என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பாராளுமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
    • மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார் என தி.மு.க. தெரிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அதன்படி, திருச்சி, பெரம்பலூரில் 22-ம் தேதியும், தஞ்சை, நாகையில் 23-ம் தேதியும், கன்னியாகுமரி, திருநெல்வேலியில் 25ம் தேதியும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 26-ம் தேதியும், தென்காசி, விருதுநகரில் 27-ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்.

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் 29-ம் தேதியும், சேலம், கள்ளக்குறிச்சியில் 30-ம் தேதியும், ஈரோடு, நாமக்கல் 31-ம் தேதியும், வேலூர், அரக்கோணம் 2ம் தேதியும், ஆரணி, திருவண்ணாமலை 3ம் தேதியும், கடலூர், விழுப்புரம் 5-ம் தேதியும், சிதம்பரம், மயிலாடுதுறை 6-ம் தேதியும், புதுச்சேரி 7-ம் தேதியும், மதுரை, சிவகங்கை 9-ம் தேதியும், தேனி, திண்டுக்கல் 10-ம் தேதியும் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பூர், நீலகிரி 12-ம் தேதியும், கோவை, பொள்ளாச்சி 13-ம் தேதியும், திருவள்ளூர், வடசென்னை 15-ம் தேதியும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூதுர் 16-ம் தேதியும், தென் சென்னை, மத்திய சென்னை 17-ம் தேதியும் பிரசாரம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவை ஈஷா மையத்தின் சத்குரு கடந்த 4 வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • ஆனாலும் மகா சிவராத்திரி மற்றும் டெல்லியில் நடந்த கூட்டங்களில் சத்குரு பங்கேற்றார்.

    கோயம்புத்தூர்:

    கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார்.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவர் வினித் சூரி கூறுகையில், சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத் தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார். சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட்டு நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.
    • சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. அப்போது மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் என்பவர் கையில் தூக்கு கயிறுடன் விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மனுத்தாக்கல் செய்ய வந்தார். இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறுகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என்கின்ற வகையிலும், வாக்குக்காக பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூக்கு கயிறுடன் போலியான ரூபாய் நோட்டுகளை இணைத்து மனுதாக்கல் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது
    • எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    இதற்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுத் தாக்கல் செய்தார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    • அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேறக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜான் பாண்டியனும் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.

    ஆனால் எந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேறக் கழகம் போட்டியிடும் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் தென்காசி தொகுதியில் அக்கட்சி போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தினால் வாரந் தோறும் திங்கள் கிழமை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்தார்.

    அதே நேரத்தில் கோரிக்கை தொடர்பாக பொது மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டு அதில் மனுக்களை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வரக்கூடும் என்பதால் வாசலில் இருந்த மனு பெட்டியை கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்கள் அலுவலகத்திற்குள் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து அழைத்துச் செல்லக்கூடிய சக்கர நாற்காலியில் மனு பெட்டியினை தூக்கி வைத்து நகரக்கூடிய நாற்காலியை தள்ளி சென்றனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவம் கர காட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் உள்பட அனைவரும் சேர்ந்து காரை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை நினைவு படுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

    • 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    22-ந்தேதி மற்றும் 23-ந்தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்தில் பட்டியல் தயார் செய்து மையக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த பட்டியலை மத்திய தேர்தல் குழு பரிசீலிக்கும். நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    • தங்களை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டால் குடியிருக்க வீடு இல்லாம் சிரமப்படும் நிலை ஏற்படும்.
    • குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கெரடா மட்டம். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்காக அரசின் சார்பில் 90 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த வீடுகளில் 36 வீடுகளில் மாற்றுத்திறனாளிகளும், மீதமுள்ள 54 வீடுகளில் கெரடாமட்டம் சுற்று வட்டார பகுதிகளில் பேரிடர் காலங்களில் பாதுகாப்பிற்காக தற்காலிகமாக குடியிருக்க அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

    இவர்கள் இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், தங்களை மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் இருந்து காலி செய்துவிட்டால் குடியிருக்க வீடு இல்லாம் சிரமப்படும் நிலை ஏற்படும்.

    எனவே தங்களுக்கு வேறு பகுதியில் அரசின் சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    மக்களின் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, கிராம மக்கள் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் கிராம மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட நிர்வாகத்துக்கு இதுகுறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.


    தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

    * நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது.

    * எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்.

    * எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.

    இதனிடையே, 2 தொகுதிகளில் ஒன்றில் போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என சூசகமாக பதில் அளித்தார்.

    முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 24-ந்தேதி அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    • பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
    • கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

    பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை -பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

    எம்.டி.வி. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

    காமராஜர் சாலையில் இருந்து வரும் பி.ஆர். ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சிலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

    அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யு.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகை, ரூ.2,500 மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.

    கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.

    தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சுதாகர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்த அனை த்து பொருள்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    ×