என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேற்று தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனையானது.



    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 159 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆறாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400

    25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080

    24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800

    23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-09-2025- ஒரு கிராம் ரூ.153

    25-09-2025- ஒரு கிராம் ரூ.150

    24-09-2025- ஒரு கிராம் ரூ.150

    23-09-2025- ஒரு கிராம் ரூ.150

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    வழக்கு விசாரணையின்போது, வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில், புதிய வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது. பல்வேறு பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் அறிவித்துள்ளார்.

    • சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.
    • விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும்.

    சென்னை:

    உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.

    இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    இவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1905 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் 188 மையங்களில் 53 ஆயிரத்து 606 பேர் எழுத இருக்கிறார்கள்.

    விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வந்துவிடவேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுதுவார்கள்.

    • 1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் `தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார்.
    • சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.

    சென்னை:

    `தமிழர் தந்தை'சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    `தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 27.9.1905 அன்று பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளார்.

    1942-ம் ஆண்டு முதன்முதலாக `மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் `தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கிலேய அரசு தடை செய்தும்கூட, இவர் தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்.

    1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் `தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார். தொடர்ந்து, `மாலை மலர்' என்ற மாலைப் பத்திரிகையையும் `ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார். பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட யுக்திகளைக் கையாண்டார்.

    நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார். 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார். கருணாநிதி முதல்-அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றினார். தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாப் பற்று கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் "தமிழர் தந்தை" என அன்போடு அழைக்கப்படுகிறார்.

    சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந் தேதி அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.
    • மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல்.

    அண்ணா, எம்ஜிஆரை இழிச்சொல் உரைத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேடைகளில் சமத்துவம் கண்ட, அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாகக் கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும்,

    அண்ணா வழி திராவிடம் எனும் உயரிய நோக்கில் அதிமுக

    நிறுவி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக, மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் தலைவராக விளங்கிய நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும்,

    இழிசொல் உரைத்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கடும் கண்டனம்.

    மறைந்த தலைவர்களின் புகழை இழிவு படுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல்.

    தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற நம் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது.
    • திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளதே,உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதற்கு செல்வப் பெருந்தகை பதில் அளித்ததாவது:-

    எல்லோருக்கும் எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை உள்ளது. அவரவர் கருத்துகனை தெரிவிக்கின்றனர். எந்த கருத்து சொன்னாலும் காங்கிரஸ் மேலிடத்தில் அதை சொல்லி விடுகிறேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மட்டும்தான் முடிவு எடுக்கும்.

    என்னைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும். இது குறித்து பேசுவார்கள். இதை பெரிது படுத்த வேண்டாம். திமுக கூட்டணி உடையும் என்ற எடப்பாடி பழனிசாமிதான் உடைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போய்ட்டாங்க. தற்போது செங்கோட்டையன் போய்க்கொண்டிருக்கிறார். அதிமுக மூழ்கும் கப்பல். அதில் ஏற பயந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்னும் யார் யார் போவார்கள் என்று தெரியாது. பயத்தில் அச்சத்தில் அங்கு இருக்கிறார்கள். 5 தேர்தல்களில் தொடர் தோல்வி.. 6-வது தேர்தலில் இன்னும் அதைவிட மோசமான தோல்வியை அதிமுக தழுவப் போறாங்க.

    தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கிறது என்று யார் சொன்னது. உங்களுக்கு ஏன் இந்த பேராசை, நப்பாசை. 20 ஆயிரம் கமிட்டிகளை போட்டிருக்கோம். அதற்கான Database (தரவுகள்) மேலிடத்தில் உள்ளது. ஆயிரம் பொறுப்பாளர்களை நியமித்து கமிட்டிகளை போட்டிருக்கோம்.

    வேலூர் மாவட்டத்தில் கிராம கமிட்டி உள்ளது. கூட்டத்தில் கிராம கமிட்டி தலைவர் என ஒருவரை அறிமுகம் செய்துள்ளேன். காங்கிரசை பற்றி குறைத்த மதிப்பிடாதீர்கள். இது யானை மாதிரி. எந்திச்சி நின்னுன்னு வச்சிங்கோங்க, என்ன நடக்கும்..,

    விஜய் பற்றி கேள்வி கேட்காதீர்கள்.

    இவ்வாறு செல்லப்பெருந்தகை பதில் அளித்தார்.

    • செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார்.
    • செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த போராட்டமாக இருந்தாலும் எங்களது ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். சிவாஜி கணேசனை விட மிகவும் சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி.

    செந்தில் பாலாஜி தேர்தலின்போது மக்களுக்கு வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் தரப்பட்டுள்ளது.

    தேர்தல் முடியும் வரை தான் செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பார், தேர்தல் முடிந்த பின் எந்த கட்சியில் இருப்பார் என தெரியாது.

    கரூரில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு மணல் திருட்டு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியால் அவரையே காப்பாற்றிக் கொள்ள முடியாது, அவரை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
    • அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உதரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீர் நிலைகள், வனப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மரங்களை சர்வே எடுக்க வேண்டியுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்க இருப்பதால் மரங்களை கணக்கெடுப்பதற்கும், அவற்றை நீக்குவதற்கும் மேலும் 3 கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

    தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அகற்றவில்லை என்றால், அதற்கான செலவினங்களை நில உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கலாம். அவர்கள் அனுமிக்காவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அத்துடன், வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது. மரங்களை அகற்றுவது தொடர்பாக திட்டங்களை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அன்று உரிய பதிலை அளிக்காவிடில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனத் தெரிவித்தனர்.

    • நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
    • பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

    கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், தவெக-வுக்கு 11 நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி விதித்துள்ளது.

    நிபந்தனைகள் வருமாறு:

    நிகழச்சி நடத்தும் இடத்தில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் பிளக்ஸ், பேனர் வைக்கக்கூடாது, அதன்மீது தொண்டர்கள் ஏற கூடாது.

    நிகழ்ச்சி நடைபெறும்போது தவெக தொண்டர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பாத வண்ணம் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

    ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும், முதலுதவி சிகிச்சைக்கான முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்.

    கூட்டத்தை முறையாக நடத்த தீயணைப்பு துறையினர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடமும் அனுமதி பெற வேண்டும்.

    திருக்காம்புலியூர் ரவுண்டானா தேசிய நெடுஞ்சாலை என்பதால் ரோடு ரேஷ நடத்த தடை, கூட்டம் முடிந்ததும் கொடி, பேனரை அற்ற வேண்டும்.

    பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்இடி திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் மக்களை சந்தித்து வருகிறார்.
    • மக்களை ஒருநாள் சந்தித்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் வெறும் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். இன்னைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது. வெள்ளிக்கிழமையா..,

    நான் பல மாவட்டங்களுக்கு போகும்போது அங்கு மக்கள் கூட்டமாக நிற்பார்கள். மனுக்களுடன் நிற்பார்கள். தாய்மார்கள் நிற்பார்கள். நான் வண்டியை நிற்கச் சொல்லுவேன். நிறைய பேர் மனுக்குள் கொடுப்பார்கள். நிறைய பேர் பாராட்டுவார்கள். நிறைய பேர் வாழ்த்துவார்கள். தம்பி, அப்பாட்ட சொல்லிடுங்க.., 1000 ரூபாய் வந்திருச்சி. தேங்க்ஸ். அப்படி பேசி வாழ்த்தியிருக்காங்க.

    ஆயிரம் ரூபாய் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 90 சதவீதம் பேர் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துகிறேன் என்பார்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்த நிலையில், கட்சி தொண்டர்களின் நலனிற்காகத்தான் சனிக்கிழமையை தேர்வு செய்தேன் என விஜய் பதில் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

    • இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.
    • 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

    அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நம்முடைய அரசு அமைந்த இந்த 4½ வருடத்தில் மட்டும், இன்றைக்கு வரை சுமார் 4 ஆயிரத்து 510 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார்.

    4 வருடத்தில் மட்டும் இந்தியாவுலேயே இந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும், இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.

    இன்றைக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்திருக்கிறோம் என்றால், அதற்கும் நம்முடைய முதல்-அமைச்சர் தான் காரணம்.

    பொதுவாக, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த பிறகு தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு அந்த அங்கீகாரத்தை கொடுக்கும், அந்த பரிசுத்தொகை கொடுக்கும்.

    ஆனால், நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அரசு மட்டும் தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னாடியே அந்த வீரர்களை அழைத்து அவர்களுக்கான ஊக்கத் தொகையை, முன்னாடியே நிதி உதவியை செய்கின்றது நம்முடைய அரசு. நிதி உதவி மட்டும் அல்ல, நீங்கள் வெற்றி பெற்று வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அரசு வேலையையும் நம்முடைய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த வருடம் 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.

    அந்த வகையில், இன்றைக்கு உங்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்து இருக்கின்றோம். நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று வரும் போது, நம்முடைய முதல்-அமைச்சர் உங்களுக்கு அரசு வேலையும் நிச்சயம் பெற்றுத் தருவார்.

    இந்த அளவுக்கு, தமிழ்நாட்டினுடைய விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

    அதில் ஒரு சில பேரை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றீர்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த மேடையில் 2 பேரை அமர வைத்திருக்கின்றோம்.

    அதில் ஒருத்தர், தம்பி ஆனந்த்குமார் வேல்குமார் இங்கே வந்து இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரரான தம்பி ஆனந்த்குமார், சமீபத்தில் சீனாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, இன்றைக்கு ஒட்டு மொத்த உலகத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 மெடல் வென்றிருக்கிறார் ஆனந்த்குமார்.

    இதன் மூலம் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை ஆனந்த்குமார் இன்றைக்கு படைத்திருக்கிறார். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு நம்முடைய அரசு, நாம் அத்தனைபேரும் அவருக்கு துணை நிற்போம்.

    அதே மாதிரி, இங்கு வந்திருக்கக்கூடிய செஸ் கிராண்ட் மாஸ்டர்என்று போற்றப்படும் வைஷாலி. சில நாட்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டு வந்துள்ளார்.

    வைஷாலிக்கும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×