என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • என் வீட்டிலேயே எனது பக்கத்திலேயே அதாவது நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர்.
    • ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று விசாரணை நடத்த வேண்டும்.

    கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,

    என் வீட்டிலேயே எனது பக்கத்திலேயே அதாவது நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்?, என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அந்த ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வந்துள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதனை நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம் என்று கூறினார்.

    ராமதாசின் இந்த குற்றச்சாட்டால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பை சேர்ந்த பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று விசாரணை நடத்த வேண்டும்.

    சைபர் பாதுகாப்பு வல்லுனர்களை உள்ளடக்கிய உயர்நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒட்டு கேட்கும் கருவி வைத்ததன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    கும்மிடிப்பூண்டி - பொன்னேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 15 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த 2 நாட்களிலும் 6 மணி நேரத்துக்கு சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 25 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 மணிக்கு சூலூல்பேட்டைக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கு செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8.35 மணிக்கு செல்லும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, 12.40 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு செல்லும் ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.25 மணிக்கு செல்லும் ரெயில்கள், நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 10.20 மணிக்கு செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ரெயில் கோட்டம் தெரிவித்து உள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.30 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.40, 11.35 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து எண்ணூருக்கு காலை 10.30 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து மீஞ்சூருக்கு மதியம் 12.40 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 9.27, 10.13 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.13 மணிக்கும், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 11.56, மதியம் 1.43, 2.59 மணிக்கும், எண்ணூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.43 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    • தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும்
    • போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

    அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார். ஆனால் போலீசார் அந்த போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டன போராட்டத்திற்கு போலீசார் தற்போது அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலை பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்து உள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடக்கும் கண்டன போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    விஜய் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்றே சென்னைக்கு வந்து விட்டனர். நாளை நடக்கும் போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர். போராட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.

    • தி.மு.க.வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னிலையிலும் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், தி.மு.க.வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும்; மாநகராட்சி மேயரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், காரைக்குடி மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வின் ஸ்டாலின் அரசையும்; காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 9 மணிக்கு தேர்வு எழுதுவதற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் தாமதமாகவே வருகிறார்கள்.
    • தற்போது 3925 காலி பணியிடங்கள் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை 14 லட்சம் பேர் எழுதினார்கள். 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது. சென்னையில் 316 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

    கைப்பேசி அல்லது ஏதேனும் மின்னணுக் கருவி, பென்டிரைவ், அறிதிறன் கைக்கடிகாரம் போன்ற நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கருவிகளை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

    தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சென்னையில் இன்று (சனிக்கிழமை) 94,845 பேர் தேர்வு எழுதினார்கள்.

    இரண்டு பகுதிகளாக கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து மொழித் திறனை அறிவதற்காக 100 கேள்விகளும், பொதுஅறிவுப் பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.

    எழும்பூர் அரசு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பணிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வருவாய், ஆய்வாளர், வனகாவலர், வன பாதுகாவலர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வு தீவிர கண்காணிப்புடன் நடந்தது.

    தேர்வு நடைபெறும் முதல் நாளே வந்து மையங்களை தேர்வர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும். 9 மணிக்கு தேர்வு எழுதுவதற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் தாமதமாகவே வருகிறார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

    14 லட்சம் பேர் தேர்வு எழுதுவதால் அவர்களின் விடைத்தாள்கள் 2 வாரத்தில் திருத்தப்பட்டு 3 மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். குரூப்-1 தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளிவரும்.

    குரூப்-4 தேர்வில் கேள்விகள் யாரும் பதிலளிக்க முடியாத மாறுபட்ட அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகள் சில நேரங்கள் கேட்கப்படுவதால் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிறது.

    கேள்விகளை தயாரிக்கும் குழுவில் உள்ளவர்கள் அதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை அவர்கள் எடுத்து வந்தால் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.

    அரசு பணியில் சேர வேண்டும் என்ற மிகுந்த ஆசை, ஈடுபாடு இருக்கிறது.

    வேலை பாதுகாப்பு அரசு பணியில் இருப்பதால் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். தற்போது 3925 காலி பணியிடங்கள் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தேர்வு நடைபெறுவதால் காலியிடங்கள் இன்னும் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது.

    தேர்வுக்கான வினாத்தாள் இந்த ரகசியத்துடன் 2 கட்டமாக மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது அது முழுவதும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் தேர்வரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் தேர்வர்களுக்கு ஏற்படும். இழப்புக்கு தேர்வாணையம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

    • கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
    • பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.

    அரியலூர்:

    பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை, அரசு விழாவாக தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    நடப்பாண்டு இந்த விழாவை மத்திய கலாசாரத் துறை சார்பில் 5 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான வருகிற 23-ந் தேதி மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான வருகிற 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    அன்றைய தினம் நடைபெறும் திருவாசகம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் வடிவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

    • திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிப்பதில் உள்ள குறைகள் தான்.
    • இன்றைய தேதியில் கூட 5000 பேர் பயிற்சி பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் 1000 பேர் கூட பயிற்சிக்கு வருவதில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற உதவி செய்யும் திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 137 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 865 ஆக குறைந்து விட்டதாக தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் திறன் பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளிப்பதில் உள்ள குறைகள் தான்.

    2023-ம் ஆண்டில் பயிற்சி பெற்றவர்களில் 49 சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டில் அது 23.33 சதவீதம் ஆகவும், 2025-ம் ஆண்டில் இதுவரை 6.76 சதவீதம் ஆகவும் குறைந்து விட்டன. இன்றைய தேதியில் கூட 5000 பேர் பயிற்சி பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர்களின் 1000 பேர் கூட பயிற்சிக்கு வருவதில்லை. நான் முதல்வன் திட்டம் படுதோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க இந்த புள்ளி விவரங்களே போதுமானவை. அடுத்து அமைய இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் ஆட்சியில், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் கனவுத் திட்டமாக உருவாக்கி இளைஞர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்துவோம் என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்குவது போன்ற பிரச்சனைகளில், நாம் கவனம் செலுத்த வேண்டும்.
    • சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தினால், நான் கட்சியையே நடத்த முடியாது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனது முகநுால் பக்கத்தில், நேரலையில் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களை தவிர்த்து, ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன்.

    இது, கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். புகார் பரிசீலனையில் இருக்கிறது. புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 144 மாவட்டச் செயலாளர்களையும் நீக்க வேண்டியது இருக்கும்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி, உயிர்ப்போடு இருக்கும். தினமும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி, அவற்றை தீர்க்க செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும்.

    எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும், மனை பட்டா கோருவது பிரச்சனையாக உள்ளது. விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்குவது போன்ற பிரச்சனைகளில், நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தினால், நான் கட்சியையே நடத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    • தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்.

    திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை.

    * கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    * தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டிலும் ஆட்சியை தொடர்ந்து நடத்துவார்.

    * தி.மு.க. அறுதி பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சு எழாது.

    * தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார்.
    • ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம்.

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை.

    மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார். தி.மு.க.வில் தற்போது சேர்க்கப்பட்டவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும் 11 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம். அதற்கு குறைந்தபட்சம் 10, 12 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும். இதுதான் எங்களது கட்சியினர் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் உடனிருந்தனர்.

    • தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக செஞ்சி இருந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டையும் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னமாக மாறியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்கதக்கதாகும்.

    தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக செஞ்சி இருந்துள்ளது. மராட்டியர்களுக்கு முன்பே பல்லவர்கள், சோழர்கள், காடவாராயர்கள் உள்ளிட்ட பல தமிழ் மன்னர்கள் செஞ்சி பகுதியை ஆண்டுள்ளனர். மராட்டியர்களுக்கு பின்னர் முகலாயர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் செஞ்சிக் கோட்டையை பிடித்தனர்.

    தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டையும் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னமாக மாறியுள்ளது.

    உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து செஞ்சிக் கோட்டை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர்.
    • குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர்.

    சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஊமனாஞ்சேரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்ப உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காப்பகத்திற்கு ஆய்வுக்கு வந்த குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர்.

    இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமானது.

    ×