என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எனக்கு தெரியும். இதுக்கு என்ன சொன்னாலும் ஈடே ஆகாதுன்னு...
- கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.
கரூர் துயர சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட வலி மிகுந்த பிரச்சனையை நான் எதிர்கொண்டதே கிடையாது. மனசு முழுக்க வலி... வலி மட்டும்தான்.
இந்த சுற்றுப்பயணத்துல மக்கள் என்னை பார்க்க வராங்க. அதுக்கு ஒரே ஒரு காரணம்தான். அவங்க என்மேல வைச்சிருக்கிற அன்பும் பாசமும்... அந்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்பவுமே கடமை பட்டிருக்கேன்.
அதனாலதான் இந்த சுற்றுப்பயணத்துல மத்த எல்லா விஷயத்தையும் தாண்டி மக்களோட பாதுகாப்புல எந்த சமரசமும் செய்யக்கூடாதுனு மனசுல ரொம்ப ஆழமா எண்ணம் இருந்தது.
இந்த அரசியல் காரணங்கள் எல்லாத்தையும் தவிர்த்துட்டு, ஒதுக்கி வைச்சிட்டு... மக்களோட பாதுகாப்பை மட்டும் மனசுல வைச்சிகிட்டு அதுக்கான இடங்களை தேர்வு செய்றது... அனுமதி வாங்குவது... ஆனா நடக்க கூடாதது நடந்துருச்சு...
நானும் மனுஷன் தானே... அந்த நேரத்துல அத்தனை பேரு பாதிக்கப்ட்டுட்டு இருக்கும்போது... எப்படி அந்த ஊரை விட்டு என்னால கிளம்பி வரமுடியும்.
நா திரும்பி போகணும்னு (கரூருக்கு) இருந்தா... அதை காரணம் காட்டி அங்க வேற ஏதாவது அசம்பாவிதங்கள் நடத்துற கூடாதுனுதான் அதை நான் தவிர்த்து விட்டேன்.
இந்த நேரத்துல சொந்தங்களை இழந்து தவிக்கிற அத்தனை குடும்பங்களுக்கும் என்னோட ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு தெரியும். இதுக்கு என்ன சொன்னாலும் ஈடே ஆகாதுன்னு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவிலேயே குணமாகி வரணும்னு நான் வேண்டுகிறேன். கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
- கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர்.
- தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கரூர்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்களான ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட குழுவினர் இன்று மக்களைச் சந்தித்தனர்.
அப்போது பா.ஜ.க. குழுவினரிடம் பெண்மணி ஒருவர் கூறுகையில், எதிர்ப்பக்கம் யாரோ சிலர் கைகளில் கத்தியால் கிழித்தனர். நான் இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.
எனக்குத் தெரிந்த 4 பேர் கைகளில் கிழிபட்டு படுகாயம் அடைந்து ஜி.எச்.சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
ஸ்கூல் பிள்ளைகளில் சிலருக்கு கை உடைந்துள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
எதிர்ப்பக்கத்தில் தான் மரத்தில் ஏறி இருந்தனர். அதிலிருந்து சிலர் கீழே விழுந்தனர். இந்தப் பக்க மரத்திலும் ஏறி இருந்தனர்.
விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சிலர் ஏறி இருந்தனர் என தெரிவித்தார்.
- விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
- இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று ஆதவ் அர்ஜுனா பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்புவோர் மீது காவல்துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று வன்முறையை தூண்டும் வகையில் தெரிவித்திருந்தார்.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அதை நீக்கியும் உள்ளார்.
இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பலரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "என் தாயின் இழப்புக்கு பின், இந்த 41 பேரின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. இப்போதைக்கு நான் எதுவும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை, விரைவில் மக்களை சந்திப்போம்" என்று தெரிவித்தார்.
- தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது.
- வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் வாக்கில் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது. அக்டோபர் 12-ந் தேதி முதல் 14-ந்தேதி இடையே விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் 20-ந்தேதிக்குள் முழுமையாக விலகி விடும் என்றும் அதனை தொடர்ந்து வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியவுடன் அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பருவமழை தொடங்க இருப்பதால் சென்னையில் சாலைகள், மழைநீர் கால்வாய் பணிகள், கால்வாய் தூர்வாருதல், நீர்நிலைகளில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
- உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை விஜய் எடுக்க வேண்டும்.
- கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது.
சென்னை:
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் உண்மையை கண்டறிவதற்காக ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து உள்ளது. இந்த குழுவினர் இன்று ஆய்வை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய, முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி என்.டி.ஏ. சார்பிலான குழு பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் உண்மை அறியும் குழுவை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும்
இது குறித்த ஆதாரங்களை, முழுமையான தகவல் விவரங்களை அளித்து உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான முழு முயற்சியை நடிகர் விஜய் எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக வெற்றி கழகம் அரசியல் சதி உள்ளது என்று கூறியுள்ள குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்தும் பா.ஜ.க. முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். எனவே நடிகர் விஜய் பா.ஜ.க. எம்.பி.க்களை சந்தித்து உண்மை நிலவரங்களை அளிக்க வேண்டும்.
இந்த கோர சம்பவத்தில் 41 பேர் தன்னுடைய உயிரினும் மேலான கட்சித் தொண்டர்கள், உயிருக்கு உயிரான ரசிகர்கள், ஆதரவளித்த தமிழக மக்கள் உயிர் இழப்புக்கு காரணமான சம்பவத்தில் உண்மைகளை சொல்ல வேண்டியதும், உண்மைகளை விழிப்புணர்வுடன் வெளியிட வேண்டியதும் நடிகர் விஜய்யின் மிக முக்கிய பொறுப்பும் தலையாயக் கடமை ஆகும்.
எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேச நலனை, மக்கள் நலனை, தமிழக நலனை கருத்தில் கொண்டு தேசிய பா.ஜ.க. அமைத்துள்ள உண்மை அறியும் குழுவுடன் இணைந்து கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- தூதரகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கட்சித் தலைமை அலுவலகம் என முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சிங்கப்பூர், கொரியன், சுவீடன், ஆஸ்திரேலியன், ரஷ்யா உள்ளிட்ட 9 வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தூதரகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று சொல்வது ஒரு சதவீதம் கூட நம்ப முடியாதது.
- விஜய் கரூர் செல்லாமல் இருப்பதை நான் குற்றமாக கருதவில்லை.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக வரலாற்றில் நடைபெறாத கொடுந்துயர் பேரவலம் கரூரில் நடந்து உள்ளது. த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்கு பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாழ்கைக்கு வருபவர்கள் தங்களுக்காக வருகிற கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். விஜய் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் பொறுப்பு ஏற்க வேண்டியது த.வெ.க.வினர் தான். பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
த.வெ.க.வினர் திட்டமிட்டு தமிழக அரசு மீதும் மறைமுகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.
த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா புரட்சி வெடிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துவிட்டு, பின்னர் அழித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சொல்லாமல், த.வெ.க.வினர் மறைமுகமாக சகட்டு மேனிக்கு பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று சொல்வது ஒரு சதவீதம் கூட நம்ப முடியாதது. விஜய் வந்தபோது மூச்சுத்திணறல் காரணமாக பலர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு த.வெ.க.வினர் தான்.
கரூர் சம்பவத்தில் தடியடி நடத்தியதாக நான் எந்த தொலைகாட்சியிலும் பார்க்கவில்லை. தி.மு.க. அடுத்து ஆட்சிக்கு வரக்கூடாது என்று வெறிப்பிடித்தவர்கள் குறை சொல்கிறார்கள்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமான அடிப்படையில் சந்தித்து பொறுப்புடன் சென்றார்.
சகிக்க முடியாத பெருந்துயர் என்பதால் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பார்த்தார்.
விஜய் கரூர் செல்லாமல் இருப்பதை நான் குற்றமாக கருதவில்லை. அவர் பதற்றத்தில் சென்று இருக்கலாம்.
நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னால் காவல்துறை அனுமதிக்கும்.
கரூர் சம்பவத்தில் இருந்து விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். விஜய்யை விசாரிக்கலாம். கைது செய்யக்கூடாது. அது தேவையில்லாதது. அரசுக்கும் அந்த திட்டம் இல்லை என்று நினைகிறேன்.
எனக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தால் கரூர் செல்ல முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (01-10-2025), மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 02 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 03-ஆம் தேதி வாக்கில் காலை கரையை கடக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை.
- இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த குழுவினர் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து பேசினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களையும் சந்தித்து பேசி ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், என்.டி.ஏ. குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது ஹேமமாலினி எம்.பி. கூறியதாவது:
* பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை.
* விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர்.
* விஜய் பிரசாரத்திற்கு குறுகிய இடத்தை போலீசார் கொடுத்து இருக்கிறார்கள்.
* பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.
* கூட்ட நெரிசல் சம்பவத்தில் சந்தேகம் உள்ளது.
* இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.
* என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம் என்று கூறினார்.
அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,
* உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை.
* ஆளும் கட்சியும், அரசும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும்.
* த.வெ.க.வும் பதில் சொல்ல வேண்டும்.
* கரூர் துயர சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னையின் மையப் பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மிகப் பெரிய ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு உஸ்மான் சாலையையும், சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையை இணைக்கும் வகையிலும் 1¼ கிலோ மீட்டர் நீளத்துக்கு தி.நகர் பாலத்தை நீட்டித்து புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
அதாவது ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் ஆகும்.
இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்தில் இருந்து தியா கராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.
சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக்சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், ஆணையர் குமரகுருபரன், வினய், தமிழ்நாடு வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு,
தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.சு.மணி, எம்.எஸ்.பழனி, ஜெ.ஜானகிராமன், ராஜா அன்பழகன், தியாகராய நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பாண்டிபஜார் பாபா சுரேஷ், தி.நகர் கிழக்கு பகுதி பொருளாளர் ஜி.மோகன் ராஜ், வட்டச் செயலாளர் பி.மாரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வனிதாபுரம் துரை, இ.சஞ்சீவ் குமார்(எ) கார்த்தி, 133-வது வட்ட துணை செயலாளர் ஆர்.கலா ராஜா, என்.வெங்கடேசன், கனிமொழி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தேவாரத்தில் இருந்து போடிவரை விரிவாக்கம் செய்யப்பட்ட 18ம் கால்வாய் சேதமடைந்து 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.
- இலவசம் பஞ்சு மெத்தை, தலையணைகள் ஆகியவற்றிற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் வெவ்வேறு கருத்துகள் பலரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசியல் தேவையில்லை என்பதே எனது கருத்து. அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை அளிக்கும் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே முடிவில் உண்மை வெளிவரும் என நம்புவோம்
தேவாரத்தில் இருந்து போடிவரை விரிவாக்கம் செய்யப்பட்ட 18ம் கால்வாய் சேதமடைந்து 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மூலம் கடைமடை வரை நீர் வந்து விவசாயிகள் பயனடைந்தனர். தற்போது சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இலவசம் பஞ்சு மெத்தை, தலையணைகள் ஆகியவற்றிற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். போடியில் 48 பஞ்சு பேட்டைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 8 மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பியுள்ளவாகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என்றார்.
- அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
- விஜய் வருகிற 4-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார்.
சென்னை:
2026 தேர்தலை எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள விஜய் 3-ம் கட்டமாக கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்தார்.
அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருந்தார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தநிலையில் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகமயமாக்கியது.
மேலும் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகள் மீது ஜாமினில் வரமுடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் அடுத்த கட்டமாக நடைபெற இருக்கும் பிரசார திட்டங்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வரும் வரை அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைக்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் வருகிற 4-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.






