என் மலர்
உள்ளூர் செய்திகள்
- லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- லாரிகளால் விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
களியக்காவிளை:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கொடி பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ், ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவரது மனைவி பீனா (வயது 52). இவர்களது மகள் திருமணமாகி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளை பார்த்து வர பீனா விரும்பி உள்ளார். இதற்காக கணவர் ஞானதாசுடன் இன்று காலை ஊரில் இருந்து புறப்பட்டார். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். காலை 8 மணியளவில் குழித்துறை மேம்பாலம் பகுதியில் சென்ற போது பின்னால் கனிமவளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது.
அந்த லாரி திடீரென தாறுமாறாக ஓடி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஞானதாஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஞானதாஸ் சாலையின் ஓரம் விழுந்தார். ஆனால் பீனா, சாலையின் நடுவே விழுந்தார்.
அப்போது அவரது தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பீனா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். காலில் காயம் அடைந்த ஞானதாஸ், தனது கண்முன்பு மனைவி பலியானதை பார்த்து உடல் அருகே அமர்ந்து கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பீனா உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஞானதாசும் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து காரணமாக குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட் டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் தினசரி கனிம வளங்களை வாகனங்களில் அதிக அளவு ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதை தடுக்க வேண்டும். சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி அடிக்கடி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக போலீசார் சோதனைகள் நடத்தி வந்தாலும், லாரிகளால் விபத்துக்கள் தொடர்ந்து வருவது வேதனையான சம்பவமாக உள்ளது.
- கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
- பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.
போரூர்:
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இ்ன்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தார் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் சிறப்பு சந்தைகளை கட்டி உள்ளது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், வெற்றிலைவள்ளிகிழங்கு, பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தார், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாகவே நடந்து வருகிறது.
இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்துகளும், கும்பகோணம் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.450 முதல் ரூ.500வரை விற்கப்படுகிறது, மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600, 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து ரூ.60 முதல் ரூ.80-க்கும், 8 முதல் 10 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில்,
இன்று அதிகாலை முதல் கரும்பு விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது. மாலை முதல் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நள்ளிரவு முதல் மேலும் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிய உள்ளது. இதனால் கரும்பு கட்டுகளின் விலை குறையவே வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.
- தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது.
திண்டுக்கல்:
அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் நடந்த ஒருவிழாவில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயககூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம் என பேசி உள்ளார். அது நிச்சயமாக அ.தி.மு.க.வுக்காக இல்லை.
எந்த கட்சிக்காக கூட்டணி கதவை திறந்துவைத்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை உறுதியாக தெரிவித்துவிட்டார். இதற்குமேலும் விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.
காமராஜருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிட்டு பேசியுள்ளார். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதனால் எந்த கட்சி தலைவருக்கு என்ன பெருமை உள்ளது என்பது மக்களுக்கே தெரியும்.

தி.மு.க.வில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல. தி.மு.க.வில் வாரிசு அரசியல் உள்ளது என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரியும். அயோத்தி ராமர்கோவில் விழாவில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு வந்தது உண்மை. இதில் கலந்து கொள்வது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தி.மு..கவுக்கும், பா.ஜ.கவுக்கும் தான் நேரடி போட்டி உள்ளதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது. மக்களவை தேர்தல் மட்டுமல்ல. எந்த தேர்தல் நடந்தாலும் அது தி.மு.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
- தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.
இயற்கையையும், உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- எடப்பாடி பழனிசாமியை மக்கள் நூறு சதவீதம் நம்புகிறார்கள்.
- 2014 தேர்தலில் இந்தியாவில் 3-வது பெரிய சக்தியாக அ.தி.மு.க. இருந்தது.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எல்லோருமே கூட்டணியில் காலகட்டத்துக்கு ஏற்ப முடிவுகளை செயல்படுத்துகிறார்கள். தேர்தலுக்கு ஏற்ப வாக்குகள் மாறுகின்றன. எந்த கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி இருப்பதாக கூற முடியாது. அந்த அந்த கால கட்டத்துக்கு ஏற்ப மக்கள் வாக்களிக்கிறார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமியை மக்கள் நூறு சதவீதம் நம்புகிறார்கள்.
ஜெயலலிதா இருந்த போது 2014 தேர்தலில் இந்தியாவில் 3-வது பெரிய சக்தியாக அ.தி.மு.க. இருந்தது. அதேபோல் இப்போதும் இந்திய பிரதமரை நிர்ணயிக்க கூடிய இடத்தில் அ.தி.மு.க.வை மக்கள் கொண்டு வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதை பெற்று தரக்கூடிய தேர்தல் வியூகத்தையும் அவர் அமைப்பார்.
- பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும்.
- அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,
உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.
பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக வந்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வேனுடன் ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் அமைந்துள்ளது.
இங்கு சந்தன மரங்கள், செம்மரங்கள், தேக்கு மற்றும் அரியவகை மூலிகை செடிகளும், தாவரங்களும் உள்ளன. வனத்துறை சார்பில் ஆங்காங்கே சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
காப்பு காட்டில் பராமரிக்கப்படும் சந்தன மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்லும் சம்பவம் தொடர் கதையாகிவிட்டது.
வேலூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒடுகத்தூர் அருகே உள்ள மலை கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக வந்தது.
சந்தேகமடைந்த போலீசார் மினிவேனை மடக்கி பிடிக்க முயன்றனர்.போலீசாரை பார்த்தும் வேனை ஓட்டி வந்த டிரைவர் நிற்காமல் வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மினி வேனை துரத்தி சென்றனர்.
சுதாரித்துக்கொண்ட வேன் டிரைவர் உள்ளிட்ட 2 பேர் வேனை நிறுத்திவிட்டு வனப்பகுதியில் புகுந்து தப்பி சென்றனர். பின்னர், நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அதில் காலி தண்ணீர் பாட்டில்களுக்கு அடியில், 2 முதல் 4 அடி நீளம் கொண்ட 1½ டன் எடையுள்ள சந்தன மரங்கள் கடத்தியது தெரிய வந்தது. மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வேனுடன் ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மினி வேனில் சந்தன மரங்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
- நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
சென்னை:
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு புதிய அதிகாரியை நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்றும் உணவு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
- சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.
- மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.
- காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது மற்றொரு காரில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார் மற்றும் 2 பேர் வந்தனர். மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.
இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் (37) தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து நவீன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது.
- தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
செங்குன்றம்:
சென்னை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை சூரப்பட்டு அருகே நங்கநல்லூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 80 ஆயிரம் சதுர அடியில் குடோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம், மணலி, பிராட்வே, செம்பியம், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- வழக்கமான 2100 பஸ்களும் 1900 சிறப்பு பஸ்களும் இயக்க தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப்படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். அவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.
இன்று முதல் 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகளவு பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் தவிர சிறப்பு பஸ்கள் 1260 என மொத்தம் 3946 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.
இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்று காலையில் இருந்தே பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பகல் நேர ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன. சிறப்பு ரெயில்களிலும் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டது. மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பம் குடும்பமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மக்கள் கூட்டத்தை சமாளிக்க இன்று 4000 அரசு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான 2100 பஸ்களும் 1900 சிறப்பு பஸ்களும் இயக்க தயார் நிலையில் உள்ளன. அரசு பஸ்களில் பயணம் செய்ய சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர 1600 ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதில் பயணம் செய்ய 65 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயணம் செய்ய உள்ளனர். முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர்.
மேலும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்களில் பலர் பகலில் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் இன்று பயணம் செய்வார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
வெளியூர் பயணம் அதிகரித்துள்ளதால் சென்னையிலும் புறநகர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ், கார்களின் சாலைப் பயணம் அதிகரித்துள்ளதால் மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.






