என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி 27-ந்தேதி விழாவில் நினைவு நாணயம் வெளியிடுகிறார்
- கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
- பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார்.
அரியலூர்:
பிரதமர் மோடி வருகிற 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள பெருவுடையார் கோவில், மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை, அரசு விழாவாக தமிழக அரசு 2023-ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு இந்த விழாவை மத்திய கலாசாரத் துறை சார்பில் 5 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான வருகிற 23-ந் தேதி மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான வருகிற 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அன்றைய தினம் நடைபெறும் திருவாசகம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் வடிவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.






