search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner Sandeep Rai Rathore"

    • பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன.
    • போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பின்னர் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. 57 பெண் காவலர்கள் தங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் காவலர்களும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்களும் இந்த அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுகளுக்கு வருபவர்களுக்கு இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தினமும் 100 ரூபாய் கொடுத்து இங்கு தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேள்வி: இரவு நேரத்தில் பெண் போலீசாரிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் எதிரொலியாக அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுமா?

    பதில்: சென்னை மாநகரம் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாகும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் என்று புள்ளி விவரங்களும் கூறுகின்றன. எனவே இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கிகளை கொடுக்க தேவையில்லை.

    கேள்வி: சென்னையில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளதே?

    பதில்: போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசாரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடமாற்றம் தொடர்பான முதல் பட்டியல் வருகிற 31-ந்தேதி வெளியாகும்.

    இவ்வாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

    சிறுவன் பிரணவ் சாயின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று அவனது பெற்றோரிடம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார்.
    ஆவடி:

    ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதன் முதல் போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அவரது உத்தரவுப்படி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற சேரலாதன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அப்போது அவருடன் 4 வயது பேரன் பிரணவ் சாயும் வந்திருந்தான். அவன் போலீஸ் சீருடை, தொப்பி அணிந்து கம்பீரமாக இருந்தது விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. இதனை கவனித்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறுவன் பிரணவ் சாயை அருகில் அழைத்து விசாரித்தார்.

    அப்போது உற்சாகமாக பதில் அளித்த பிரணவ் சாய், ‘நானும் உங்களைப் போல் கமிஷனராக வேண்டும். போலீஸ் வேலை பிடிக்கும்’ என்றான். இதனால் உற்சாகம் அடைந்த கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சிறுவன் பிரணவ் சாயை அவரே தூக்கி சென்று தனது கமிஷனர் இருக்கையில் அமரவைத்தார். காக்கி சீருடை, தொப்பியுடன் கம்பீரமாக கமிஷனர் இருக்கையில் இருந்த சிறுவன் பிரணவ் சாய்க்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

    இதைத்தொடர்ந்து கமிஷனர் இருக்கையில் அமர்ந்து இருந்த பேரனுடன் ஓய்வு பெற்ற சேரலாதன் பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    மேலும் சிறுவன் பிரணவ் சாயின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று அவனது பெற்றோரிடம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். மேலும் அவர் சிறுவனையும் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த காட்சி விழாவில் பங்கேற்றவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.

    சிறுவன் பிரணவ் கமிஷனர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    ×