search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்...
    X

    சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்...

    • கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • வழக்கமான 2100 பஸ்களும் 1900 சிறப்பு பஸ்களும் இயக்க தயார் நிலையில் உள்ளன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் தான் உற்சாகமாக கொண்டாடப்படும். அதனால் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தை தொடங்கிவிட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். அவர்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.

    இன்று முதல் 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

    கோயம்பேடு, கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகளவு பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் தவிர சிறப்பு பஸ்கள் 1260 என மொத்தம் 3946 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

    இன்று முதல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

    இன்று காலையில் இருந்தே பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பகல் நேர ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன. சிறப்பு ரெயில்களிலும் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டது. மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    குடும்பம் குடும்பமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மக்கள் கூட்டத்தை சமாளிக்க இன்று 4000 அரசு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான 2100 பஸ்களும் 1900 சிறப்பு பஸ்களும் இயக்க தயார் நிலையில் உள்ளன. அரசு பஸ்களில் பயணம் செய்ய சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதுதவிர 1600 ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதில் பயணம் செய்ய 65 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயணம் செய்ய உள்ளனர். முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர்.

    மேலும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள். சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்களில் பலர் பகலில் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சுமார் 4 லட்சம் பேர் இன்று பயணம் செய்வார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

    வெளியூர் பயணம் அதிகரித்துள்ளதால் சென்னையிலும் புறநகர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ், கார்களின் சாலைப் பயணம் அதிகரித்துள்ளதால் மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    Next Story
    ×