என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.
    • எங்கள் கட்சியில் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எ

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதே முதல் வேலை என்று குறிப்பிட்டுள்ளார். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது காங்கிரஸ் மட்டும் தான்.

    கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளுக்கும் அதிகாரம் வழங்கி அவர்களை உயர்த்தி வருவது காங்கிரஸ். இப்போது தமிழகத்துக்கு எனக்கு தலைவர் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். அகில இந்திய தலைவராக இருக்கும் கார்கேவும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

    எனவே எல்லா கட்சிகளில் இருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களும் காங்கிரஸ் பக்கம் ஓடி வாருங்கள்.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ச்சி என்பது செயற்கை தனமாக மிகைப்படுத்துவது. அந்த கட்சியால் வளர முடியாது.

    குற்றப் பின்னணி கொண்டவர்களை எல்லாம் அவர்கள் கட்சியில் சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு என்ன லாபம்?

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம்.

    எங்கள் கட்சியில் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்கு எதிராகவே புகார் செய்தவர்களும் உண்டு. அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் கிடையாது அனைவரும் இணைந்து கட்சியை பலப்படுத்துவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
    • பொதுத்தொகுதிக்கு ரூ.20,000, தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.02.2024 (புதன்கிழமை) முதல் 1.03.2024 (வெள்ளிக்கிழமை) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
    • அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23-ந்தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24-ந் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.

    எனவே, 23-ந்தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித் துள்ளது. இதையொட்டி, கோவிலில் பக்தர்கள் விரை வாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அமர்வு தரிசனம், சிறப்புதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது.
    • அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கெஜஹட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி மக பொங்கல் திருவிழா வரும் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் அதிக அளவில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வருவதால் வனப்பகுதியில் சூழல் மிகுந்த பாதிப்புள்ளாகிறது. எனவே இந்த விழா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய ஒழுங்கு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கடந்த 2.1.2024 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது. வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும்.

    அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது.

    பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகையான நிபந்தனைகள் குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக அரசு துறையினர், கோவில் நிர்வாகித்தினர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில், கோபி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வனத்துறை, வருவாய் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு கருத்துகளும் கேட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அப்போது திருவிழாவின்போது நெகிழிப் பொருட்கள், கண்ணடி பொருட்கள், தீ மூட்டக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் போதைப் பொருட்கள், வெடிப்பொருட்கள், சத்தம் எழுப்பக்கூடிய கருவிகள், வளர்ப்பு பிராணிகள் போன்றவற்றை கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

    மேற்படி திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின்படி திருவிழாவை சிறப்பாக நடத்தவும், வனப்பகுதியை மாசு இன்றி தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • தெற்கு ரெயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.
    • விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தண்டவாளங்களை பராமரிப்பது முக்கியம்.

    சென்னை:

    சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் இயக்கங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் சீரான இடைவெளியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி நேற்று சென்னை கடற்கரை - தாம்பரம் பிரிவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ரெயில் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ரெயில் இணைப்புகளை சரிபார்த்தல், வெல்டிங் பணிகள், கனரக எந்திரங்கள் மூலம் தேவையற்ற கழிவுகளை அகற்றுதல் மற்றும் பிற பாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முக்கியமான வழித்தடப் பணிகள் பகல் நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டியதால் 44 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாதை பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாதவை ஆகும். இருப்பினும், பயணிகளின் சிரமத்தை தவிர்த்திடும் வகையில், தெற்கு ரெயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தண்டவாளங்களை பராமரிப்பது முக்கியம். தண்டவாளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ரெயில் தடம் புரல்வதை தடுக்க ரெயில்வே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    • என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?
    • ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் திலகர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பாராளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 2019-ம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜனதா வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகி சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வக்கீலின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்பு சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்தார்.

    தமிழ்நாட்டுக்கு மெட்ரோ 2-வது திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ளச்சேதத்துக்கு இழப்பீடு கொடுக்க மறுப்பு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது.

    வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை மந்திரி எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் என கூறினேன். ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, நான் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக்கருத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடித்துச் சென்றனர்.

    அதனை தொடர்ந்து 23 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளின் பரிந்துரையால் 21 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதில் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

    இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வேண்டும் எனவும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை தங்களது ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன.
    • பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 15-ந் தேதி தொடங்கி தீயணைப்புத் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி மத்திய மண்டலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதுமுள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. திருச்சி மத்திய மண்டலம் 2 ஆம் இடத்தையும், தெற்கு மண்டலம் 3 ஆவது இடத்தையும் பெற்றன.

    பரிசளிப்பு விழாவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் மீட்புப் பணிகளுக்காக பைபர் படகுகள், ரோபோக்கள், மற்றும் நவீன சாதனங்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் உரிய மாற்றங்களும் செய்யப்படும். சென்னை, மற்றும் தென் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகளின்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் பணி மகத்தானது எனத் தமிழக முதல்வரே பாராட்டியிருப்பது பெருமை.

    அதே நேரம் தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின்போது தலைமைச் செயலர் ஏராளமான அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

    அந்த வகையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். மேலும் விபத்துகளைத் தடுக்க 6 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வரையறுக்கப்படும்.

    பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது. தீயணைப்புத் துறை சார்பில் சிறிய குடோன்கள் மற்றும் ஆலைகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விபத்துகள் என வரும்போது தீயணைப்பு மீட்புத் துறைக்கே நெருக்கடி ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மத்திய மண்டலத் துணை இயக்குநர் பி. குமார், மாவட்ட அலுவலர் வி. ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
    • இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து மீதமுள்ள 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    ×