுத் தேர்வுகளின் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்று தொடர்ந்து கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
கல்வி மற்றும் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ஜெகதீப் தன்கரின் பேச்சுக்கு பின்னாலே ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர முடிகிறது.
- நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த காலங்களில் வேந்தராகும் உரிமை ஆளுநருக்கு இருந்தது. அந்த உரிமையை பறித்து தமிழக முதல்வரை வேந்தராக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குடியரசு துணைத் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தை அச்சறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜெகதீப் தன்கரின் பேச்சுக்கு பின்னாலே ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர முடிகிறது. சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவு 142-ன் மூலமாகத் தான் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது, நீதி கிடைத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி தான் குடியரசு தலைவர் உட்பட அனைவரும் செயல்பட முடியும். இதில் எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது.
எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசியிருக்கிற குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நான் மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு வன்மையாக கண்டிக்கிறது, எச்சரிக்கிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.
- மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
கோவை:
தமிழக பா.ஜ.க மாநில தலைவராக நெல்லை தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.
பா.ஜ.க மாநில தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு பா.ஜ.க மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக நாளை (19-ந்தேதி) கோவைக்கு வருகை தர உள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் நாளை கோவைக்கு வருகிறார். கோவை வரும் அவருக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்கள் முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
வரவேற்பை ஏற்றுக்கொண்டதும், அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விழா நடைபெறும் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு நடக்கும் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
விழாவுக்கு கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் பங்கேற்று பேச உள்ளனர்.
- ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான்.
- 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம். கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.
ஒரு கட்சி மற்றொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5- வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்கள் போட்டியிடுவார்கள். த.வெ.க. தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஊழியர்களை நியமனம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://chennaicorporation.gov.in என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை, சத்துணவு பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வின் போது தாங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளுக்கு நாள் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்.
- வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்துள்ள மனுவில், திராவிட நட்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் ஸ்ரீவித்யா என்ற தோழர் ஸ்ரீவித்யா, தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்த யூடியூப் சேனலின் முக்கிய நோக்கமே ஆளும் திமுக கட்சித் தலைவர்களை ஆதரிப்பது தான். அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களையும், பிராமணர்களையும், பாரதிய ஜனதா தலைவர்களையும் அவதூறாக பேசுவதை ஸ்ரீவித்யா வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நாளுக்கு நாள் இது போன்ற அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார். அதை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதன் மூலம் அரசியல் தலைவர்களின் மரியாதையை கௌரவத்தை சீர்குலைக்கிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதால் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது. அதனால் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஸ்ரீவித்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மீது அடிப்படை நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவித்யா மீது மனுதாரர் கொடுத்த புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.






