என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
- விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி.
- துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. பொருளாதாரம் உயரும் வரை சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. வழிகாட்டி மதிப்பு நியாயமாக நிர்ணயிக்கப்படும் என்று கூறி, அதனை உயர்த்திய ஆட்சி தி.மு.க. ஆட்சி. இந்த வரிசையில், கூடுதலாக ஒரு கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் பொருட்களை நிறுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மொத்தத்தில், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

முதலமைச்சர் இதில் உடனடி கவனம் செலுத்தி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யவும், கூடுதலாக உளுத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்ற வாக்குறுதியினை நிறைவேற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
- மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி - பெங்களூரு பழைய சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 30). இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமோனி மூலமாக கூடுவாஞ்சேரியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணை பார்த்து பேசி பழகி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன் மற்றும் இளம்பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி- பெங்களூரு பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் அலுவலகத்தின் முதல் தளத்தின் பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னிடம் பேசுவதில்லை, என்னுடைய செல்போன் எண்ணை எடுக்கவில்லை. அதனால் குணசேகரன் இங்கு வரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை பின்புறமாக பிடித்து இழுத்து அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
- ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னை கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பேரமைப்பு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கோலப் போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எம்.விக்கிரமராஜா பரிசு பொருட்கள் வழங்கினார்.
மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ராஜ்குமார் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆதி குருசாமி, என்.ஜெயபால், எட்வர்டு, யு.நடராஜன், ஆர்.எம்.பழனியப்பன், ஜெயக்குமார், இளைஞரணி பாலாசீர், வடபழனி வி.பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன்.
- அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,
உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி - மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை - வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது.
கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. வணிகர்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள், முக்கியமான சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கும் முகாம்கள், நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான மருத்துவ முகாகம்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுள்ளன.
முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், என்னை முதலமைச்சராக்கிட அயராது உழைத்த அன்பு உடன்பிறப்புகளாம் தி.மு.கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள். கழகத்தினரின் இத்தகைய செயல்வேகம் குறித்த செய்திகள்தான் என்னுடைய பணிக்கு ஊக்கம் தரக்கூடியவை. மக்களுக்கான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்வேகம் அளிப்பவை.
நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் மக்களிடம் இருப்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். அதனால்தான் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்தது. அத்துடன், ரொக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தை நான் அறிந்தேன்.
கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். சர்க்கரை நாவில் இனிக்கும். ரொக்கப் பணம் மனதில் இனிக்கும் என்பதால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு.
எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்தாலும், நம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் அரசாக கழக அரசு தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழ்நாடு பெறக்கூடிய வாய்ப்பும், அதன் வாயிலாக 26 இலட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு அமையக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது. சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்த முதலீடுகள் மூலமாக தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் அமைக்கப்படவிருப்பதால் பரந்துபட்ட வளர்ச்சியை நோக்கிய பாய்ச்சலைக் காணவிருக்கிறது நமது மாநிலம்.
பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடுபட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. நமது அரசின் இந்த முயற்சிகளை சென்னையில் ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்ற உலகத் தமிழர்கள் பலரும் பாராட்டியதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் உறுதியளித்துள்ளனர்.
நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களின் தேர்தல் களங்களில் திராவிட மாடல் அரசின் திட்டங்களே வாக்குறுதிகளாக அளிக்கப்படுகின்றன.
'எல்லாருக்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. 'நான்தான் எல்லாம்' என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒன்றிய அரசு 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.
தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்... உழைக்கிறேன்... உழைக்கிறேன்…
ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியே, "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்" என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.
இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.
கழகத் தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும். நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது, திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.
எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும்.
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.
கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.
பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி – சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்.
உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
- பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
- அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உறி அடித்தார்.
திருவள்ளூர்:
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பாரம்பரிய உடை அணிந்து வந்த ஊழியர்கள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது.

மேலும் விழாவில் மேள தாளங்களுக்கு இணங்க ஊழியர்கள் நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆட்சியர் பிரபு சங்கர் குத்தாடம் போட அனைவரும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற ஆட்சியர் உறி அடித்தார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா களை கட்டியது.
- வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.
- ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார வனபகுதியில் யானை, கரடி, புலி. சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அரிய வகை பறவைகளும் வசிக்கின்றன.
இந்த வனவிலங்குகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது.
தமிழக - கேரள எல்லை பகுதியான அதிரப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வால்பாறை பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் அந்த யானைகள் வால்பாறை சோலையார் அணையில் குளித்து குதூகலம் அடைந்தன. அணையில் தற்போது தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளிக்க ஏதுவாக இருந்தது. அந்த யானைகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தன.
தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கரும்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கரும்புகளை ரேஷன் கடைகளில் வைத்துள்ளனர். இதனால் யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி கரும்புகளை ருசிக்க வர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள பொது மக்கள் கரும்புகளின் சக்கைகளை வீட்டிற்கு வெளியில் போட வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
2011ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும்.
விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்திய சென்னை ஐகோர்ட், தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- மற்ற பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
- தந்தை ஆரூண் ஏற்கனவே எம்.பி.யாக வெற்றி பெற்றவர் தற்போது வயது முதிர்வு காரணமாக அவர் போட்டியிடவில்லை.
காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பபட்டுள்ள பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். ஆனால் அசன் மவுலானா 'நான் பொறுப்பாளர் பதவியே கேட்கவில்லையே. நான் எம்.பி. தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு கட்சி மேலிடம் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் பொங்கி இருக்கிறார். தேனி தொகுதியில் இவரது தந்தை ஆரூண் ஏற்கனவே எம்.பி.யாக வெற்றி பெற்றவர் தற்போது வயது முதிர்வு காரண மாக அவர் போட்டியிடவில்லை. எனவே அந்த தொகுதியை கைப்பற்றும் முடிவில் அசன் மவுலானா உறுதியாக இருக்கிறார்.
இன்னும் 2½ ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவி இருக்கிறதே வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு ஏற்கனவே அந்த மாதிரி வாய்ப்பு வழங்கிய நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன என்றார்.
- கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
- டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மெரினாவில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 5 துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்காலிக போலீஸ் நிலையங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. கடற்கரை மணல் பரப்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடியே பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.
டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. சென்னை மாநகர் முழுவதும் மற்ற கடற்கரை பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகள், பூங்காக்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன.
- சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா என்ற கலைவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சென்னை சங்கமம்- நம்ம ஊரு திரு விழாவை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் சென்னை மக்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கிராமிய கலைஞர்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 18 இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
சென்னை தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டு திடல், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்க ளில் நடத்தப்படுகிறது.
மேலும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பழனியப்பா நகர் லேமேக்ஸ் பள்ளி வளாகம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை சங்கமம் விழாவில் நாட்டுப்புற பாடல்கள், கானா பாட்டு, ராப் இசை, இருளர் பாட்டு, காணிக்காரன் பாட்டு, நையாண்டி மேளம், பறையாட்டம், புரவி, காளை, மயிலாட்டம், பம்பையாட்டம், படுகர் நடனம், துடும்பு, மகுடம், சிலம்பாட்டம், கொம்பு, தாரை, ஆலியாட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம், ஜிக்காட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மேலும் பஞ்சாப்பின் பாங்ரா மற்றும் ஜிந்துவா நடனம், ஒடிசாவின் சம்பல்புரி நடனம், மணிப்பூரின் லை ஹரோபா நனடம், காஷ்மீரின் ரூப் நடனம், பரதநாட்டியம், காவடியாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், மேளம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற ஆடல்- பாடல், வில்லிசை, கையுறை பாவைக்கூத்து, கோல்கால் ஆட்டம், இறை நடனம், தேவராட்டம், கணியான் கூத்து, ஜிம்பளா மேளம், களரி, மெல்லிசை, கட்டைக்கூத்து, நாடகம் உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கலைப்பொருட்கள் விற்படை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு மூலிகை உணவுகள், கடல் உணவுகள், பாரம்பரிய மசாலாவுடன் கூடிய சுவையான கிராமிய உணவு வகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை நகர மக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலைகளை கண்டுகளிக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் இன்று முதல் 5 நாட்கள் சென்னை நகரையே கோலாகலமாக்க உள்ளது.
- இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர்.
- சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
போகிப் பண்டிகை தினமான நாளை டயர், டியூப் போன்ற பொருட்களை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்து உள்ளனர். இதனால் காற்று மாசு படாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொது மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்து உள்ளது.
அதன்படி இந்த சுற்றுச்சூழல் மாசு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின்தர அளவுவாரிய இணையதளத்தில்வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






