என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை
- குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபாய ஒலி எழுப்பி சுற்றுலாப் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர்.
தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியிலும் நேற்று மாலையில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் அங்கும் சுற்றுலாப் பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






