என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2024 பாராளுமன்ற தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல்- அண்ணாமலை
    X

    2024 பாராளுமன்ற தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல்- அண்ணாமலை

    • பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.
    • 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில 15 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

    ஓசூர்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் அண்ணாமலை பேசியதாவது:

    எந்த ஊருக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஓசூருக்கு உண்டு. இங்கு தான் குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கப்படுகிறது. இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. என்ற தீய சக்தியை அடியோடு வேறறுப்பது தான் என் மண் என் மக்கள் பயணத்தின் நோக்கம். உதயநிதி ஸ்டாலின் பட்டத்து இளவரசனாக திகழ்ந்து வருகிறார்.

    சேலம் இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அவரை துணை முதல்வராக்க கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் மோடி, தனது மந்திரிசபையில் அறிவாளிகளை மந்திரிகளாக்கி உள்ளார். குடும்ப ஆட்சி வந்தால் நிர்வாகம் கரையான் போல் அரித்து விடும். பா.ஜனதா கட்சியின் பிரச்சார பீரங்கியாக இன்று காங்கிரஸ் கட்சி மாறி வருகிறது.

    பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டுமென்றால் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும். தமிழ்நாட்டில் 13,000 வகுப்பறைகள் குறைவாக உள்ளன. 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. 5 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது. ஆனால் 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில 15 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

    2024 நாடாளுமன்ற தேர்தல், இந்தியாவின் வளர்ச்சிக்கான தேர்தல். பிரதமர் மோடியை 3-வது முறை பிரதமராக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். 150-வது சட்டமன்ற என் மண் என் மக்கள் யாத்திரை, ஓசூரில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், முன்னாள் எம்.பிக்கள் கே.பி.ராமலிங்கம்,. நரசிம்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், சி.டி.ரவி ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், விஜயகுமார், சீனிவாசன் பிரவீண்குமார், மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஓசூர் ஜி.ஆர்.டி சர்க்கிளில் இருந்து அண்ணாமலை திறந்த வேனில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மக்களை சந்தித்தார். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×