என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.
    • பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடந்து வருகிறது.

    மதுரை:

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது.

    பார்க்கிங், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

    மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்துசென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் அமைக்கப்பட்டுள்ளது.

    தூய்மை பணி, மகளிர் பாதுகாப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு என 13 குழுக்கள் நியமனம்.

    ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கான தனி பாதைகள்.

    பெண்களுக்கு என பிங்க் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அவசர தேவைக்காக டிரோன்கள் மூலம் மருத்துவ பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கவும் திட்டம்.

    மாநாட்டு திடலைச் சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

    50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளன.

    100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார்.

    மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலாவிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
    • தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்று உரிய நிதியை விடுவிப்பார் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி இன்று சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின்போது, 2025-26ம் ஆண்டு நிதியாண்டில் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    இந்நிலையில், குளச்சல் துறைமுக விரிவாக்கப்பணி தொடர்பாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்று உரிய நிதியை விடுவிப்பார் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னை சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது.
    • 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

    இந்தச் சோதனைகள், ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO- Research Designs and Standards Organisation) மூலம் நடத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த நடைமுறையின்படி, இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RDSO அமைப்பானது தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குகிறது.

    ஆகஸ்ட் 16, 2025 முதல் இந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அவை சுமார் இரண்டு வாரங்களுக்குத் தொடரும். இக்காலகட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது.

    அத்துடன், வழித்தடத்தில் ரெயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் (verification of traction and braking performance) பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ ரெயில்கள் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும், மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னிலையில் பாதுகாப்புச் சான்றிதழ் சோதனைகள் நடைபெற்றன.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், கூறியதாவது:-

    இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில், பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது. பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதி 1ஏ (viaduct Section 1A), 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நிலையான முன்னேற்றத்துடன், பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு சித்திக் கூறினார்.

    • தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு துணைமின்நிலையத்தில் நாளை (20-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டிபுதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி,

    கள்ளிப்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கோட்டூர் ஆவாரம்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 5ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து, 6ஆவது மாடிக்கும் பரவியது.
    • மிக்சியில ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5ஆவது மாடியில் ஏற்பட்ட தீ, மளமளவென 6ஆவது மாடிக்கும் பரவியது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மிக்சியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கோவை கீரணத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சேரன்மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை மின்வினியோகம் இருக்காது.

    கோவை:

    கோவை கீரணத்தம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீரணத்தம், வரதைய்யங்கர்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒரு பகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு,

    சங்கராவீதி, ரவிதியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயாநகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதிமாநகர், குறிஞ்சி நகர், சேரன்மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா -தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவியது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது.

    இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில் தெற்கு ஒரிசா உட்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலுக்குறையக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தெற்கு குஜராத் -வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும்,குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை மற்றும் நாளைமறுநாள் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.

    மதுரை:

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.

    கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.

    பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.

    அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.

    இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.

    இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

    உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.

    முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.

    • ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க. அமைச்சர்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கி பதவியும் இழந்துள்ளனர். அந்த வகையில் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசி பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை இழந்துள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆர்.கே.நகர் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதி மக்களை அழைப்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

    அப்போது, அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதது குறித்து ஒரு பெண் கேள்வி எழுப்ப, அப்பெண்ணுக்கு ஆதரவாக மேலும் சில பெண்களும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. எபினேசர் விளக்கம் அளித்தார்.

    இருப்பினும், அப்பகுதி மக்களுக்கும், எபினேசர் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. எபினேசர், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மெண்டல்கள் போல் பேசுவதாக கூறினார்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது:-

    ஆர்.கே.நகர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கேள்வி எழுப்பிய மக்களை அடிக்க முற்படுகிறார்..

    ஏழை வயிற்றில் அடித்தவர்கள் யாரும் நல்ல வாழ்வு கண்டதில்லை!

    நன்றிகெட்ட இந்த எம்.எல்.ஏ எபினேசரும் இதனை உணரும் காலம் தூரத்தில் இல்லை! என்று பதிவிட்டுள்ளார். 




    • மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    • 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.

    சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையை வழங்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, சென்னையில், 2 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது.

    இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சுமார் 118. 9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை சுமார் 26. 1 கி.மீட்டர் தொலைவுக்கும், இதே போல, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் சுமார் 45. 8 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தொலைவுக்கு மற்றொரு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் வரையிலான இந்த மெட்ரோ வழித்தடம் ரூ.9.928 கோடி மதிப்பீட்டில் 21.7 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய இருக்கிறது.

    இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்து இருந்த நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.
    • நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.

    இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.

    இதனிடையே, மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

    நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும் இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.

    இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    • ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
    • டி.ஆர்.பாலு மனைவி ரேணுகாதேவி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு அவர்களின் மனைவி ரேணுகாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

    டி.ஆர்.பாலு அவர்களின் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு பின்னணியாக இருந்து உதவிய ரேணுகா தேவி அவர்களின் மறைவு டி.ஆர். பாலு அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

    ரேணுகா தேவி அவர்களை இழந்து வாடும் டி.ஆர்.பாலு, புதல்வர் டி.ஆர்.பி. இராஜா உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ×