search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.
    • எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 'தமிழ் வெல்லும்' எனும் கருப்பொருளை மையமாக கொண்டு 'அயலகத் தமிழர் விழாவை' நடத்தி வருகிறது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த விழாவில், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இன்று நடைபெற்ற முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தும் பார்வையிட்டார். அயலக தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு அயலக தமிழ் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பாக அயலக தமிழர் தின நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாளைய தினம் நம்முடைய முதலமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நிறைவுரையாற்ற உள்ளார்.

    இந்தியாவில் இருக்க கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்காக ஒரு அணியை தொடங்கியது நம்முடைய தி.மு.கழகம் தான்.

    இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

    நம்முடைய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் நடைபெறுகின்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    அப்படி வரும் போது அவர்களை களத்தில் ஊக்குவிப்பவர்களாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறீர்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அயலக தமிழர்கள் நலன் மீது நம்முடைய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    முன்பைவிட நம்முடைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும் தங்கி இருக்கிறீர்கள்.


    எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகிற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த துறையை நமது அரசு உருவாக்கியது.

    முன்பெல்லாம் வெளிநாட்டில் வேலை என்று கூறி டிராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றினார்கள் என்ற செய்திகளை பார்ப்போம். ஆனால் அந்த நிலை இன்றைக்கு பெருமளவு மாறி இருக்கிறது. ஏனென்றால் அயலக தமிழர் நலத்துறை மேற்கொண்ட பணிகளே இதற்கு முக்கிய காரணம். வெளிநாடுகளில் தமிழர்கள் மிக முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.

    வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அயலகத் தமிழர் துறை அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் தி.மு.க. பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி.பேசும் போது கூறியதாவது:-

    தமிழர்களின் நம்பிக்கை அரணாக தி.மு.க. விளங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இது ஏதோ எப்போதும் போல் வந்து போகிற தேர்தல் அல்ல. இந்த தேர்தலின் முடிவுதான் உலக அரங்கில் தலை சிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது நிலைக்கப் போகிறதா? அல்லது தடம் மாறி அது போகப்போகிறதா? என்று தீர்மானிக்க போகிற தேர்தல்.

    மத்தியில் இன்றைக்கு இருக்கிற ஆட்சி அகல வேண்டும். நம்முடைய 'இந்தியா கூட்டணி' வெல்ல வேண்டும்.

    தமிழகத்தை நம்பி வடபுலம் காத்திருக்கிறது. தமிழகத்தை நம்பி இந்தியா காத்திருக்கிறது. நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் 40 தொகுதிகளையும் வென்று கொண்டு போய் நாங்கள் தான் தன்னிகரற்றவர்கள் என்று காட்ட போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×