என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.
    • நகை கடைகளில் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் நகை கடையும், வந்தவாசி சாலையில் பிரபலமான நகைக்கடையும் உள்ளன.

    இந்த கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மற்றும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகpe நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா? நகை கடையில் வருமான வரி முறையாக கட்டப்பட்டுள்ளதா? வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்தினர்.

    நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நீடித்தது. நகரின் முக்கிய நகை கடைகளில் திடீர் சோதனை நடந்ததால் மற்ற கடைக்காரர்கள் உடனே கடைகளை மூடி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம்.
    • ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க குரல் கொடுப்போம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மணல் அள்ளுவதற்கு விதித்துள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். கல்பாக்கம் ஈணுலையை அகற்ற வேண்டும் என்பது உள்பட 74 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் வைகோ கூறுகையில், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்து விட்டது.

    சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவீதம் வாக்குகள் இருந்தாலே 6 ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படாமல் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்றார்.

    • திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி.
    • டோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரித்தனர்.

    சென்னை:

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரேஜ் என்ற திரைப்படத்தை தயாரித்தனர்.

    இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது.

    இந்நிலையில், தமிழைத் தொடர்ந்து டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கன்னட மொழியிலும் திரைப்படம் தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த நிறுவனத்தின் 2வது திரைப்படம் ஆகும்.

    இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
    • கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

    கோவை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

    ஆளும் கட்சியான தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமியை ஆதரித்து வருகிற 12-ந்தேதி கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசாரத்தின் போது முதலமைச்சருடன், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    அன்றைய தினம் மாலையில் கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தி எம்.பியும் ஒன்றாக இணைந்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்திற்காக எல் அண்ட் டி புறவழிச்சாலை செட்டிப்பாளையம் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தற்போது பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்படுகிறது.

    இதுதவிர கூட்டத்திற்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யும் பணி தற்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், வி.சி.க உள்பட கூட்டணி கட்சியினர் என 1½ லட்சம் பேர் திரள்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தி எம்.பியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பது இந்தியா கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி. ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் இந்தியா கூட்டணி கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட உள்ளது.

    • கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
    • சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் கடைசி நாளான 23-ந் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஊட்டி குதிரைப்பந்தய போட்டியில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ள சூழ்நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரைப்பந்தய போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்க உள்ளன.

    ஊட்டி குதிரைப்பந்தயம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:-

    நீலகிரி கோடை விழாவின் ஒரு நிகழ்வாக குதிரைப்பந்தய போட்டிகள் இன்று தொடங்கி வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடக்கிறது.

    மேலும் முக்கிய குதிரை பந்தயங்களான ஆயிரம் கின்னிஸ் 20-ந் தேதியும், இரண்டாயிரம் கின்னிஸ் 21-ந் தேதியும், நீலகிரி டர்பி மே 12-ந்தேதியும், நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தய போட்டிகள் மே 26-ந்தேதியும் நடக்க உள்ளது.

    ஊட்டி குதிரைப்பந்தய போட்டியில் 25 ஜாக்கிகள், 16 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சென்னை, மைசூரூ, பெங்களூரு, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் வரவழைக்கப்பட்டு, அவை போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பணம் கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை.
    • ஆடு வாங்கும்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே சமயபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமையன்று ஆட்டு சந்தை நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக சமயபுரம் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடுகள் மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் சமயபுரம் சந்தைக்கு வருகின்றனர்.

    இந்த வார சந்தையில் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழக்கமாக ஆடுகள் விற்பனை நடைபெறும், பண்டிகை கால கட்டங்களில் சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை யாகும். இந்த நிலையில் வருகின்ற 11-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வியாபாரம் தொடங்கியது.

    ஆடுகள் அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் இன்று சந்தை கூடியது வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர். சந்தை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், "நாங்கள் எப்போதுமே சமயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்க வருவோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரிகள் பணம் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது. பணம் கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை.

    ரூ.49,000 கொண்டு வந்தால் இரண்டு முதல் மூன்று ஆடுகள் மட்டுமே வாங்க முடியும் விக்கிற விலைவாசிக்கு இதனால் விவசாயிகளும் வியாபாரிகளுக்கும் கஷ்டமாக உள்ளது. யாரு யாரு எவ்வளவோ பணம் கொண்டு செல்கிறார்கள் அதையெல்லாம் தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரியவில்லை.

    வியாபாரத்திற்கு கொண்டு செல்லும் பணத்தை தான் பிடிக்கிறார்கள். குறிப்பிட்டு இந்த ஆட்டு வண்டியில் கொண்டு செல்லும் வியாபாரிகள் பணத்தை தான் வந்து வியாபாரிகள் பணத்தை தான் வந்து பிடிக்கிறார்கள். இதனால் பயந்து கொண்டு பணம் கொண்டு வருவதில்லை. இதனால் விவசாயிகளி டம் சந்தையில் வந்து ஆடுகள் வாங்க முடியவில்லை. ஆடு வாங்கும்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடன் சொல்லவும் முடியவில்லை. கடன் சொன்னாலும் விவசாயிகள் தருவார்களா. வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் தேர்தல் அதிகாரிகள் சற்று அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

    விலை சற்று அதிகமாக உயர்ந்து ஆடுகளை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுமார் ரூ 40 லட்சத்திற்கும் மட்டுமே விற்பனை ஆகியது என்று வியாபாரிகள் வருத்துடன் தெரிவித்தனர்.

    • வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் வங்கி ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    குருபரப்பள்ளியில் ஏ.டி.எம்.மில் வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் துணிகரமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் சார்பில் ஒரு ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

    அந்த ஏ.டி.எம். உள்ள பகுதியில் சுற்றி ஓட்டல்கள், பெட்ரோல் பங்க, தனியார் கார் கம்பெனி உள்பட பெரும் நிறுவனங்கள் மற்றும் சிறிது தொலைவில் தொலைவில் குருபரப்பள்ளி போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

    இதன் காரணமாக ஏ.டி.எம். உள்ள அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதியாகவே காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு வங்கி சார்பில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.15 லட்சம் வரை பணம் வங்கி ஊழியர்கள் நிரப்பி சென்றுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம். எந்திரம் இருக்கும் அறையில் நுழைந்தனர். அப்போது அவர்கள் கருப்பு மையை கொண்டு அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பூசி உள்ளனர். பின்னர் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இன்று காலையில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் வங்கி அதிகாரிகளுக்கும், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் குறித்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த பகுதியில், போலீஸ் நிலையம் அருகில் இருந்த போதிலும் ஏ.டி.எம்.மில் மர்ம நபர்கள் துணிச்சலாக வெல்டிங் எந்திரம் மூலம் அறுத்து எடுத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.
    • பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

    குளித்தலை:

    திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது,

    நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மேலும் எனது பல்கலைக்கழகம் மூலம் லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்க்கல்வி எனது சொந்த செலவில் வழங்கி உள்ளேன். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.

    இந்நிலையில், இம்முறை நான் உங்களின் பேராதரவோடு தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றி பெற்றவுடன் 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பில் உயர் மருத்துவம் சிகிச்சை பெறவும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மீண்டும் வரும் ஆண்டுகளில் 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி பெற வழிவகை செய்வேன்.

    மேலும் அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரவும், இன்னும் பேருந்து கூடுதல் வசதிகள் செய்து தருவேன். விவசாயிகளின் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பாடுபடுவேன் என பேசினார்.

    தொடர்ந்து பாதர்பேட்டை, வைரிசெட்டிபாளையம், பா.மேட்டூர், பச்சபெருமாள்பட்டி, அழகாபுரி, எரகுடி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன் இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், அன்புதுரை, துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சபா ராஜேந்திரன், பாஸ்கர், பார்த்திபன், செந்தில், ராஜ்குமார், தமிழரசி மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

    • திமுக ஆட்சியைப் போல் தகுதியான பெண், தகுதியற்ற பெண் என பிரிக்கப்படாது.
    • போதைப்பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கமுதி தாலுகா பேரையூரில் பருத்திக்காட்டில் வேலை செய்த விவசாயிகளிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் பாக்குவெட்டி, பசும்பொன், கோட்டைமேடு, கமுதி பேரூராட்சி வளைய பூக்குளம், மண்டலமாணிக்கம், கிளாமரம், ராமசாமிப்பட்டி, நீராவி, கீழராமநதி, கே.எம்.கோட்டை, எம்.எம்.கோட்டை ஆகிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு 3 ஆயிரம் வழங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் போல் தகுதியான பெண், தகுதியற்ற பெண் என பிரிக்கப்படாது. அனைத்து மகளிருக்கும் 3 ஆயிரம் வழங்கப்படும். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நான் சாதாரண விவசாயி, எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். கடந்த தேர்தலில் பொய்களை அவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றவரை பார்த்திருக்கிறீர்களா? அடையாளம் தெரியுமா என பொதுமக்களிடமே கேட்டார். பார்த்ததில்லை எனவும், எங்கள் ஊர்பக்கமே வந்ததில்லை என்றும் கூறினார்கள். எனவே உங்கள் கோரிக்கைகள் நிறைவேற இரட்டை இலைக்கு வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    வேட்பாளருடன் ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் மணிகண்டன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வக்கில் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், முதுகுளத்தூர் பகுதி ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செந்தில்குமார், தேரிருவேலி கருப்பசாமி, கிடாத்திருக்கை சண்முகபாண்டி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தேமுதிக, புதிய தமிழகம் மருது சேனா உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாளை பெருமாள் புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.160 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிபட்டுள்ளன.

    இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் 4 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடி பணம் பிடிபட்டது.

    இந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது. இன்று 2-வது நாளாக சோதனை நீடிக்கிறது.

    சென்னையில் விருகம்பாக்கம், அடையாறு இந்திராநகர், திருவான்மியூர், அபிராமபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. இதில் விருகம்பாக்கத்தில் மட்டும் சோதனை முடிவடைந்துள்ளது. அங்கு 3 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    அடையாறு இந்திரா நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்டு வரும் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது. திருவான்மியூரில் ராமச்சந்திரன் என்ற தொழில் அதிபரின் வீடு, அபிராமபுரத்தில் ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.

    கோவையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருபவர் அவினாசி ரவி. இவரது அலுவலகம் அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பில் உள்ளது.

    நேற்று இவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை 7 அதிகாரிகள் தொடங்கினர். இன்று 2-வது நாளாக அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதேபோல ராம்நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் குமாரின் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையிலும், வந்தவாசி சாலையில் உள்ள நகைக்கடையிலும் வருமான வரித்துறை ஆணையாளர் சுப்பிரமணி தலைமையில் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நகைகள் ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேனியில் தங்கி பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து, பெரியகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்த அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 4 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் அவர்களது அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அவர்கள் வைத்திருந்த செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் எந்த ஒரு ஆவணங்களோ, பணமோ கைப்பற்றப்படவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்கு நேரி அருகே உள்ள விஜய நாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.

    தொடர்ந்து பாளை பெருமாள் புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

    • முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்.
    • தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது?

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.

    100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள பல்வேறு வேறுபாடுகள் களையப்படும். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நம்முடைய உழைப்பு நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிகமான சிறு தொழில்கள் அழிந்ததற்கும் ஜி.எஸ்.டி. காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. மறுசீராய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    கல்வியை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு சைனிக் ஸ்கூல், இந்தியாவினுடைய முக்கியமான பள்ளி. ராணுவத்திற்கு குழந்தைகளை தயாராக்க கூடிய அந்த பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி உள்ளது. அதை சார்ந்த அமைப்புகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அநீதியை செய்தார்கள்.

    இதை எல்லாம் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.

    அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.

    மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.

    முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிகமாக செய்ததாக கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் கொண்டு வரவில்லை. அறிவித்ததோடு நிற்கிறது. அவர்கள் தவறை அடையாளப்படுத்தும் வகையில் தான் செங்கலை தூக்கி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    அ.தி.மு.க. குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் வந்து போய் உள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று யோசிக்க வேண்டும். 2 கூட்டணியிலும் இல்லாதவர்கள் எப்படி பேசுவார்கள்?.

    பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது? ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயர்ந்துள்ளது?

    தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது? பல மடங்கு பட்டினி சாவு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×