search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன மரங்கள் கடத்தல்: விரட்டி பிடித்த போலீசார்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட வேன், சந்தன மரங்கள்.

    ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன மரங்கள் கடத்தல்: விரட்டி பிடித்த போலீசார்

    • பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வேனுடன் ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் அமைந்துள்ளது.

    இங்கு சந்தன மரங்கள், செம்மரங்கள், தேக்கு மற்றும் அரியவகை மூலிகை செடிகளும், தாவரங்களும் உள்ளன. வனத்துறை சார்பில் ஆங்காங்கே சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

    காப்பு காட்டில் பராமரிக்கப்படும் சந்தன மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்லும் சம்பவம் தொடர் கதையாகிவிட்டது.

    வேலூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒடுகத்தூர் அருகே உள்ள மலை கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக வந்தது.

    சந்தேகமடைந்த போலீசார் மினிவேனை மடக்கி பிடிக்க முயன்றனர்.போலீசாரை பார்த்தும் வேனை ஓட்டி வந்த டிரைவர் நிற்காமல் வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மினி வேனை துரத்தி சென்றனர்.

    சுதாரித்துக்கொண்ட வேன் டிரைவர் உள்ளிட்ட 2 பேர் வேனை நிறுத்திவிட்டு வனப்பகுதியில் புகுந்து தப்பி சென்றனர். பின்னர், நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.

    அதில் காலி தண்ணீர் பாட்டில்களுக்கு அடியில், 2 முதல் 4 அடி நீளம் கொண்ட 1½ டன் எடையுள்ள சந்தன மரங்கள் கடத்தியது தெரிய வந்தது. மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வேனுடன் ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மினி வேனில் சந்தன மரங்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×