search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli City Municipal Corporation"

    • ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.
    • சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மேயராக சரவணன் இருந்து வருகிறார்.

    அவர் மேயராக பொறுப்பேற்றது முதல் அவருக்கும், கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் திருச்சி சென்று அமைச்சர் கே.என். நேருவை நேரில் சந்தித்து தங்களது புகார்களை எடுத்துக்கூறினர்.

    தொடர்ந்து வார்டுகளில் பணி நடைபெறவில்லை. மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு முன்னெடுப்புகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வந்தனர்.

    இதனால் மாமன்ற கூட்டங்களையும் அவர்கள் புறக்கணித்து வந்ததால் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் அதன் பின்னரும் மாமன்ற கூட்டங்கள் நடைபெற்ற போது அதில் முறையாக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஒரு கட்டத்தில் வார்டுகளில் பணி நடைபெறாததை கண்டித்து மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 2 கவுன்சிலர்கள் மற்றும் ஒரு பெண் கவுன்சிலரின் கணவர் ஆகியோரை கட்சியில் இருந்து 'சஸ்பெண்டு' செய்து தி.மு.க. தலைமை உத்தரவிட்டது.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சுமார் 38 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனருக்கு கையெழுத்து போட்டு மனு அளித்தனர்.


    அந்த மனுவில் உள்ள கையெழுத்துக்கள் உண்மையானது தானா என்பதை அறிய ஒவ்வொரு கவுன்சிலரையும் நேரில் அழைத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜனவரி 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மாமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் அதில் கவுன்சிலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் கமிஷனர் அறிவித்தார்.

    இந்நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என கட்சி தலைமை கருதியது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல சேர்மன்கள், மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவுன்சிலர்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

    எனவே தலைமை உத்தரவை ஏற்று நாளை (12-ந்தேதி) நடைபெறும் மாமன்ற கூட்டத்தை புறக்கணிக்க கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குற்றாலம், கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

    இன்றும் சில கவுன்சிலர்கள் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கெடுக்க மாட்டார்கள் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ×