என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 2 அணைகளில் இருந்து மொத்தம் 95ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வர தொடங்கி அணை மீண்டும் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 50ஆயிரம் கனஅடி முதல் 70ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி எதிரே உள்ள தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதியில் வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
- மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கிய நிலையில், தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
சென்னை:
புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அவர் 21-ந்தேதி (வியா ழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.
எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்குகள் பெற வைப்பதற்காக மத்திய மந்திரிகள் இன்று ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், "சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். இதே போன்று ஒடிசா மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கிடமும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
- தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
- இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்திலுள்ள இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும்.
இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும்.
ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 89.63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 117.56 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 7 ஆயிரத்து 382 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 118 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணையில் 118.55 அடி நீர் இருந்த நிலையில், இன்று நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது.
மற்றொரு பிரதான அணையான சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் சுமார் 15 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் நீர் இருப்பு 118.11 அடியாக இருந்தது.
தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து 123.52 அடியாக உயர்ந்தது அந்த அணையில் ஒரே நாளில் 5 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6½ சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மேலும் காக்காச்சியில் 5½ சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைகளை பொறுத்த வரை 85 அடி கொண்ட கடனா அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று இன்று ½ அடி உயர்ந்து 67½ அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து 72½ அடியை எட்டியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியை நெருங்கி உள்ளது.
- குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபாய ஒலி எழுப்பி சுற்றுலாப் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர்.
தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியிலும் நேற்று மாலையில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் அங்கும் சுற்றுலாப் பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது.
- தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ''அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்; எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது" என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவது தான் வினோதமாக உள்ளது. மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், அதற்கு முன்பாக தூய்மைப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியில் இருந்து மீட்கப்படும்போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாக கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை செய்யாமல் தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அவர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.
தூய்மைப்பணியாளர்களுக்கு இத்தகைய மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் பணி செய்யும் காலத்தில் நிலையான பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தருமபுரி:
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் நேற்று 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 6,500 கனஅடி யாக வந்த நீர்வரத்து மதியம் 12 மணி அளவில் 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ரஜினிகாந்த் தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார்.
- ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக திரையுலகில் கால்பதித்த அவர், தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார். அவரின் 171-வது திரைப்படமான கூலி கடந்த வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்தின் சந்தித்துள்ளார்.
ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாவித்திரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குளித்தலை பகுதியில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் தாளாளராகவும் உள்ளார். தற்போது இவர்கள் தங்களது வீட்டை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருணநிதி குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம 3 நபர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர்.
சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தார். அப்போது 3 பேர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். சத்தம் கேட்டு கருணநிதி, சாவித்திரி ஆகியோர் அங்கு வந்தனர். உடனே கொள்ளையர்கள் அபர்ணாவை அரிவாளால் தாக்கினர். உடனே தாய் சாவித்திரி தடுத்தார். இதில் அபர்ணா, சாவித்திரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் கொள்ளையர் கத்தி, அரிவாள் முனையில் அங்கு இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்தனர். பின்னர் கொள்ளையர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி கருணாநிதி அக்கம்பக்கத்தினர் மூலமாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்தசாவ்த்திரி, அபர்ணாவை போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா விரந்து வந்து விசாரணை நடத்தி னார். கொள்ளையர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.
குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






