என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
- பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சுவாமி விவேகானந்தர் ஒரு பிரபல ஆன்மீகத் தலைவர், இந்து துறவி, தத்துவ வாதி, எழுத்தாளர். 1863-இல் நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்த விவேகானந்தர், பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாணவராகவும், வேதாந்தம் மற்றும் யோகா போன்ற இந்தியக் கருத்துகளின் உலகளாவிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார். சுவாமி விவேகானந்தர் 19 ஆம் நூற்றாண்டில் கொல்கத்தாவில் தனது குருவின் போதனைகளின் அடிப்படையில் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
ராமகிருஷ்ணா மிஷன் என்று அழைக்கப்படும் ஆன்மீக இயக்கம், வேதாந்தத்தின் பண்டைய இந்து தத்துவத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இந்தியா ,1984 ஆம் ஆண்டு விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது, அதன்பிறகு ஜனவரி 12, 1985 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. விவேகானந்தரின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த நாட்களில் செய்த செயல், பிரசாரம், கொள்கைகள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் என்று அரசாங்கம் அவர் பிறந்தநாளை இளைஞர் தினமாக கொண்டாட முடிவு செய்தது.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் போது, விவேகானந்தர் தற்கால இந்து மதத்தை மீண்டும் கொண்டு வர உதவியதற்காகவும், தேசியவாத உணர்வை ஊக்குவிப்பதற்காகவும் புகழ் பெற்றார். அவர் 1893 இல் சிகாகோவில் தனது புகழ்பெற்ற உரைக்காக மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். அங்கும் அவர் மேற்கத்திய உலகிற்கு இந்து மதத்தை அறிமுகப்படுத்தினார். சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, அவர் பார்வையாளர்களை "அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள்" என்று குறிப்பிட்டார். இது இந்திய கலாச்சாரத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான தருணமாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் ஜூலை 4, 1902 இல் இறந்தார்.
விவேகானந்தர் தனது புத்தகத்தில் "இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது" என்று குறிப்பிடுகிறார். சுபாஷ் சந்திர போஸ் விவேகானந்தரை "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்று குறிக்கிறார் மற்றும் மகாத்மா காந்தி விவேகானந்தரின் புத்தகங்களைப் படித்த பிறகு, நாட்டின் மீதான அன்பு அவருக்கு ஆயிரம் மடங்கு வளர்ந்ததாகக் கூறுகிறார்.

இந்த நாளில் சுவாரஸ்யமான உரைகள், இசை நிகழ்ச்சிகள் முதல் தகவல் கருத்தரங்குகள் மற்றும் மாணவர் மாநாடுகள் வரை நாடு முழுவதும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. யோகா பயிற்சி, விளக்கக்காட்சிகள் மற்றும் எழுத்துப் போட்டிகள் போன்ற கல்வி கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் இளம் மனங்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்த நடைபெறுகிறது. இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் நாட்டு இளைஞர்களிடையே உரையாற்றுவார். இந்த ஆண்டின் ஐந்து நாள் திருவிழாவின் கருப்பொருள் "இளைஞர்களால், இளைஞர்களுக்காக" என்பதே, இதில் பல்வேறு மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கலாச்சார வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 9-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில் பொது மக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கோர்ட்டில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.
எனவே யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அவர்கள் ஏற்கனவே செய்த பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். பழி வாங்கும் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.
மேலும் 19-ந்தேதி நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கைகளை தீர்த்து தர முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு, "இது அரசின் முடிவு. கோர்ட்டு உத்தரவை மதித்து நடவடிக்கை கைவிடப்படும். தற்போது பொங்கல் பஸ்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறோம்"என்றார்.
- வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது.
- சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்வதால், இவைகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் செஞ்சியில் ஆட்டு சந்தை இன்று காலையில் களை கட்டியது. அதிகாலை 3 மணி முதலே செஞ்சி விவசாயிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்தனர்.
ஆட்டுச்சந்தையில் வெள்ளாடு ஜோடி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. இதனை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். சந்தை தொடங்கிய 3 மணிநேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
- அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
- வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் வந்துவிட்டதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது.
இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி ரூ.20 லட்சத்தை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் இருந்து அங்கிட் திவாரி வாங்கிக்கொண்டு தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுரையில் உள்ள அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதனால் அவரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அவருக்கு ஜாமீன் வழங்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே 2 முறை அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று 3-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருகிற 24-ந்தேதி வரை அவருக்கு காவல் நீட்டிக்கப்படுகிறது.
அங்கிட் திவாரி கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறையினர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் காஞ்சிபுரத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காஞ்சிபுரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த ஆஸ்பத்திரியில்அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதி கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றும் பாட்டிலை தொங்கவிட உரிய ஸ்டாண்டு இல்லாததால் அதனை துடைப்பத்தின் நுனியில் கட்டி வைத்து பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மருத்துவ கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்தியில் நிலவும் இந்த நிலை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. நோயாளிகளுக்கான படுகையிலும் போதிய வசதிகள் இல்லை. குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக ஏற்றும் மருந்துகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் ஸ்டாண்டுகள் பெரும்பாலான படுக்கைகளில் இல்லை.
இதனால் தரையை துடைக்க பயன்டுத்தும் துடைப்பத்தின்(மாப்)பின் அடிப்பகுதியில் உள்ள துணியை நீக்கி விட்டு அதன் கம்புகளை மட்டும் நோயாளிகளின் படுக்கையுடன் கட்டி வைத்து உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக செலுத்தும் மருந்து பாக்கெட்டுகளை தொங்கவிட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பல நோயாளிகளின் படுக்கையில் இந்த துடைப்ப நுனி கட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அங்குள்ள மின்விளக்கு சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் போதிய படுக்கை இல்லாததால் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் சிரமம் அடையும் நிலை ஏற்பட்ட உள்ளது.
இது தொடர்பாக காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, காய்ச்சல் வார்டில் ஒவ்வொரு படுக்கையிலும் குளுக்ககோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை தொங்க விட துடைப்பத்தின் நுனிகள் மட்டுமே உள்ளன. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் எந்த பதிலும் கூறுவதில்லை. ஆஸ்பத்தரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
செய்யூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறும்போது, துடைப்பத்தின் கீழ்பகுதியில் உள்ள துணி இருந்த பகுதியை அகற்றி விட்டு அதனை ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். நோயாளிகளின் படுக்கையில் இந்த நுனிகளில் சரியாக கட்டப்படாமல் சரிந்து விழுகிறது. எனக்கு குளுக்கோஸ் அந்த துடைப்பத்தின் கம்பில் கட்டிதான் ஏற்றினார்கள். நான் கைகளை அசைக்கும் போதெல்லாம் அது நழுவி என் மீது விழுந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறும்போது:-
காய்ச்சல் வார்டில் கொசுவலை கட்டுவதற்காக துடைப்பத்தின் கம்புகளை சிலர் பயன்படுத்தி உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகள் தொங்க விட்டு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கு 32 ஸ்டாண்டுகள் உள்ளன என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில்
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. ஆனால் காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகள் மட்டுமே உள்ளன.
இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பாதித்து வருபவர்களுக்கு தனித்தனி வார்டு இல்லாததால் அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்றனர்.
- ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.
- விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.
காரிமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 34). இவர்களுக்கு சரண் (14), தீரன் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஜோதி பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் தனது கணவர், மகன்களுடன் அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது ஜோதி வண்டியை ஓட்ட அவரது மகன்கள் சரண், தீரன் ஆகிய 2 பேரை பின்னால் அமர வைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜோதி, இளைய மகன் தீரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க இறத்தனர்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து படுகாயம் அடைந்த சரணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த தாய்-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதியமான்கோட்டை-ஓசூர் வரை தற்போது 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி அதிக வேகத்தில் வந்துள்ளது. மேலும் சாலையில் போடப்படும் சென்டர் வெள்ளை கோடு இன்னும் போடப்படாத காரணத்தால் டிரைவர் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதி இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர்.
விபத்தில் தொழிலாளியின் மனைவியும், மகனும் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
- கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.
தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.
அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.
கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.
இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.
இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.
எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.
இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.
- தமிழக சட்டசபையின் கூட்டம் 5-ந்தேதிக்கு பிறகுதான் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.
- கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து விட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டு தோறும் கவர்னர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்த மாதம் 3-வது வாரம் சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ள காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.
ஏனென்றால் பொங்கல் பண்டிகை 14, 15, 16, 17-ந்தேதிகள் வருகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் 21-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு 26-ந்தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். அன்றைய தினம் திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.
அதன்பிறகு 28-ந்தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளார். பிப்ரவரி மாதம் 3-ந்தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என தெரிகிறது.
இதன் காரணமாக தமிழக சட்டசபையின் கூட்டம் 5-ந்தேதிக்கு பிறகுதான் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. சென்னை திரும்பியதும் சட்டசபை கூட்டத்தை நடத்த சட்டபேரவைச் செயலகம் திட்டமிட்டுள்ளது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி கவர்னர் உரையுடன் சட்ட சபை கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்க வில்லை. சிலவரிகளை தவிர்த்து விட்டார். அது மட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார்.
இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறவில்லை.
இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறி விட்டார். இதன்பிறகு கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து விட்டது.
இந்த சூழலில் இந்த ஆண்டும் அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு படிக்க சம்மதிப்பாரா? அல்லது தேவையற்ற வரிகளை நீக்கச் சொல்வாரா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.
அந்த மாதிரி சூழல் ஏற்படும் பட்சத்தில் கவர்னரை அழைக்காமல் சட்டசபை கூட்டத்தை நடத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது
- சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
- போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே திருத்தோபுரம் காக்கோட்டு விளை பகுதியில் ரேசன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 2-வது நாளாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு ரேசன் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
இன்று அதிகாலை ரேசன் கடையில் இருந்து புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது ரேசன் கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ரேசன் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரேசன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகி இருந்தது. ரேசன் கடையில் தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து நாசமானது குறித்து ரேசன் கடை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்குவதற்கு இன்று காலையிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கூட்டரங்கு அமைக்கப்பட்ட நிலையில் ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்கவில்லை.
- நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கூடுதல் கால அவகாசமும் நிறைவடைந்தது.
நெல்லை:
தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான நெல்லை மாநகராட்சி 55 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி மேயராக சரவணன் பொறுப்பேற்ற நாள் முதல் அவருக்கும், தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 12-ந் தேதி (இன்று) நம்பிக்கை இல்லா தீர்மான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கட்சி தலைமை கருதியது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து கவுன்சிலர்கள் அனைவரும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையிலும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து குற்றாலம், கன்னியாகுமரி, கொடைக்கானல் என சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே மாநகராட்சி கமிஷனரின் அறிவிப்பின்படி இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் கூட்டத்திற்கு கமிஷனர் தலைமை தாங்கி அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மேலும் மாநகராட்சி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் காலை 11 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். மாநகராட்சி கூட்ட அரங்கில் வழக்கமாக மேயர், துணைமேயர் கமிஷனர் ஆகியோருக்கு மேடையில் தனி இருக்கை ஒதுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் மாநகராட்சி கமிஷனருக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
கூட்ட அரங்கில் தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு அருகே மேயர் மற்றும் துணைமேயருக்கு தனியாக இருக்கை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் படி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு 5-ல் 4 பங்கு மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கிற்கு வந்திருக்க வேண்டும்.
நெல்லை மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் 5-ல் ஒரு பங்கு அதாவது 44 உறுப்பினர்கள் கூட்டரங்கில் இருந்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் நடத்தப்படும். ஆனால் இன்றைய கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.
இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 11.30 மணி முடிவடைந்தது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்தில் பெரும்பான்மைக்கான மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் கூட்டம் நடைபெறாமலேயே தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனரால் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முன்மொழியப்படாமல் தீர்மானம் தோல்வி அடைந்தாலும் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு தீர்மான கூட்டத்தின் நிகழ்வு குறித்த அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் சரவணன் பதவி தப்பியது.
- பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய (பொறுப்பு) பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம் உள்பட பல இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. கடந்த வாரம் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 4 பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தற்காலிக ஊழியர் உள்பட 5 பேருக்கு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி அவருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது துணை வேந்தர் மீது போடப்பட்ட வழக்கின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் துணை வேந்தர் ஜெகநாதன் மட்டுமே அந்த அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது துணை வேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி முறைகேடு புகாரில் கைதான துணை வேந்தர் ஜெகநாதனை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 150-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடிகளுடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு முன்பு திரண்டனர். கவர்னர் வருவதற்கு முன்பாகவே அங்கு திரண்டிருந்த 156 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30 போலீசார் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி நிர்வாக அலுவலகம், மாணவர் வசதி மையம், கணினித்துறை அலுவலகம், தமிழ்துறை அலுவலகம், ஆவணங்கள் பாதுகாக்கும் அலுவலகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் தீனதாயன் யோஜனா கிராமின் கவுசல்யா அலுவலகம் ஆகிய 7 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ரவி, துணை வேந்தரை சந்தித்த போது நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 14 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகை, போலீஸ் சோதனை, மாணவர் அமைப்புகள் போராட்டம் ஆகியவை காரணமக நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பெரியார் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
- எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்.
- இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது.
சென்னை:
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ந்தேதி தேசிய இளைஞர் நாள் என்றும் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2024






