என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
    • கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். தாய் இல்லாத சூழலில் தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 19 வயது சிறுமிக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் 19 மற்றும் 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சகோதரிகள் 2 பேரும் சாலையின் ஓரம் நின்றிருந்தனர். காதலர்கள் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சிறுமிகளை மிரட்டினர்.

    இதை பார்த்ததும் காதலர்கள் ஓடி வரவே அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களுடன் பைக்கில் வருமாறு கூறினர். பின்னர் அவர்கள் 4 பேரையும் தாமரைக்குளம் என்ற இடத்திற்கு இரவில் தங்க வைத்தனர். பின்னர் தங்கள் கூட்டாளியான மேலும் ஒருவரை அங்கு வரவழைத்தனர்.

    அங்கு காதலர்கள் 2 பேரையும் கட்டி போட்டுவிட்டு 2 சகோதரிகளையும் 4 வாலிபர்கள் மாறிமாறி பலாத்காரம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர். நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் நீங்கள் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    அதிகாலை வரை தங்கள் காம இச்சையை நிறைவேற்றிய 4 வாலிபர்களும் பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின் சிறுமிகள் இருவரும் எழுந்து கட்டப்பட்டிருந்த தங்கள் காதலர்களை விடுவித்தனர். பின்னர் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தனர்.


                                                                            கைதானவர்கள்

     

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பலாத்காரம் செய்த மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (வயது 21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சுள்ளான் என்ற பிரசன்னகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிரசன்னகுமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரசன்னகுமார் எப்போதும் செல்போன் பயன்படுத்தமாட்டாராம். தனது நெருக்கமான நண்பர்கள் சிலரின் செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்திருப்பாராம். அவசர தேவைக்கு மட்டும் யாரிடமாவது செல்போன் வாங்கி பேசுவார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வருமானத்திற்காக பல திருட்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வருவது இவர்களின் தொழிலாக உள்ளது.

    கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை தவிர மற்ற வீடியோக்களும் இருந்ததால் இவர்கள் இதேபோல வேறு யாரிடமாவது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் வடமாநிலங்களில் மட்டுமே இதுபோல கூட்டு பலாத்காரம், காதலர்களை கட்டிப் போட்டு 4 பேர் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது அதேபோல ஒரு சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
    • சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.

    அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் 7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.

    இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    • தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.
    • திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை தொடங்கினார்கள்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா இடையே ஷம்பு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரின் அஸ்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த விவசாயியின் அஸ்தி, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.

    பஞ்சாப்பை சேர்ந்த ரவீந்தர்சிங் தரப்பினர் கொண்டு வந்தனர். திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூரை சேர்ந்த விவசாய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.
    • கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது.

    மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ந்தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடுகிறது.

    அதனால் 9-ந்தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந் தேதிகளில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை இடையில் வருவதால், தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22, 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அடுத்த வாரத்தில் யுகாதி மற்றும் ரம்ஜான் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்கின்றனர்.

    அதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.

    தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12-ந்தேதி வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைத்து இருப்பதால் உற்சாகமாக உள்ளனர். சொந்த ஊர்களுக்கும், உறவினர் இல்லத்திற்கும் செல்ல இப்போதே பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

    ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன் கோடை ஸ்தலங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கும் பயணத்தை தொடங்குகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பது பின்னர் முடிவு செய்யப்படுகிறது.

    • தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு பணி ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு-பெருந்துறை சாலை பழையபாளையத்தில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர் அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு அரசு கட்டுமான திட்டங்களுக்கான டெண்டர்களை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் பழையபாளையம் கணபதி நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு மற்றும் அவரது கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு வரை நடந்த இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    இது குறித்த தகவலை கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக அவரது அலுவலகம் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் தான் முழு தகவல் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    • திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன.
    • கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வேலை நிமித்தமாக சென்னைக்கு வருபவர்கள் இந்த ரெயில்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து அவர்கள் ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்த பகுதிகளுக்கு சென்ட்ரலில் இருந்து பஸ்கள் இல்லாததால் பயணிகள் மின்சார ரெயில்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

    ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இதற்கு முன்பு இதுபோல பிரச்சனை ஏற்பட்டபோது ரெயில்வே மேலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புறநகர் விரைவு ரெயில்களை விரைவு வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புறநகர் மின்சார ரெயில் சேவை தாமதமாக காரணமான பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.

    • மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
    • நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர்.

    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது தேனி மாவட்டம். தற்போது மீண்டும் அவரது ஆசிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் இங்கு போட்டியிடுகிறார். தமிழகத்தில் போதை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தி.மு.க.வினரே இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வருவதுதான் கொடுமை.

    மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதனை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அதனை அடியோடு நிறுத்திவிட்டனர். தாலிக்கு தங்கம் வழங்காததால் பல பெண்களின் திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது 1 பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தால் அந்த தங்கம் பெண்களுக்கு கிடைத்திருக்கும. மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்குவதாக தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பெண்களை தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என அவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர். தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பதிவு கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்திவிட்டனர். விலைவாசி கடுமையாக உயர்ந்த பிறகு ரூ.1000 கொடுத்து என்ன பயன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணா பேருந்து நிலையம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகுராஜன் மனைவி லட்சுமி (வயது 53). இவர் கணவரை பிரிந்து 20 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வருகிறார்.

    லட்சுமி களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக வீட்டில் இருந்து தினமும் காலையில் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மற்றும் அரசு பேருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் சிவகங்கை நான்கு வழிச்சாலை சந்திப்பு வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோ அல்லது பஸ் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பிய லட்சுமி ஆட்டோவில் விக்ரம் மருத்துவமனை சந்திப்பு அருகே வந்து அங்கிருந்து மற்றொரு ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள பள்ளியில் வேலை செய்யும் இரண்டு ஆசிரியைகள் உள்ளிட்ட நான்கு பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

    மற்ற இரண்டு ஆசிரியர்களும் அவர்களது பள்ளி அருகே இறங்கிக் கொள்ள ஆட்டோவில் லட்சுமி மற்றும் அவருடன் பயணி ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவிற்கு டீசல் போடுவதாக லட்சுமியிடம் கூறிய ஆட்டோ டிரைவர் பெட்ரோல் நிலையம் செல்வதற்கு பதிலாக வேறொரு பாதையில் ஆட்டோவை ஓட்டியுள்ளார். ஏன் என்று கேட்ட லட்சுமியிடம் இது தான் குறுக்கு வழி என்று கூறிய ஆட்டோ டிரைவர் மறைவான காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் இருந்த இளைஞர் மற்றும் ஆட்டோ டிரைவரும் சேர்ந்து தலைமை ஆசிரியை லட்சுமியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்தனர். அவர் காதில் அணிந்திருந்த தோடு மாட்டலை கழட்டி தருமாறும் தராவிட்டால் காதை அறுத்து விடுவோம் என்று கூறியதாலும் உயிருக்கு பயந்த அவர் காது கழுத்தில் அணிந்திருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

    ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமி அங்கிருந்து தப்பி அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகைக்காக பட்டப்பகலில் தலைமை ஆசிரியை வெட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து பெரும்பாலும் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். சாலை விதிகளை சில ஆட்டோக்கள் மதிக்காமலும் சாலை விதிகளை மீறுவதாலும் அதிக நபர்களை ஆட்டோவில் ஏற்றி செல்வதாகவும் பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆட்டோவில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நடந்த சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

    • வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் இன்று அகற்றப்பட்டது.

    சென்னை:

    டெல்லியில் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்தஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், வீட்டிற்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நிலையில், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சீல் வைத்த வீட்டை அவரது குடும்பத்தினர் பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சீல் வைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை அவரது குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    டெல்லி சிறப்பு நீதி மன்றத்தின் உத்தரவினை அடுத்து சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் இன்று அகற்றப்பட்டது.

    ஜாபர் சாதிக் சகோதரர் சலீம் மற்றும் ஜாபர் சாதிக் மனைவி ஆகியோர் வீட்டை திறந்து உள்ளே சென்றனர்.

    • காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.

    காரைக்குடி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் தங்கள் கொள்கைகளுக்கு முரணான பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.

    நோய் நாடி நோய் முதல் நாடி என்பது வள்ளுவர் வாக்கு. அதற்கு ஏற்ப ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்வதற்கு பதிலாக செஸ் வரியை சீரமைத்தாலே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகளை வெகுவாக குறைக்கலாம்.

    மாநிலத்திலும் மத்தியிலும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைவது மிகவும் அபூர்வம். தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.

    ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

    சென்னை:

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. 

    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் புகழேந்தி உயர்ந்தார்.
    • புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

    1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

    1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

    ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்.

    ×