என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது.
- சுருளி அருவியில் இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்கிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
பருவமழை குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த வாரம் 60 அடியில் இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.27 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2046 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையில் 4916 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பட்டாவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டும்போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறந்து விடப்படும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்தும் 5516 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் 137 அடி வரை ரூல் கர்வ் விதிமுறைப்படி தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அணையில் 5703 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை 30.8, தேக்கடி 26.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளான மேகமலை, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிபாறை, காப்புக்காடு பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடி அமாவாசையன்று நீர்வரத்து சீரானதால் வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் அருவியில் நீராடினர். ஆனால் அன்று மதியத்துக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து பொதுமக்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.
இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.
- கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது.
- மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 123 ½ அடியாக இருந்த நிலையில் இன்று 3 ½ அடி உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 142.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 346 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது. கடந்த 23-ந்தேதி அணையில் 115 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 127 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 23-ந்தேதி 122 அடியாக இருந்த நிலையில் இன்று 142.68 அடியை எட்டியுள்ளது.
இதனால் கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் சுமார் 20 ½ அடி அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியை கடந்துள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 28 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 25 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
- கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அருவி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.
காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 3 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து 12 ஆயிரம் கன அடி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், அரவக்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.
மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படும். அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் மதியம் 12 மணி முதல் 75 ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படும். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக 1 லட்சம் கனஅடி வரை அதிகரிப்படலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை இன்று ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுவதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- அப்துல் கலாம் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
- மணி மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலகப் புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது.
அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன. இன்று அப்துல் கலாமின் 10-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணி மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், போலீஸ் டி.ஐ.ஜி., மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ், இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல்கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
- பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.
- சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.
திருச்சியில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். காரில் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.
மேலும் பாஜகவினர் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.
வரவேற்பை உற்சாகமாக ஏற்றுகொண்ட பிரதமர் மோடி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, கண்டோன்மென்ட், மாநகராட்சி அலுவலகம், ஒத்தக்கடை , தலைமை தபால் நிலைய சிக்னல் கடந்து டி.வி.எஸ். டோல்கேட், சுப்பிரமணியபுரம், மத்திய சிறை பகுதி சாலை வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே ஒத்தக்கடையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இப்பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பிரதமரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படங்களும் இடம்பெற்று இருந்தது.
விமான நிலையம் வந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார்.
- மகாராஷ்டிராவின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான உத்தவ் தாக்கரேவின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
- கூட்டாட்சி மற்றும் மொழியியல் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமைக்கு வாழ்த்துகள்.
சிவசேனா கட்சி நிறுவனரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மகாராஷ்டிராவின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான உத்தவ் தாக்கரேவின் உறுதியான நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
கூட்டாட்சி மற்றும் மொழியியல் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமைக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.
- கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.
மோசமான காயமடைந்து, நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.
பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்ய வேண்டும். கருணைக்கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் காலனியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய வாலிபர் ஒருவர் இன்று மாலையில் முதலமைச்சர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் அவரது வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
மிரட்டல் விடுத்த நபரின் பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. அவர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மிரட்டலை தொடர்ந்து இன்று காலையில் முதலமைச்சரின் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் முதலமைச்சரின் வீடு உள்ள சித்தரஞ்சன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
- பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
- பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார் என நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக ரெயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தந்தை நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிப்பு, தாய் சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிப்பு, மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிப்பால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
+2
- தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
- திருச்சியில் பிரதமரிடம் முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதியன்று தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைதொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கஆலோசனை நடத்தினார்.
பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில்,"மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த கோரிக்கை மனுவை திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனை ஆக்காமல் நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்ட்ஙகளுக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். மேலும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.






