என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

    நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.

    இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

    நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17-ந் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதா கைகள் வைக்கப்ப ட்டள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது.
    • போராட்டத்தில் மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பின் சார்பில் சென்னை மூர் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 8-ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கியது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கலந்து கொண்டு பேசினார்.

    தொழிலாளர் விரோதப் போக்கில் ஈடுபடும் மத்திய அரசு தனது நிலையை மாற்ற வேண்டும், ரெயில்வே துறையில் தனியார் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    போராட்டத்தில் மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
    • வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தெத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி, ஆலத்தியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆவார்.

    இன்று அதிகாலை நல்லதம்பியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிக்கப்பட்டது. இதுகுறித்து தளவாய் போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் டாஸ்மாக் பார் ஏலம் மற்றும் மணல் குவாரி தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதனால் பைக் எரிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பைக் பக்கத்தில் கார் இருந்துள்ளது.

    வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை. கிராமத்தில் மற்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஏதாவது பதிவுகள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
    • டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இதுகுறித்து கந்தசாமி அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இன்று கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மாரியம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

    இதையொட்டி அங்கு டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
    • சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மேயராக சரவணன் இருந்து வருகிறார்.

    அவர் மேயராக பொறுப்பேற்றது முதல் அவருக்கும், கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் திருச்சி சென்று அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து தங்களது புகார்களை எடுத்துக்கூறினர்.

    தொடர்ந்து வார்டுகளில் பணி நடைபெறவில்லை. மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு முன்னெடுப்புகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வந்தனர்.

    இதனால் மாமன்ற கூட்டங்களையும் அவர்கள் புறக்கணித்து வந்ததால் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் அதன் பின்னரும் மாமன்ற கூட்டங்கள் நடைபெற்ற போது அதில் முறையாக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒரு கட்டத்தில் வார்டுகளில் பணி நடைபெறாததை கண்டித்து மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 2 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் ஆகியோரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்டு' செய்து தி.மு.க. தலைமை உத்தரவிட்டது.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சுமார் 38 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனருக்கு கையெழுத்து போட்டு மனு அளித்தனர்.


    அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்கள் உண்மையானது தானா என்பதை அறிய ஒவ்வொரு கவுன்சிலரையும் நேரில் அழைத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜனவரி 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மாமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அதில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கமிஷனர் அறிவித்தார்.

    இந்நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல சேர்மன்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவுன்சிலர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

    எனவே தலைமை உத்தரவை ஏற்று நாளை (12-ந்தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தை புறக்கணிக்க கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    இன்றும் சில கவுன்சிலர்கள் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கெடுக்க மாட்டார்கள் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் மோடியின் பலத்துக்கு நிகராக யாரும் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வாக்களித்தவர்கள் அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். அதை எண்ணி பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது காங்கிரசுக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகங்கை தொகுதியில் இருந்து பலர் புகார் கடிதங்களை டெல்லி தலைமைக்கு அனுப்பினார்கள். இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

    மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கார்த்தி சிதம்பரம், எம்.பி. மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருப்பதால் தமிழக காங்கிரசால் நடவடிக்கை எடுக்க இயலாது.

    எனவே அவர் மீது வந்த புகார்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    கார்த்தி சிதம்பரம் விரைவில் விளக்கம் அளித்து கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை டெல்லி மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
    • விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களை சேர்ந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. சென்னையில் பணி நிமித்தமாக தங்கி இருப்போர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல் இந்த ஆண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பல இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் நாளை (12-ந்தேதி) முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்களும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகிறது.

    திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களை சேர்ந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. டிசம்பர் 12-ந்தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம்.

    நாளை முதல் 14-ந்தேதி வரை அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய வசதிவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், பஸ்கள் இயக்கப்படுவது குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினமும் இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,830 சிறப்பு பஸ்களும், மற்ற நகரங்களுக்கு 6,459 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    சர்வதேச ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் , கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அதேபோல் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் வந்த குழுவில் பலர் இடமாறி சென்றுவிட்டனர். பலமணிநேரம் கழித்து ஒருவரையொருவர் தேடிபிடித்து கண்டுபிடித்த நிலையில் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவில்லை என தெரியவந்தது. மீண்டும் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி புண்ணிய தலமாக விளங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் தங்கள் யாத்திரையை தொடங்குவது வழக்கம். சுருளி மலைப்பகுதியில் ஐயப்பன்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் செய்யப்படும் கலசபூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மண்டலஅபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.


    இதனை அறிந்து சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சுருளியில் உள்ள ஐயப்பன்கோவிலில் நெய்தேங்காயை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷகேம் செய்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகிறோம். ஆனால் இந்த ஆண்டுபோல எப்போதும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதே கிடையாது. எங்களை போன்றே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்யமுடியவில்லை.

    இதனால் ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டள்ளது. போலீசாரின் கெடுபிடியால் 18-ம் படியை கூட தொட முடியவில்லை. ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போலவே சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். 2 நாள் தங்கிஇருந்துகூட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் முடிவுசெய்வார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர்:

    சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 92-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதேப்போல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.
    • எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 'தமிழ் வெல்லும்' எனும் கருப்பொருளை மையமாக கொண்டு 'அயலகத் தமிழர் விழாவை' நடத்தி வருகிறது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விழாவில், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இன்று நடைபெற்ற முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பார்வையிட்டார். அயலக தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு அயலக தமிழ் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக அயலக தமிழர் தின நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாளைய தினம் நம்முடைய முதலமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிறைவுரையாற்ற உள்ளார்.

    இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.

    இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

    நம்முடைய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் நடைபெறுகின்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    அப்படி வரும் போது அவர்களை களத்தில் ஊக்குவிப்பவர்களாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறீர்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அயலக தமிழர்கள் நலன் மீது நம்முடைய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    முன்பைவிட நம்முடைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும் தங்கி இருக்கிறீர்கள்.


    எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த துறையை நமது அரசு உருவாக்கியது.

    முன்பெல்லாம் வெளிநாட்டில் வேலை என்று கூறி டிராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றினார்கள் என்ற செய்திகளை பார்ப்போம். ஆனால் அந்த நிலை இன்றைக்கு பெருமளவு மாறி இருக்கிறது. ஏனென்றால் அயலக தமிழர் நலத்துறை மேற்கொண்ட பணிகளே இதற்கு முக்கிய காரணம். வெளிநாடுகளில் தமிழர்கள் மிக முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.

    வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அயலகத் தமிழர் துறை அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் தி.மு.க. பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி.பேசும் போது கூறியதாவது:-

    தமிழர்களின் நம்பிக்கை அரணாக தி.மு.க. விளங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இது ஏதோ எப்போதும் போல் வந்து போகிற தேர்தல் அல்ல. இந்த தேர்தலின் முடிவுதான் உலக அரங்கில் தலை சிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது நிலைக்கப் போகிறதா? அல்லது தடம் மாறி அது போகப்போகிறதா? என்று தீர்மானிக்க போகிற தேர்தல்.

    மத்தியில் இன்றைக்கு இருக்கிற ஆட்சி அகல வேண்டும். நம்முடைய 'இந்தியா கூட்டணி' வெல்ல வேண்டும்.

    தமிழகத்தை நம்பி வடபுலம் காத்திருக்கிறது. தமிழகத்தை நம்பி இந்தியா காத்திருக்கிறது. நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் 40 தொகுதிகளையும் வென்று கொண்டு போய் நாங்கள் தான் தன்னிகரற்றவர்கள் என்று காட்ட போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன.
    • போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பின்னர் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. 57 பெண் காவலர்கள் தங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் காவலர்களும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்களும் இந்த அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுகளுக்கு வருபவர்களுக்கு இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தினமும் 100 ரூபாய் கொடுத்து இங்கு தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேள்வி: இரவு நேரத்தில் பெண் போலீசாரிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் எதிரொலியாக அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுமா?

    பதில்: சென்னை மாநகரம் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாகும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் என்று புள்ளி விவரங்களும் கூறுகின்றன. எனவே இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கிகளை கொடுக்க தேவையில்லை.

    கேள்வி: சென்னையில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளதே?

    பதில்: போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசாரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடமாற்றம் தொடர்பான முதல் பட்டியல் வருகிற 31-ந்தேதி வெளியாகும்.

    இவ்வாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

    • தி.மு.க.நீட் எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றுக்கின்றனர்.
    • மத்திய அமைச்சர்கள் 76 பேர் மீது குண்டூசி ஊழல் செய்ததாக கூட குற்றச்சாட்டு கிடையாது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட போது பொதுமக்களிடம் பேசியதாவது :-

    என் மண், என் மக்கள் யாத்திரை அரசியல் மாற்றத்தை கொடுக்கும். ஊழல் என்னும் பெருச்சாளி இருந்தால் நாடு வளர்ச்சி பெறாது.

    ஊழல் இல்லாத மோடி ஆட்சியில், உலகநாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் 76 பேர் மீது குண்டூசி ஊழல் செய்ததாக கூட குற்றச்சாட்டு கிடையாது.

    ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஊழல் வழக்கில் பொன்முடிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் சிறைக்கு செல்வார். ஊழல் வழக்கில் 6 மாதம் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு, எவ்வித மக்கள் பணிகள் செய்யாமலே, இலாகா இல்லாத அமைச்சராக மாதம் ரூ.1.05 லட்சம் ஊதியம் பெறுகிறார். அடுத்த 3 அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல உள்ளனர்.

    2016-ம் ஆண்டு நீட்தேர்வு வந்தபிறகு ஏழை, விவசாய குடும்பத்தில் இருந்து மாணவர்கள் பலர் மருத்துவபடிப்பில் சேர்ந்துள்ளனர்.

    தி.மு.க.நீட் எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றுக்கின்றனர்.

    5 முறை தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. 5 அரசு மருத்துவக் கல்லூரிகள், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்கியது. ஆனால் 9 ஆண்டுக்கால மோடி ஆட்சியில் தமிழகத்தில் 15 அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட 2,250 மருத்துவ இடங்கள் உருவாக் கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிதியை பெருக்குவதற்காக தான் நீட்டை தி.மு.க. எதிர்க்கிறது. செவிலியர்கள், டெட் தேர்வை எழுதிவிட்டு ஆசிரியர் பணிக்காக காத்தி ருப்பவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என தமிழகத்தில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காமராஜர் ஆட்சிக் காலத்தில் 18 ஆயிரம் பள்ளிக் கூடங்களை கட்டினார். தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் வகுப்பறைகள் கட்டிடங்கள் இல்லாமல், ஒரே வகுப்பறையில் 1-ம், 2-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க வேண்டி நிலை உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு ஒரு ரேஷன் அட்டை மீதும் ரூ.3.61 லட்சம் கடன் உள்ளது.

    மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 கொடுத்துவிட்டு, 20 சதவீதம் மின்கட்டணம், 30 சதவீதம் சொத்துவரி, பால், தயிர் விலைகளை உயர்த்திவிட்டனர். அப்படி என்றால், மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க.பித்தலாட்டம் செய்கிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், மோடி தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்து சென்றுள்ளார். திருக்குறள் பெருமையை பேசுகிறார். எனவே, 3வது முறையாக மோடியை பிரதமராக அவரது கரத்தை அனைவரும் வலுப்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×