search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்னி பஸ்களில் ரூ.4000 கட்டணம்- தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சி
    X

    ஆம்னி பஸ்களில் ரூ.4000 கட்டணம்- தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சி

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர்
    • ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து அரசின் அனுமதியை பெற்றனர்.

    வார நாட்களில் ஆம்னி பஸ்கள் காலியாக ஓடுவதாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இடங்கள் நிரம்புவதாகவும் இதனால் ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்து கட்டணத்தை நிர்ணயித்தனர். ஏ.சி. இருக்கை, படுக்கை, ஏசி இல்லாத பஸ்களில் இருக்கை, படுக்கை என கட்டணங்களை பஸ்சின் வசதிக்கேற்ப நிர்ணயித்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தேவை அதிகரித்து வருவதால் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏற்கனவே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் தேவையை அறிந்து மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    ஒரு சில ஆம்னிபஸ் ஆபரேட்டர்கள் தாங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு புஷ்பேக் இருக்கை கட்டணம் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலித்தனர். தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தினர். படுக்கை கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தது. அவை ரூ.2000 ரூ.2,500 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலித்த நிலையில் தற்போது ரூ.3000 வரை வசூலிக்கின்றனர்.


    ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.4000 வசூலிப்பதாக தென் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அதை விட கூடுதலாக ரூ.4,500 வரை பெறப்படுகிறது.

    ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.3,140 ஆகும். கூடுதலாக 1000 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதே போல திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி பொதுமக்களிடம் பல மடங்கு கூடுதாக வசூலிக்கும் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    ஆம்னி பஸ்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வெளிப்படையாக நடக்கும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

    இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பஸ்களை பறிமுதல் செய்வதோடு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×