என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை.
    • சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதாரணமாக ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவரை ஊக்குவிக்கும் விதத்தில் எந்த பொதுத்துறையின் தலைவரும் அரசு பொறுப்பில் இருப்பவர்களும் நடக்கக்கூடாது.

    அது சிறந்த முன் உதாரணமாக இருக்காது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை ஒரு கவர்னர் சந்தித்திருப்பது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும். நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு பொறுப்புகளை வழங்குவது போன்ற செயல்களில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது.

    இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். இதைத்தான் ஒரு பாசிச அணுகுமுறை என்று நாம் சொல்கிறோம். தாங்கள் சொல்வது தான் முடிவு. நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று பாரதிய ஜனதா செய்து வருகிறது. தங்களுடன் இருப்பவர்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்றும் தங்களை சார்ந்து இருப்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற மனநிலையில் தான் பா.ஜ.க.வினர் உள்ளனர்.

    அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. சங்கராச்சாரியார்கள் 2 பேர் முக்கியமான கருத்தை வலியுறுத்தியுள்ளனர். ஒன்று அவர்கள் தர்ம ஆச்சாரப்படி அது நடைபெறவில்லை.

    இன்னொன்று ஒரு கட்டி முடிக்கப்படாத கோவிலை திறந்து வைப்பது என்று கூறியுள்ளனர். ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக ஏன் அதை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் கேட்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். பாரதிய ஜனதா அவர்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

    எல்லா விஷயங்களிலும் சங்கராச்சாரியார்களிடமும் மத குருக்களையும் கருத்துகள் கேட்கும் அவர்கள் சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள். இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதில் சொல்ல வேண்டும். சங்கராச்சாரியார்கள் சொல்வதை பார்த்தால் தேர்தலுக்காக இந்த பிரச்சனையை அவர் கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளி விலையில் கடந்த 2 நாட்களாக எந்தவித மாற்றமுமில்லை.
    • ஒரு கிராம் ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,820-க்கும் சவரன் ரூ.46,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் கடந்த 2 நாட்களாக எந்தவித மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது.
    • தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    மேலும் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் அருகில் உள்ள கிராமத்தையும் தென்னை, பனை, வாழைத்தோட்டங்களிலும் புகுந்தது.

    குறிப்பாக உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். சிலர் தற்காலிக படகு மூலம் தோட்டத்திற்கு சென்று பார்த்து வந்தனர். தண்ணீர் உடனடியாக வடிந்துவிடும் என்பதால் வாழைத்தார்களை வெட்டி விற்றால் வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது. எனினும் விவசாயிகள் தண்ணீரில் நீந்திச்சென்று வாழைத்தார்களை வெட்டி எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 25 நாட்களாக தண்ணீர் வடியாமல் தோட்டங்களில் தேங்கி கிடக்கிறது. கிராமம் என்பதால் யாரும் எங்களை கவனிக்கவில்லை. எனினும் வாழ்வாதாரத்திற்காக வாழைத்தார்களை தண்ணீரில் நீந்திச் சென்று வெட்டி எடுத்து வருகிறோம்.

    எனவே தோட்டங்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வழக்குகளை பார்த்து, அ.தி.மு.க.வினர் பயப்படமாட்டார்கள்.
    • விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமிதான், மு.க.ஸ்டாலினுக்கு மாற்று.

    மதுரை:

    மதுரையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை அரசு வக்கீல் பழனிசாமி, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, செல்லூர் ராஜூ ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, நேற்று அவர் கோர்ட்டு்க்கு வந்து நீதிபதி சிவகடாட்சம் முன்னிலையில், ஆஜராகி விளக்கம் அளித்தார். வழக்கு அடுத்த மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த செல்லூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உண்மையைத்தான் கூறினேன். இல்லாததை பேசவில்லை. அரசின் நிலை குறித்துதான் பேசினேன். அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு 'சுஜூபி'. பொதுவாழ்க்கைக்கு வந்தால், மாலை வரும், மரியாதை வரும். ஜெயிலும் வரும். எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்குகளை பார்த்து, அ.தி.மு.க.வினர் பயப்படமாட்டார்கள்.

    விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமிதான், மு.க.ஸ்டாலினுக்கு மாற்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த தடைகோரிய வழக்கு குறித்து கேட்டபோது, "நாங்கள் புலிவேட்டைக்கு செல்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்" என கூறிச்சென்றார்.

    இதனை தொடர்ந்து செல்லூர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்கள் ஊர்வலமாக வந்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3-வது முறையாக ஜாமின் கேட்டு மனு.

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களை காட்டி ஜாமின் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

    இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டார்.

    அன்றைய தினம் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதால் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
    • ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்பு வழங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், அதற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள், 2 ஆண்டு பி.எட். பட்டப்படிப்பை தேர்வு செய்கின்றனர். இதற்கிடையில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். பட்டப்படிப்பை என்.சி.இ.டி. (தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்) கடந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்தது. இருப்பினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 2 ஆண்டு பி.எட். பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், 2024-25-ம் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு சிறப்பு பி.எட். பட்டப்படிப்புகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு புதிய அங்கீகாரம் வழங்கப்படாது என்று இந்திய மறுவாழ்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்.சி.ஐ.) உறுப்பினர் செயலாளர் விகாஸ் திரிவேதி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 2 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்பு ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்புகாக மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, 2024-25-ம் கல்வியாண்டில் எந்த ஒரு கல்வி நிறுவனங்களுக்கும் 2 ஆண்டு சிறப்பு பி.எட்., பட்டப்படிப்புக்கான புதிய அங்கீகாரம் வழங்க வேண்டாம் என கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்பு வழங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், அதற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமோனியா கொண்டு செல்லும் குழாவில் பாதிப்பு ஏற்பட்டு வாயு வெளியேறியது.
    • பொதுமக்கள் கண் எரிச்கல், வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டனர்.

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த உரத் தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அந்த அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 26-ந்தேதி இரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது. இதனால் வாயு காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. இதனால் மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடரந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் அமோனியா கசிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் தனி செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
    • 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய கட்டடம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு தற்காலிகமாக மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மதுரை தோப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவு.
    • போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும்.

    அரசு போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதில், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 151 நாள் முதல் 199 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.195 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள், சாதனை ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

    மேலும், போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    • கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
    • கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்று (11-ந் தேதி) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இதையடுத்து அவர் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சயான் ஆஜராகவில்லை என அவரது தரப்பில் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சயான் கேரளாவில் மற்றொரு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், அதன் காரணமாக அவரால் இன்று கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சயானிடம் வேறு ஒரு நாளில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர்.

    தமிழ்நாட்டின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர்.

    கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். 2017-ம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஈஷாவிற்கு வரும் மக்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

    மேலும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழுவாக வரும் அந்த பக்தர்கள் சமைத்து உண்பதற்காக, வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே தனி இடவசதியும், கூடுதலாக இலவச கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோவையின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.

    மேலும், ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம், கோவையில் ஆன்மிக சுற்றுலாவுடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

    நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.

    இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

    நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17-ந் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதா கைகள் வைக்கப்ப ட்டள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×