என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு உபரிநீர் திறப்பு வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது.
மேட்டூர் அணைக்கு நேற்று மாலை முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படும். அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் மதியம் 12 மணி முதல் 75 ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படும். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக 1 லட்சம் கனஅடி வரை அதிகரிப்படலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை இன்று ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுவதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.






