என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
- வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம்பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?
இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு கரூர் வந்தடைந்துள்ளது.
- நேரில் பார்த்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
பாஜக தேசிய தலைவர் ஹெமா மாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் 8 போர் கொண்ட குழுவை அமைத்து, கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். கூட்டல் நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன்படி 8 பேர் கொண்ட குழு இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தது. கரூர் சென்ற அவர்கள் விபத்தை நேரில் பார்த்தவர்களிடம், கூட்ட நெரிசல் நடைபெற்றது குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது ஒருவர் "ஆதர் அர்ஜுனா விஜயிடம் சென்று மக்கள் மயக்கம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார். அவர்கள் உடனடியாக தண்ணீர் பாட்டில்களை விசினர். உள்ளூர் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சாலையின் அகலம் 19 அடி. வாகனத்திற்கு 12 அடி தேவைப்பட்டது. அசாதாரண நிலை ஏற்பட்ட பிறகு, அவர் பேச்சை முடித்து விட்டு, கிளம்பி விட்டார். விஜய் 10 நிமிடங்கள் மட்டுமே அந்த இடத்தில் செலவிட்டார்" எனக் கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் "விஜய் பேச தொடங்கிய பிறகு 3 முதல் 4 நிமிடத்திற்குள் மக்கள் மயக்கம் அடையத் தொடங்கினர். அசாதாரண நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரத் தொடங்கியத. அதுவும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது.
நாங்கள் எல்லோரும் ஓட ஆரம்பித்தோம். எல்லாவற்றையும் சரி செய்ய 1 மணி நேரம் ஆனது. எங்கள் பக்கத்தில் இருந்து செல்லாத பலர் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் கூட்டத்தினரை மறுபக்கம் தள்ளாமல் பளத்தில் தள்ளினர்?" என்று கூறினார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.
- விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.
த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க நிர்வாகிகளான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, டி.எ.ஸ்.பி தரப்பில் த.வெ.க. நிர்வாகிகள் மீது அடுக்கக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை,
* முனியப்பன் கோவில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார், அவரை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும்.
* புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தியது.
* பிரசார வாகனம் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் போதும் என்றேன், ஆனால் ஆதவ் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்றார்.
* கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க நிர்வாகிகள் இருவரும் விஜய் வாகனத்தை முன்னே செல்ல விடாமல் தாமதப்படுத்தினர்.
* விஜய் வாகனம் ராங் ரூட்டில் சென்றது, நாங்கள் தடுத்தோம், ஆனால் 2-ம் கட்ட தலைவர்கள் பேருந்தை நிறுத்தவில்லை.
* கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்ததாகவும் தன்னை மீறி ராங் ரூட்டில் சென்றதாகவும் டி.எஸ்.பி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து, மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு த.வெ.க. சார்பில், சனிக்கிழமை சம்பள நாள் என்தால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்ததாக என தெரிவித்தனர்.
இதையடுத்து நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வாரவிடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்?
* அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?
* விஜயை பார்க்க 10ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி,
* எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.
* விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.
* குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்.
* அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு, இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இவ்வாறு நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
- கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
- ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது.
கோவை:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமமாலினி எம்.பி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் இன்று காலை கோவைக்கு விமானத்தில் வந்தனர். பிறகு அவர்கள் 10 காரில் கோவையில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
ஒரு காரில் ஹேமமாலினி எம்.பி அனுராக் தாக்கூர் எம்.பி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சென்று கொண்டு இருந்தது.
கோவை அருகே கே.ஜி.புதூர் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீர் என பிரேக் பிடித்ததால் மற்ற கார்களும் அடுத்தடுத்து நிற்கத் தொடங்கின. அப்போது ஹேமமாலினி இருந்த காரின் பின்னால் ஒரு கார் லேசாக மோதியது.
இதில் ஹேமமாலினி இருந்த கார் முன்னாள் நின்ற காரின் மீது மோதியது. இதனால் காரின் இரண்டு புறமும் சிறிது சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் மாற்று கார் ஏற்பாடு செய்து கரூர் புறப்பட்டு சென்றனர்.
- தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.
- விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகமான நெல் விளைச்சல் காரணமாகவும், இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகள் நேரடியாக அரசிடம் அவர்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1973-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 1996-ல் தமிழ்நாடு முழுமைக்குமாக பரவலாக்கப்பட்டது, தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.
ஒரு கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு மூப்பு படி மூட்டைகளை தான் எடை போட வேண்டும் என்கிற நிலையில், வியாபாரிகள் பணியாளர்கள் உதவியுடன் பதிவில் குளறுபடி செய்து வியாபாரிகள் மூட்டைகளை பணியாளர்கள் எடை போட்டுவிட்டு, விவசாயிகளின் மூட்டைகளை காலதாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே, பரவலாக நடைபெறுகின்ற இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தடுப்பதுடனும், விவசாயிகளின் ஆவணங்களை போலியாக வியாபாரிகளுக்காக கொடுக்கின்ற அலுவலர்கள் மீதும், வியாபாரிகளின் நெல்லை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர்.
- அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது.
திருச்சி:
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அனைவரும் அவரவருடைய கருத்துக்களை கூறுவர்.
நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு செய்தி வந்தது. இரவு 10 மணிக்கு நான் கரூர் சென்றேன். நம் கண் முன்னாடியே பிணவறை முன்பு பள்ளி மாணவர்கள் செத்து ஸ்ட்ரக்சரில் தூக்கி வரும் பொழுது எந்த மனிதனாக இருந்தாலும், எந்த தலைவனாக இருந்தாலும் இறப்பின் பொழுது மன வேதனை இருக்கத்தான் செய்யும்.
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நான் எந்த கருத்து சொன்னாலும் சரி இருக்காது. அவர் உடனடியாக களத்தில் சென்று கண்டுபிடித்து யார் மீது தவறு? என்று கூறினாலும் அது தவறுதான்.
தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர். அனைவருக்கும் மனிதாபம் என்று ஒன்று உள்ளது .உயிரிழப்புகளில் அவர்களுக்கும் மனவேதனை இருக்கும். அந்த விதத்தில் இது சார்ந்து ஆணையம் சார்பில் ஒரு நல்ல அறிக்கை வரும் பொழுது அது பற்றி பேசலாம்.
அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது. அன்புமணி ராமதாசிற்கு நேற்றே நான் பதில் கூறிவிட்டேன். உணர்ச்சியற்ற இதுபோல் சிலர் இருக்கும் காலகட்டத்தில் நாங்களும் பொது வாழ்வில் இருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்களும் இருக்கின்றோம்.
டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்ற கோர்ட்டு தீர்ப்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளி கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஆசிரியர்களை பாதுகாப்பது ஒரு புறம் இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியில் எந்த தடையும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஒற்றுமை மிக முக்கியம். ஒரு சிலர் பதவி உயர்வு சார்ந்த கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஒரு சிலர் வாழ்வாதாரமே போகக்கூடிய நிலை இந்த டெட் தீர்ப்பில் உள்ளது. டெட் தீர்ப்பில் முதலில் ஆசிரியர்களை காப்பாற்றுவோம். அதன் பிறகு இதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சருடன் கலந்து பேசி சரி செய்வோம்.
அரசாங்கம் அன்பு கரங்கள் திட்டத்தில் அயல் நாட்டிற்கு வேலை செல்வது வரை கல்வித் துறையில் பல முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வருகிறோம். மாணவர்கள் அறிவு சார்ந்த கருத்துக்களை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள்.
உங்களை நம்பி தான் வீடும், அரசும் உள்ளது. உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் நீங்கள் செல்லுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களது உயிர் மிக முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
* கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பா.ஜ.க. நேரடியாக தொடங்கி உள்ளது.
* கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.
* காங்கிரஸ் பேரியக்கமும் உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* கரூர் விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது.
* தமிழ்நாடு அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல் காந்தி நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
- வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று.
- அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது திமுக மற்றும் அரசாங்கம். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.
யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.
அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.
நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறாரக்ள்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
- பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
ராமநாதபுரம்:
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப் பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் காரணமாக முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வேறொரு தேதியில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டி ருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் நடைபெறவிருந்த ரோடு ஷோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (2-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் (3-ந்தேதி) காலை காரில் புறப்பட்டு ராமநாதபுரத்தையடுத்த பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு 55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார். விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
- அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6111 கனஅடியாக இருந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.60 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6111 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.69 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
- தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.
அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






