எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி.
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிக்கை
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.

இதனிடையே, மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும் இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.

இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com