என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்.
    • இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது.

    சென்னை:

    சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் நாள் என்றும் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் எனக்கு மருந்து.
    • எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலக தமிழர் தினவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உடல் நிலை பற்றி பேசியதாவது:-

    எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வரும்போது நீங்கள் எப்படி மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பீர்களோ அதே மாதிரி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் 3-வது முறையாக இந்த அயலகத் தமிழர் திருநாளில் உங்களது தாய் மண்ணுக்கு வரவேற்பதில் ரொம்ப மகிழ்ச்சி.

    எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்பு தான் வந்தது.

    எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறபோது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு.

    நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுறாங்க. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் ரூ.1000 வந்து விட்டது. பொங்கல் பரிசாக ரூ.1000 வந்து விட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்து விட்டது. வெள்ள நிவாரணமாக ரூ.6000 கிடைத்துவிட்டது.

    ஒரு மாதத்தில் முதலமைச்சரே 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். பொங்கலுக்கு யாரையும் நான் எதிர்பார்க்க தேவை இல்லை என்று அந்த சகோதரி பேட்டி கொடுத்து உள்ளார். அவர் முகத்தில் பார்க்கிற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து.

    எனக்கு மக்களை பற்றி தான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் என்னோடு மக்கள் உள்ளனர். மக்களோடு இருப்பவன் தான் நான்.

    என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இது மாதிரி செய்திகளை ஒதுக்கிவிட்டு உழைத்துக்கொண்டே இருப்பேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கம்.
    • ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு.

    சென்னை :

    பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று முதல் 14-ந்தேதி வரை இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்கள் வருமாறு:-

    * மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கம்.

    * கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கம்.

    * தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (MEPZ) இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள். (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக)

    * வள்ளுவர் மேல்நிலைப்பள்ளி நிறுத்தம் குருகுலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.

    * பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.



    * புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம். கோயம்பேட்டில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி கோட்டத்தை சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திட்டக்குடி, காரைக்குடி திருப்பூர். பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள் பெங்களூரு மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி.

    * கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து (KCBT) இயக்கப்படும் பேருந்துகள்:- தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட தடங்கள்.

    திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம் கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

    மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த / முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

    மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிய மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிக்க (2007 கட்டுப்பாட்டு அறை) 94450 14450, 94450 14436

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் குறித்து புகார் தெரிவிக்க (2637 கட்டுப்பாட்டு அறை) 1800 425 6151 )Toll Free Number மற்றும் (044-24749002, 044-26280445, 044-26281611)

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர்
    • ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து அரசின் அனுமதியை பெற்றனர்.

    வார நாட்களில் ஆம்னி பஸ்கள் காலியாக ஓடுவதாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இடங்கள் நிரம்புவதாகவும் இதனால் ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்து கட்டணத்தை நிர்ணயித்தனர். ஏ.சி. இருக்கை, படுக்கை, ஏசி இல்லாத பஸ்களில் இருக்கை, படுக்கை என கட்டணங்களை பஸ்சின் வசதிக்கேற்ப நிர்ணயித்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தேவை அதிகரித்து வருவதால் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏற்கனவே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் தேவையை அறிந்து மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    ஒரு சில ஆம்னிபஸ் ஆபரேட்டர்கள் தாங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு புஷ்பேக் இருக்கை கட்டணம் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலித்தனர். தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தினர். படுக்கை கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தது. அவை ரூ.2000 ரூ.2,500 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலித்த நிலையில் தற்போது ரூ.3000 வரை வசூலிக்கின்றனர்.


    ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.4000 வசூலிப்பதாக தென் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அதை விட கூடுதலாக ரூ.4,500 வரை பெறப்படுகிறது.

    ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.3,140 ஆகும். கூடுதலாக 1000 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதே போல திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி பொதுமக்களிடம் பல மடங்கு கூடுதாக வசூலிக்கும் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    ஆம்னி பஸ்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வெளிப்படையாக நடக்கும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

    இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பஸ்களை பறிமுதல் செய்வதோடு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.
    • 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில 15 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

    ஓசூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் அண்ணாமலை பேசியதாவது:

    எந்த ஊருக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஓசூருக்கு உண்டு. இங்கு தான் குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கப்படுகிறது. இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. என்ற தீய சக்தியை அடியோடு வேறறுப்பது தான் என் மண் என் மக்கள் பயணத்தின் நோக்கம். உதயநிதி ஸ்டாலின் பட்டத்து இளவரசனாக திகழ்ந்து வருகிறார்.

    சேலம் இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அவரை துணை முதல்வராக்க கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் மோடி, தனது மந்திரிசபையில் அறிவாளிகளை மந்திரிகளாக்கி உள்ளார். குடும்ப ஆட்சி வந்தால் நிர்வாகம் கரையான் போல் அரித்து விடும். பா.ஜனதா கட்சியின் பிரச்சார பீரங்கியாக இன்று காங்கிரஸ் கட்சி மாறி வருகிறது.

    பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தமிழ்நாட்டில் 13,000 வகுப்பறைகள் குறைவாக உள்ளன. 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. 5 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது. ஆனால் 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில 15 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

    2024 நாடாளுமன்ற தேர்தல், இந்தியாவின் வளர்ச்சிக்கான தேர்தல். பிரதமர் மோடியை 3-வது முறை பிரதமராக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். 150-வது சட்டமன்ற என் மண் என் மக்கள் யாத்திரை, ஓசூரில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், முன்னாள் எம்.பிக்கள் கே.பி.ராமலிங்கம்,. நரசிம்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், சி.டி.ரவி ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், விஜயகுமார், சீனிவாசன் பிரவீண்குமார், மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஓசூர் ஜி.ஆர்.டி சர்க்கிளில் இருந்து அண்ணாமலை திறந்த வேனில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மக்களை சந்தித்தார். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    • சுவாமி விவேகானந்தர் உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.
    • காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்.

    சென்னை :

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இந்திய தேசியவாதத்தின் உச்சபட்ச அடையாளமாகவும், இளைஞர்களுக்கு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய உத்வேகமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தர், உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.

    அவருடனான தொடர்பை எந்தளவுக்கு அதிகமாக கொள்கிறீர்களோ அந்தளவுக்கு, சுயத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய பணிகள் மூலம் தேசத்துக்கான கடமைகளை ஆற்றுவதில் நீங்கள் அதிக உற்சாகம் பெறுவீர்கள்.

    காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்" என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லட்சுமிபதியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    • 2 குழுக்களாக பிரிந்து சென்று மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய ஆய்வுக்குழுவினர் இன்று தூத்துக்குடி வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினரின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மத்திய ஆய்வு குழுவை சேர்ந்த கே.பி. சிங், ரங்கநாத் ஆதம், தங்கமணி, டாக்டர் பொன்னுச்சாமி, ராஜேஷ் திவாரி, பாலாஜி, விஜயகுமார் ஆகிய 7 பேர் கொண்ட குழு மற்றும் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனர் பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின்போது மத்திய ஆய்வு குழுவினர் பேசுகையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகை தந்துள்ளோம்.

    தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளோம். இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், பெருஞ்சாணி, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணை கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    வெள்ளம் மற்றும் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், சாலைகள், மக்கள் வசிப்பிட பகுதிகள் எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினர்.

    ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து ஆய்வு குழுவினர் குழுக்களாக பிரிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் கோரம்பள்ளம் குளம், நெல்லை-தூத்துக்குடி சாலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி உட்பட பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.
    • தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறு வது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் வந்திருந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் இந்த சந்தையில் காணப்படும்.

    இந்நிலையில் ஆட்டுச் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 7,000 முதல் 10,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயி ரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். கட்டுக்கடங்காத கூட் டத்தில் ஆடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் ஆட்டுச் சந்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது ஆடுகளின் வரத்து கூடுதலாக இருப்பதாலும் ஆடுகள் தொடர்ந்து விலை ஏற்றத்தின் காரணமாக ஆடுகள் விற்பனை செய்பவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    • தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் மருதமலையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் முருக பெருமானின் 7-வது வீடு என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது மார்கழி மாதம் என்பதாலும், தைப்பூசம் நெருங்கி வருவதாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

    ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், இங்கு வந்து முருகபெருமானை தரிசித்து விட்டு ஐயப்ப பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இதனால் தற்போது அனைத்து நாட்களிலுமே மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மைக்காலமாக மருதமலை முருகன் கோவில் பகுதி மற்றும், அடிவார பகுதிகளில் வனவிலங்குகள் நடமா ட்டம் காணப்படுகிறது.

    குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

    நேற்று இரவு 7 மணிக்கு பக்தர் ஒருவர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தனது காரில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடிவார பகுதியில் அருகே வந்த போது 3-வது வளைவில் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நின்றிருந்தது.

    இது காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை சற்று தூரத்தில் நிறுத்தினார். மேலும் தனது செல்போனை எடுத்து, அதில் சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்தார்.

    இருளாக இருந்த இடத்தில் வெளிச்சம் ஏற்பட்டதை பார்த்ததும் சிறுத்தை வேகவேமாக ஓடி வனத்திற்குள் சென்று மறைந்து கொண்டது.

    இதையடுத்து பக்தர் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டு கீழே வந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு கோவில் பகுதியில் தேர் நிறுத்தி வைத்திருக்கும் இடம் மற்றும் மலைப்படிக்கட்டில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது மீண்டும் மருதமலை முருகன் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தைப்பூசம் நெருங்கி வருவதால் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள். இந்த நேரத்தில் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வனத்து றையினர் கோவிலு க்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மருதமலை மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவன த்துடன் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும். மலைப்பாதையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவன த்துடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

    இதற்கிடையே மருதமலை முருகன் கோவில் மலைப்பாதையில் சிறுத்தை சுற்றி திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார்.
    • விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    நடிகரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயகாந்தின் எக்ஸ் தள கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா மாற்றியுள்ளார். தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளரான பிரேமலதா @imPremallatha என மாற்றியுள்ளார்.

    ×